காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க நிர்வாகத்தின் சார்பில், ஆண்டுதோறும் மே மாதத்தில், “மவ்லானா அபுல்கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பை”க்கான அகில இந்திய கால்பந்து போட்டி என்ற பெயரில் கால்பந்து சுற்றுப்போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டு போட்டிகள் மே மாதம் 09ஆம் தேதியன்று துவங்கி, 27ஆம் தேதி நிறைவுறுகிறது.
17.05.2012 அன்று (இன்று) நடைபெற்ற போட்டியில், திண்டுக்கல் மாவட்ட கால்பந்துக் கழக அணியும், திருநெல்வேலி ப்ரெஸிடென்ட் லெவன் அணியும் களம் கண்டன.
ஆட்டம் சுமாராகவே இருந்தது. ஆட்டம் துவங்கிய 28ஆவது நிமிடத்தில், திருநெல்வேலி அணியின் மோசஸ் ஒரு கோலும், 46ஆவது நிமிடத்தில் சகாயம் ஒரு கோலும் அடித்து, தமதணியின் கோல் கணக்கை இரண்டாக்கினர்.
மறுமுனையில் திண்டுக்கல் அணி கோல் எதுவும் அடிக்காததால், திருநெல்வேலி ப்ரெஸிடென்ட் லெவன் அணி 2-0 என்ற கோல் கணக்கில், திண்டுக்கல் மாவட்ட கால்பந்துக் கழக அணியை வென்றது.
நாளை நடைபெறவுள்ள போட்டியில், இந்த அணி - காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கம் அணியுடன் மோதவுள்ளது.
நேற்றைய ஆட்டத்தில், காயல்பட்டினம் காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் (கே.எஸ்.ஸி.) செயலாளரும், தூத்துக்குடி மாவட்ட கால்பந்துக் கழக செயற்குழு உறுப்பினருமான பேராசிரியர் சதக்கு தம்பி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அவருக்கு ஈரணி வீரர்களும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
இன்று நடைபெற்ற போட்டியை, நகரின் அனைத்துப் பகுதிகளைச் சார்ந்த கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் கண்டுகளித்தனர்.
|