சஊதி அரபிய்யா - தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில், அதன் புதிய துணைத் தலைவராக சாளை ஜியாவுத்தீன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
எல்லாம்வல்ல அல்லாஹ்வின் நல்லருளால் எமது தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் 62ஆவது பொதுக்குழுக் கூட்டம், 04.05.2012 வெள்ளிக்கிழமையன்று பாலப்பா அஹ்மத் இல்லத்திலுள்ள நீண்ட உள்ளரங்கில் மக்ரிப் தொழுகைக்குப் பின் நடைபெற்றது.
உறுப்பினர் ஷாதுலீ இறைமறை ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். உறுப்பினர் கே.டி.பாதுல் அஸ்ஹப் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
தலைமையுரை:
அடுத்து, மன்றத் தலைவர் டாக்டர் இத்ரீஸ் தலைமையுரையாற்றினார். இதுநாள் வரையிலும் நற்பணி மன்றம் செவ்வனே நடந்தேற ஒன்றுபட்ட கருத்துகளுடன் உறுதுணையாய் நின்ற அனைத்து சகோதர்களையும் நெஞ்சார்ந்த நன்றியுடன் நினைவு கூர்வதாக அவர் தெரிவித்தார்.
ஆடம்பரமோ, ஆரவாரமோ இல்லாமல் இத்தனை காலம் இம்மன்றம் ஆற்றிய பணிகளையும் இன்றைய தேதியில் உலகளாவிய அளவில் நம் காயல் நற்பணி மன்றங்கள் உருவாவதற்கு ஒரு உந்துதலாகவும் முன்னோடியாகவும் விளங்கிய மாண்பினையும் விரிவாக எடுத்துரைத்தார்.
மேலும் இந்த மன்றம் ஆற்றி வரும் நற்பணிகளைக் கண்டு வியந்து, திருச்சியைச் சார்ந்த - இஸ்லாமிய உணர்வுகளும், சமுதாய விழிப்புணர்வும் கொண்ட பெருந்தகை அப்பாஸ் அவர்கள் மனம் மகிழ்ந்து, நம் மன்றத்திற்கு நன்கொடை வழங்கிய செய்தியினைப் பகிர்ந்து கொண்டார்.
இதுவரை மன்றத்தின் துணைத்தலைவராக இருந்து சிறந்த முறையில் நகர்நலப் பணிகளாற்றிய ஜனாப் எம்.ஐ.மெஹர் அலீ அவர்கள் தாயகம் திரும்பியதையடுத்து, புதிய துணைத்தலைவர் முறைப்படி தேர்ந்தெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவித்த அவர், புதிய துணைத்தலைவர் பெயரை உறுப்பினர் இம்தியாஸ் முன்மொழிவார் என்றும், உறுப்பினர்கள் அதனை ஆதரிக்கும்பட்சத்தில் தக்பீர் முழக்கத்துடன் அதனை வழிமொழியுமாறும் கேட்டுக்கொண்டு டாக்டர் இத்ரீஸ் தனதுரையை நிறைவு செய்தார்.
புதிய துணைத்தலைவர் தேர்வு:
அதனைத் தொடர்ந்து, செயற்குழு உறுப்பினர் இம்தியாஸ், புதிய துணைத்தலைவராக சாளை ஜியாவுத்தீன் அவர்களின் பெயரை முன்மொழிய, அனைத்து உறுப்பினர்களும், “அல்லாஹு அக்பர்” என்ற தக்பீர் முழக்கத்துடன் அதை வழிமொழிந்து, தமது ஆதரவை ஒருமனதாகத் தெரிவித்தனர்.
அனைத்து உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் - மன்றத்தின் புதிய துணைத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சகோதரர் சாளை ஜியாவுத்தீன் அவர்கள் இப்பொறுப்பிற்கு எந்தளவுக்கு பொருத்தமானவர் என்பது குறித்து அவர் விளக்கிப் பேசினார். பின்னர், புதிய துணைத்தலைவரை, மன்றத் தலைவர் டாக்டர் இத்ரீஸ் ஆரத்தழுவி வரவேற்றார்.
நூஹ் ஆலிம் வாழ்த்துரை:
பின்னர் மவ்லவீ நூஹ் ஆலிம் - புதிய துணைத்தலைவரை வாழ்த்தி வாழ்த்துரை வழங்கினார்.
நபி (ஸல்) அவர்கள் காலத்தில் தலைவர்கள் எப்படி தேர்ந்தெடுக்கப்பட்டர்கள் என்பது பற்றியும் அவர்கள் ஆற்றிய தொண்டுகள் பற்றியும், நாம் எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற அறிவுரைகளோடு, இறைமறையில் என்னென்ன நற்காரியங்களுக்கு எத்தனை எத்தனை நன்மைகள் மற்றும் ஏழை மக்களின் நலன் காப்போருக்கு இறைவன் அளிக்கும் எண்ணற்ற பரிசுகளும் பலன்களும் குறித்து அழகாகவும் தெளிவாகவும் அவர் உரை நிகழ்த்தியது நெஞ்சத்தில் நெகிழ்வையும் நினைவில் நிற்கும் படிப்பினையாகவும் திகழ்ந்தது.
இக்ராஃவின் புதிய தலைவருக்கு வாழ்த்து:
உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தின் இந்த ஆண்டிற்கான சுழற்சி முறை தலைவராக தேர்ந்தெடுக்கப்படவுள்ள தாய்லாந்து காயல் நல மன்றத்தின் (தக்வா) தலைவர் ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீன் அவர்களுக்கு தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் அனைத்து உறுப்பினர்களின் சார்பாக, மன்றத் தலைவர் டாக்டர் இத்ரீஸ் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
துணைத்தலைவர் ஏற்புரை:
பின்னர், மன்றத்தின் புதிய துணைத்தலைவர் சாளை ஜியாவுத்தீன் ஏற்புரையாற்றினார்.
தன்னை ஏகோபித்த ஆதரவுடன் ஒருமனதாக தேர்ந்தெடுத்த அனைத்து உறுப்பினர்களுக்கும் தனதுரையில் நன்றியைத் தெரிவித்துக்கொண்ட அவர், இப்பொறுப்பிற்கு தான் உண்மையுள்ளவனாகவும், அனைத்து நற்பணிகளிலும் ஒன்றிணைந்து உறுதுணையாகவும் இருந்து செயல்படுவதாக உறுதி கூறி அமர்ந்தார்.
மருத்துவ சந்தேகங்கள்:
அடுத்து நடைபெற்ற மருத்துவ கேள்வி பதில் நிகழ்ச்சியில் நம் மன்ற உறுப்பினர்களின் மருத்துவ சந்தேகங்கள் குறித்த கேள்விகளுக்கு தனக்கே உரிய நகைச்சுவை பாணியில் டாக்டர் இத்ரீஸ் விளக்கமளித்தார்.
புதிய உறுப்பினர்கள் அறிமுகம்:
பின்னர், மன்றத்தின் புதிய உறுப்பினர்கள் கூட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டனர்.
நகர்நலன் குறித்த உறுப்பினர்களின் கருத்துப் பரிமாற்றங்களுக்குப் பின், தேனீர் - சிறுகடியுடன் சுவையான கறிக்கஞ்சி அனைவருக்கும் பரிமாறப்பட்டது.
நன்றியுரை, துஆவுடன் கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது. எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே - அல்ஹம்துலில்லாஹ்! இக்கூட்டத்தில் மன்றத்தின் உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
இவ்வாறு தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
B.A.முத்துவாப்பா (புஹாரி)
செய்தித் தொடர்பாளர்,
காயல் நற்பணி மன்றம்,
தம்மாம், சஊதி அரபிய்யா. |