12 ஆம் வகுப்பு பாடநூல்கள் மே 10 முதல் பள்ளிகளில் கிடைக்கும். இது குறித்த வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை வருமாறு:
12 ஆம் வகுப்பு பாடநூல்கள் மே 10 முதல் பள்ளிகளுக்கு வழங்க தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் ஏற்பாடு செய்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 26 ஆம் தேதி 10 ஆம் வகுப்பு இலவசப் பாடநூல்கள் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டு 9 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான உடனே 10 ஆம் வகுப்புக்கான இலவச பாடநூல்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தமிழகமெங்கும் அனைத்து பள்ளிகளுக்கும் பாடநூல்கள் அனுப்பப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
தனியார் பள்ளிகளுக்கான பாடநூல்கள் மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர்கள் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டு பாடநூல்கள் பெற்றுச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி மாநிலம் முழுவதும் 93 சதவீத பாடநூல்கள் முழுமையாக எவ்வித சிரமுமின்றி வழங்கப்பட்டுவிட்டது. சுயநிதி பள்ளிகள் கோரிய பாடநூல்களும் வழங்கப்பட்டுள்ளது. பாடநூல்கள் தயார் நிலையில் இருந்தும் இதுவரை வராத பள்ளிகள் வந்து பெற்றுச் செல்லலாம். இதுவரை பாடநூல்கள் பெறாத மாணவர்கள் நலன் கருதி இம்மாதம் 7 ஆம் தேதி முதல் 10 ஆம் வகுப்பு பாடநூல்கள் மட்டும் சில்லரை விற்பனையாளர்கள் சென்னை திருவான்மியூர் கிடங்கு உட்பட 22 வட்டார அலுவலகங்களிலும் 5 சதவீத கழிவு நீங்கலாக நிகரத் தொகையை வங்கி
வரைவோலையாக செலுத்தி தேவையான பாடநூல்களை வட்டார அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம்.
முன்னர் அறிமுகப்படுத்திய முறைக்கு பள்ளிகள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளதால் 12 ஆம் வகுப்பு பாடநூல்களையும் அதேமுறையில் விநியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசு அறிவுரையின்படி மே 10-ந்தேதி முதல் 12 ஆம் வகுப்பு பாடநூல்களை வழங்க தமிழ் நாட்டுப் பாடநூல் கழகம் முடிவு செய்துள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான இலவசப் பாடநூல்கள் ஏற்கெனவே அச்சகங்களிலிருந்து நேரடியாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அவற்றை மே 10 ஆம் தேதி முதல் முதன்மை கல்வி அலுவலகர்கள் தங்கள் மாவட்டங்களிலுள்ள பள்ளிகளுக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள ஆணை வழங்கப்பட்டுள்ளது. இப்பாடநூல்கள் 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான உடன் தலைமை ஆசிரியர் மூலமாக மாணவர்களுக்கு கிடைக்கும்.
விற்பனை பாடநூல்களை பொறுத்த வரையில் மெட்ரிக்குலேஷன் மேல்நிலை பள்ளியில் (தனியார் பள்ளிகள்) பயிலும் மாணவர்களுக்கான பாடநூல்கள் மே 10 ஆம் தேதி முதல் சென்னையிலுள்ள தமிழ்நாட்டுப் பாடநூல் கழக தலைமை அலுவலகத்திலும், 22 வட்டார அலுவலகங்களிலும் விற்பனை
தொடங்கப்படவுள்ளது.
மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர்கள் தமிழ்நாட்டுப் பாடநூல் கழக வட்டார அலுவலர்களுடன் இணைந்து இப்பணியினை மேற்கொள்ளுமாறு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள் மே 10 ஆம் தேதி முதல் அவரவர்களுக்கு தொடர்புடைய மெட்ரிக் பள்ளி
ஆய்வாளர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு அவர்கள் ஒதுக்கும் நாட்களில் மற்றும் நேரத்தில் பாடநூல்களை அதற்கான தொகை வரைவோலையாக செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.
சென்னையில் அதிக அளவில் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் உள்ளதால் அனைத்துப் பள்ளிகளுக்கும் எந்த காலதாமதமும் இல்லாமல் உடனடியாக பாடநூல்கள் கிடைப்பதற்கு ஏதுவாக ஒரு பகுதியிலுள்ள சில பள்ளிகள் ஒருங்கிணைந்து பாடநூல் கிடங்கிலிருந்து பாடநூல்களை அவற்றில் ஒரு பள்ளிக்கு எடுத்துச் சென்று இதரப் பள்ளிகளுக்கு பிரித்து வழங்க ஆவன செயப்பட்டுள்ளது.
மே மாதம் 12.05.2012 மற்றும் 13.05.2012 ஆகிய சனி, ஞாயிறு இரண்டு நாட்களும் பாடநூல் கிடங்குகள் இயங்கும்.
தமிழ், ஆங்கிலம், கணிதம், வரலாறு, வேதியியல், இயற்பியல் உள்ளிட்ட 51 தலைப்புகளில் தமி மற்றும் ஆங்கில வழிகளில் 64 இலட்சம் விலையில்லா புத்தகங்களும் 16 இலட்சம் விற்பனை பாடநூல்களும் அச்சடிக்கப்பட்டுள்ளன. புத்தகங்களின் விலைப்பட்டியலை வட்டார அலுவலங்களில் பெற்றுக் கொள்ளலாம்.
பாடநூல்களுக்கான தொகையை மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் 9.5 சதவீத கழிவு போக நிகரத் தொகையை அந்தந்த வட்டார அலுவலகங்கள் அமைந்துள்ள ஊரில் மாற்றத்தக்கதாக வரைவோலை அளித்து பாடநூல்களை பெற்றுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
12 ஆம் வகுப்பு பாடநூல்கள் அனைத்தும் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் போதுமான அளவு அச்சிடப்பட்டுள்ளது. மேலும் 12 ஆம் வகுப்பு பாடநூல்கள் "http://www.textbookcorp.tn.nic.in" இணைய தளத்தில் மாணவர்களின் நலன் கருதி வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை,
தலைமைச் செயலகம், சென்னை. |