பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் ஜூன் 4-ம் தேதி வெளியிடப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்குநர் வசுந்தரா தேவி அறிவித்துள்ளார்.
வழக்கமாக காலையில் வெளியிடப்படும் பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள், இந்த ஆண்டு பிற்பகல் 1.30 மணிக்கு வெளியிடப்படுகின்றன.
தமிழகம், புதுச்சேரியில் மொத்தம் 11.68 லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதியிருந்தனர். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஏப்ரல் 4-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை 3,033 மையங்களில் நடந்தன. தேர்வு எழுதிய மாணவர்களில் 10 லட்சத்து 84 ஆயிரத்து 525 பேர் பள்ளிகள் மூலம் எழுதினர். நேரடி தனித் தேர்வர்களாக 19 ஆயிரத்து 574 பேரும், பழைய பாடத் திட்டத்தின் கீழ் 64 ஆயிரத்து 777 பேரும் தேர்வுகளை எழுதினர்.
இந்தத் தேர்வுகள் முடிந்ததும் விடைத்தாள்கள் திருத்தும் பணி 66 மையங்களில் ஏப்ரல் 25-ம் தேதி தொடங்கியது. 3 வாரங்கள் நடந்த இந்தப் பணிகள் வெள்ளிக்கிழமை (மே 11) நிறைவடைந்தன.
இதையடுத்து மாவட்டங்களில் இருந்து மதிப்பெண் விவரங்கள் பெறப்பட்டு கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படும். பின்னர், விவரங்கள் இரண்டு முறைக்கு மேல் சரிபார்க்கப்பட்டு, மதிப்பெண் சான்றிதழ்களில் பதிவு செய்யப்படும்.
இந்தப் பணிகள் முடிய 3 வாரங்களுக்கு மேல் ஆகும் என்று தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆண்டு மாணவர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு மே 27-ம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. இந்த ஆண்டு தேர்வுகள் சற்று தாமதமாகத் தொடங்கியதால், முடிவுகளும் தாமதமாக வெளியிடப்படுகின்றன.
தகவல்:
தினமணி |