தமிழக அரசின் IUDM சிறப்பு திட்டத்தின் கீழ் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு என காயல்பட்டின நகராட்சிக்கு - 50 லட்ச ரூபாய் - கடந்த நவம்பர்
மாதம் ஒதுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து - டிசம்பர் மாதம் 30 ம் தேதி - காயல்பட்டினம் நகர்மன்றத்தில் நடந்த மாதாந்திர சாதாரண கூட்டத்தில் -
ஒதுக்கப்பட்ட நிதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளுக்கு அங்கீகாரமும் வழங்கப்பட்டது.
அதன்படி கீழ்க்காணும் பொருட்கள் கொள்முதல் செய்ய - நகர்மன்றம் மூலம் - அனுமதியும் வழங்கப்பட்டது.
1. டம்பர் பிளேசர் வாகனம் 1 எண்ணம் வாங்குதல் - ரூ.8,50,000
2. டம்பர் பிளேசர் தொட்டி 45 எண்ணம் வாங்குதல் - ரூ.24,75,000
3. புஷ்காட் 48 எண்ணம் வாங்குதல் - ரூ.7,08,000
4. டம்பர் பிளேசர் வாகனம் பொருத்த இகாமட் வாகனம் 1 எண்ணம் வாங்குதல் - ரூ.9,67,000
மொத்தம் ரூ.50,00,000
10 லட்சத்திற்கு மேலான மதிப்பில் உள்ள டெண்டர்கள் குறித்த விபரங்கள் - 15 தினங்களுக்கு முன்னர், மாநில அளவிலான இரு நாளிதழ்களில் -
விளம்பரமாக வெளியிடப்படவேண்டும் என்ற விதிமுறையினையும், 10 லட்சத்திற்கு மேலான மதிப்பில் கொள்முதல் செய்யப்படும் பொருட்கள்
ஈ-டெண்டர் மூலமே கொள்முதல் செய்யப்பட வேண்டும் என்ற விதிமுறையினையும் கடைபிடிக்காமல் - மார்ச் மாத இறுதியில், காயல்பட்டினம்
நகராட்சி மேலே குறிப்பிடப்பட்டுள்ள பொருட்களுக்கான டெண்டர் அறிவிப்பு வெளியிட்டது. அந்த அறிவிப்பில்
- ஏப்ரல் 10 - இறுதி நாள் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்த டெண்டர் அறிவிப்பில் மேலே குறிப்பிடப்பட்ட 4 பொருட்களில், 3 பொருட்கள் மட்டுமே இணைக்கப்பட்டு இருந்தது. சுமார் 9.5 லட்ச
மதிப்பிலான டம்பர் பிளேசர் வாகனம் பொருத்த இகாமட் வாகனம் 1 எண்ணம் வாங்குதல் குறித்த டெண்டர் வெளியிடப்படவில்லை.
ஏப்ரல் 2 அன்று - காயல்பட்டினம் நகராட்சியில் தொடர்ந்து மீறப்படும் டெண்டர்கள் குறித்த விதிமுறைகள்!
என்ற தலைப்பில் - காயல்பட்டணம்.காம் செய்தி வெளியிட்டிருந்தது. அதில் இந்த டெண்டர் அறிவிப்பில் நடந்துள்ள விதிமீறல்கள்
விளக்கப்பட்டிருந்தன.
இதற்கிடையே - டெண்டர் திறக்கப்பட (ஏப்ரல் 10) ஒரு வாரம் இருக்கும் காலகட்டத்தில் - ஏப்ரல் 3 - அன்று
தினத்தந்தி நாளிதழின் திருநெல்வேலி பதிப்பில் டெண்டர் குறித்த விளம்பரம் வெளியிடப்பட்டிருந்தது. இந்த டெண்டரை பொறுத்தவரை, விதிகள்படி -
இரு தமிழ் நாளிதழ்களில், தமிழகம் முழுவதுமான பதிப்பில், 15 தினங்களுக்கு முன்னர், விளம்பரம் வெளியிட்டிருக்கவேண்டும்.
அந்த விளம்பரத்தில் - இந்த டெண்டர் குறித்த விபரம், தமிழக அரசின் ஈ-டெண்டர் இணையதளமான - https://tntenders.gov.in - யிலும்
பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்ற பொய்யான தகவலும் கொடுக்கப்பட்டிருந்தது.
இந்த விளம்பரம் வெளிவந்த நான்கு நாட்கள் கழித்து - தவிர்க்கமுடியாத நிர்வாக காரணங்களுக்காக, இந்த டெண்டர் - மே 3 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக விளம்பரம் ஏப்ரல் 7 அன்றும், புதிய தேதியான மே 3 என்ற அறிவிப்புடன் - மாநில
அளவிலான - புதிய விளம்பரம், ஏப்ரல் 8 அன்றும் வெளியிடப்பட்டது. அந்த விளம்பரத்திலும் - இந்த டெண்டர் குறித்த விபரம், தமிழக அரசின் ஈ-டெண்டர் இணையதளமான - https://tntenders.gov.in - யிலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்ற பொய்யான தகவலும் கொடுக்கப்பட்டிருந்தது.
டெண்டர் திறக்கப்படவேண்டிய மே 3 அன்று - மாநில அளவிலான இரண்டு நாளிதழ்களில் - நிர்வாக
காரணத்திற்காக இந்த டெண்டர், மே 23 க்கு மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
டெண்டர் நிறைவடைய (மே 23) இன்னும் ஒரு வாரம் இருக்கும் பட்சத்தில் - இதுவரை தமிழக அரசின் ஈ-டெண்டர் இணையதளத்தில் இந்த டெண்டர் வெளியிடப்படவில்லை. அது மட்டும் அன்றி - நகராட்சி நிர்வாகத்துறையின் டெண்டர் இணையதளத்தில் இருந்தும் இந்த டெண்டர் விபரங்கள் - மே 3 அன்றே எடுக்கப்பட்டு, மீண்டும் இதுவரை பதிவேற்றம் செய்யப்படவில்லை.
இந்த திட்ட விசயத்தில் மற்றொரு நிகழ்வும் அரங்கேறி உள்ளது. IUDM சிறப்பு திட்டத்தின் கீழ் நகராட்சி கொள்முதல் செய்யவேண்டிய 4 பொருட்களில்
- 3 பொருட்களுக்கு மட்டுமே டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டது. 9 லட்சத்து, 67 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான டம்பர் பிளேசர் வாகனம் பொருத்த
இகாமட் வாகனம் 1 எண்ணம் - பொருளுக்கு எந்த டெண்டர் அறிவிப்பும் வெளியிடப்படாமல், நகர்மன்றத்தின் முன் அனுமதியும் பெறப்படாமல் -
நிறுவனம் ஒன்றிற்கு கடந்த மாதம் காசோலை வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து - ஏப்ரல் 27 அன்று நடந்த நகர்மன்ற கூட்டத்திலும், நகர்மன்றத்
தலைவரால் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இந்த டெண்டர் நிகழ்வுகள் பல கேள்விகளை எழுப்புகிறது.
<> முறையான விதிமுறைகளை பின்பற்றாமல், டெண்டர் அறிவிப்புகள் வெளியிட்டு, அந்த டெண்டர் பின்னர் பல முறை விளம்பரங்கள் வெளியிட்டு
-தள்ளிப்போடப்படுவதால் - நகராட்சிக்கு ஏற்படும் இழப்புக்கு யார் பொறுப்பு?
<> காயல்பட்டினம் நகராட்சிக்கு - டெண்டர் பலமுறை ஒத்திவைக்கப்பட்டு, பல நாட்கள் கால அவகாசம் இருந்தும் - ஈ-டெண்டர் வெளியிடுவதில்
ஏன் அலர்ஜி? இந்த டெண்டர் அறிவிப்பு வெறும் கண்துடைப்பா?
<> 9.67 லட்சம் மதிப்பிலான டம்பர் பிளேசர் வாகனம் பொருத்த இகாமட் வாகனம் வாங்க ஏன் டெண்டர் வெளியிடப்படவில்லை? அதற்குரிய
நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு, காசோலை வழங்குவதற்கு முன் - ஏன் நகர்மன்ற அனுமதி பெறப்படவில்லை?
முந்தைய ஆண்டுகளில் - காயல்பட்டினம் நகராட்சியை - சில அதிகாரிகளும், சில உறுப்பினர்களும் - தனியார் வங்கி போன்று பயன்படுத்தி வந்த சூழல் நிலவியது. அதே சூழல் - மீண்டும் காயல்பட்டினம் நகராட்சியில் திரும்பாது இருக்க - உயர் அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு, இந்த டெண்டர் குறித்து கடந்த சில மாதங்களாக நடைபெறும் நிகழ்வுகளை முழுமையாக விசாரிக்கவேண்டும். |