அடுத்த 10 ஆண்டுகளுக்குள் ஹஜ் பயணிகளுக்கான மானியத்தை படிப்படியாக குறைத்து முற்றிலும் நீக்க வேண்டும் என செவ்வாய்க்கிழமை (மே 9) மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் ஆணையிட்டது. நீதிபதிகள் அஃப்தாப் ஆலம், ரஞ்சனபிரகாஷ் தேசாய் ஆகியோரைக் கொண்ட அமர்வு தனது தீர்ப்பில் கூறியதாவது:
2011-ம் ஆண்டு ரூ.685 கோடி ஹஜ் மானியமாக வழங்கப்பட்டிருக்கிறது. குரான் படி பார்த்தால் கூட மானியம் வழங்கப்படக் கூடாது. இந்தத் தொகையை முஸ்லிம்களின் சமூக, கல்வி மேம்பாட்டுக்கு ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தியிருக்கலாம். இப்போது ஒரு ஹஜ் பயணிக்கு ரூ. 38 ஆயிரத்தை விமானப் பயணக் கட்டணமாக மத்திய அரசு தருகிறது. கடந்த ஆண்டு மட்டும் 1.25 லட்சம் முஸ்லிம்கள் ஹஜ் யாத்திரை மேற்கொண்டுள்ளனர்.
அடுத்த 10 ஆண்டுக் காலத்துக்குள் ஹஜ் மானியத்தை படிப்படியாக குறைத்து முற்றிலும் நீக்க வேண்டுமென மத்திய அரசுக்கு இந்த அமர்வு ஆணையிடுகிறது. இதற்கேற்றபடி இன்றிலிருந்தே மானியத் தொகையைக் குறைத்து 10 ஆண்டுகளுக்குள் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற மத்திய அரசு பாடுபட வேண்டும்.
ஹஜ் பயணத்துக்காக ஹஜ் கமிட்டிக்கு விண்ணப்பிக்கும் பெரும்பாலான முஸ்லிம்களுக்கு தங்கள் பயணத்துக்குப் பின்னாலிருக்கும் பொருளாதாரம் குறித்துத் தெரியாது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
ஹஜ் பயணிகளுடன் அரசுப் பிரதிநிதிகளை அனுப்புவதை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். ஹஜ் பெருநாளை முன்னிட்டு சவூதி அரேபியாவுடன் தங்கள் நல்லெண்ணத்தை காட்டும் இந்திய மக்களின் சிந்தனை பாராட்டுக்குரியது. ஆனால், அதேநேரத்தில் இத்தனை பேரை அங்கு அனுப்புவதன் மூலம் நோக்கம் நிறைவேறியதா என்பதைக் காணத் தவறி விட்டோம்.
எனவே, ஹஜ் நல்லெண்ண தூதுக் குழுவை அனுப்பும் வழக்கம் இத்துடன் நிறுத்தப்பட வேண்டும். சவூதி அரேபிய அரசுக்கு ஹஜ் நல்லெண்ணச் செய்தியைத் தெரிவிக்க ஒரு தலைவரையோ அல்லது துணைத் தலைவர் ஒருவரையோ அனுப்பினால் போதுமானது. ஆனால், இப்போது 27 பேர் அனுப்பப்பட்டுள்ளனர். இதில் ஆச்சரியம் என்னவென்றால், ஒரு குறிப்பிட்ட நபரே பல முறை நல்லெண்ண தூதுக் குழுவில் இடம்பெறுவதும் நிகழ்ந்துள்ளது.
இவ்வாறு உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.
தகவல்:
தினமணி
முஸ்லிம்கள் ஹஜ் பயணத்திற்கு அரசு மானியத்தை எதிர்பார்க்கக்கூடாது என்ற கருத்தை வலியுறுத்தி - காயல்பட்டணம்.காம் - டிசம்பர் 8, 2006 இல், The Subsidy for Haj Pilgrimage என்ற தலைப்பில் தலையங்கம் வெளியிட்டிருந்தது. அதனை காண இங்கு அழுத்தவும்.
|