காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க நிர்வாகத்தின் சார்பில், ஆண்டுதோறும் மே மாதத்தில், “மவ்லானா அபுல்கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பை”க்கான அகில இந்திய கால்பந்து போட்டி என்ற பெயரில் கால்பந்து சுற்றுப்போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டு போட்டிகள் மே மாதம் 09ஆம் தேதியன்று துவங்கி, 27ஆம் தேதி நிறைவுறுகிறது.
14.05.2012 அன்று (நேற்று) நடைபெற்ற போட்டியில், காரியாப்பட்டி சேது கால்பந்துக் கழக அணியும், திருவனந்தபுரம் - ஸ்டேட் பாங்க் ஆஃப் திருவாங்கூர் அணியும் மோதின.
திருவனந்தபுரம் அணி வீரர் ஷெரீஃப், ஆட்டத்தின் 35, 40, 46ஆவது நிமிடங்களில் அடுத்தடுத்து மூன்று கோல்களை அடித்து, ஹாட்ரிக் சாதனை புரிந்தார். ஆட்டத்தின் 80ஆவது நிமிடத்தில் அதே அணியின் பாலு என்ற வீரர் ஒரு கோல் அடித்து, அணியின் கோல் கணக்கை 4 ஆக்கினார்.
மறுமுனையில் காரியாப்பட்டி அணி கோல் எதுவும் அடிக்காததால், 4-0 என்ற கோல் கணக்கில் திருவனந்தபுரம் - ஸ்டேட் பாங்க் ஆஃப் திருவாங்கூர் அணி வெற்றி பெற்று, 16.05.2012 அன்று நடைபெறும் 2ஆவது காலிறுதிப்போட்டியில் விளையாட தகுதிபெற்றுள்ளது.
நேற்றைய ஆட்டத்தின்போது ஏற்கனவே எச்சரிக்கப்பட்ட நிலையில் மீண்டும் தவறான ஆட்டம் ஆடிய காரணத்திற்காக, திருவனந்தபுரம் அணி வீரர் செல்வம் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு, ஆட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.
நேற்று நடைபெற்ற போட்டியை, நகரின் அனைத்துப் பகுதிகளைச் சார்ந்த கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் கண்டுகளித்தனர்.
இன்று, சென்னையைச் சார்ந்த தமிழ்நாடு பொலிஸ் அணியும், கேரள மாநிலம் பாலக்காட்டைச் சார்ந்த பாலக்காடு பொலிஸ் அணியும் களம் காணவுள்ளன. |