காயல்பட்டினத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக நடத்தப்பட்டு வரும் பள்ளி துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளி. இப்பள்ளி துவங்கப்பட்டு 13 ஆண்டுகளை நிறைவு செய்து, 14ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதையொட்டி, 13ஆம் ஆண்டு விழா 30.04.2012 அன்று மாலை முதல் இரவு வரை துளிர் பள்ளி கேளரங்கில் நடைபெற்றது.
மாலை 05.00 மணிக்குத் துவங்கிய நிகழ்ச்சிக்கு, காயல்பட்டினம் நகரின் முன்னாள் பேரூராட்சி மன்றத் தலைவரும், துளிர் பள்ளியின் அறங்காவலருமான கே.எம்.இ.நாச்சி தம்பி தலைமை தாங்கினார். இவ்விழாவில், தூத்துக்குடி நிலா கடலுணவு நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத் துறை மேலாளர் எஸ்.ஜெயசீலன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
பின்னர் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில், துளிர் பள்ளியின் மாற்றுத்திறனாளி குழந்தைகள் - பாட்டு, நடனம், தாளம் அடித்தல், கண் தெரியா குழந்தைகளுக்கான ப்ரெய்ல் எழுத்துக்களை வாசித்தல், யோகாசனம் என பல்வேறு நிகழ்ச்சிகளை செய்து காண்பித்தனர். அவற்றை, மேடையில் முன்னிலை வகித்தோரும், சிறப்பு விருந்தினர்களும், பொதுமக்களும் ஆர்வத்துடன் கண்டனர்.
பின்னர், துளிர் பள்ளியின் நிறுவனர் வழக்குரைஞர் அஹ்மத், செயலாளர் ஹாஜி எம்.எல்.ஷேக்னா லெப்பை ஆகியோர் உரையாற்றினர்.
துளிர் பள்ளி கடந்து வந்த பாதை கல்லும், முள்ளும் அடங்கிய கரடு முரடான பாதை என்றும், அத்தனையையும் தாண்டி அது இறையருளால் திருப்தியுற இயங்கி வருவதாகவும் தெரிவித்ததுடன், இயலாநிலையிலுள்ள குழந்தைகளை இனியும் வீட்டிலேயே வைத்துக்கொண்டிராமல், அவர்களுக்காகவே நடத்தப்படும் இப்பள்ளியில் சேர்த்து இயன்றளவு அக்குழந்தைகள் தமது பணிகளைத் தாமே செய்ய பயிற்சியளிக்க முன்வருமாறு அவர்கள் தமதுரையில் கேட்டுக்கொண்டனர்.
பின்னர், இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டோருக்கு, துளிர் பள்ளி நிர்வாகம் சார்பில் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டதுடன், நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது.
துளிர் பள்ளியின் பெற்றோர் மன்றத் தலைவர் ஆயிஷா ஸாஹிப் தம்பி நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது.
விழா ஏற்பாடுகளை, பள்ளியின் அலுவலக மேலாளர் சித்தி ரம்ஸான் தலைமையில் குழுவினர் செய்திருந்தனர். |