வீட்டுத் தோட்டம் அமைப்பது குறித்து பாளையங்கோட்டையில் நடைபெற்ற பயிற்சி வகுப்பில், காயல்பட்டினத்தைச் சார்ந்த ஏராளமான பெண்கள் உட்பட 20 காயலர்கள் பங்கேற்றனர். விபரம் பின்வருமாறு:-
காயல்பட்டினத்தில், இதுவரை இருந்து வந்த தோட்டங்கள் - புதிதாக வீடு கட்டுவதாகக் கூறி கொஞ்சங்கொஞ்சமாக அழித்து வரப்படுவது குறித்து வேதனை தெரிவித்தும், குறைந்தபட்சம் அவரவர் வீட்டு மாடிகளிலாவது காய்கறித் தோட்டங்களை அமைப்பது குறித்தும், பாளையங்கோட்டை வேளாண்மை உதவி மையத்தில் இதற்கென நடத்தப்பட்டு வரும் பயிற்சி வகுப்பு குறித்தும் தகவல்களை உள்ளடக்கி காயல்பட்டணம்.காம் எழுத்து மேடையில், “பச்சைத் தலையும், காங்கிரீட் வழுக்கையும்” எனும் தலைப்பில், எழுத்தாளர் சாளை பஷீர் ஆரிஃப் கட்டுரை எழுதியிருந்தார்.
அக்கட்டுரைக்கு பின்னூட்டமளித்திருந்த வாசகர்கள் பலர், பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டால் பங்கேற்க ஆர்வமுள்ளதாகவும், அனுசரணையளிப்பதாகவும் கருத்து தெரிவித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து, பயிற்சி முகாமுக்கான ஒருங்கிணைப்புப் பணிகளை எழுத்தாளர் சாளை பஷீர் ஆரிஃப் மேற்கொண்டார்.
ஒரு பயிற்சி வகுப்பில் 18 பேர் மட்டுமே பங்கேற்கவியலும் என்ற நியதிப்படி, துவக்கமாக விருப்பம் தெரிவித்த 12 பெண்கள் உள்ளிட்ட 18 காயலர்கள், 17.05.2012 அன்று காலை 07.30 மணியளவில், சிறப்பு வாகனம் மூலம் காயல்பட்டினத்திலிருந்து பாளைங்கோட்டைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
வீட்டுத் தோட்டம் அமைப்பது குறித்த பயிற்சி வகுப்பு, பாளையங்கோட்டை வ.உ.சி. விளையாட்டரங்கம் எதிரிலுள்ள வேளாண்மை உதவி மைய வளாகத்தில், அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 03.00 மணி வரை நடைபெற்றது.
இவ்வகுப்பில், வீட்டுத் தோட்டம் அமைப்பது குறித்து கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரியின் தோட்டக்கலை பேராசிரியர் முனைவர் ப.நயினார் விளக்கமளித்தார்.
பெரும்பாலும், தோட்டக்கலையில் ஆர்வமுள்ளவர்கள் மிகவும் அரிதாகவே இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்வர் என்று தெரிவித்த அவர், காயல்பட்டினம் என்ற ஒரே ஊரிலிருந்து - செலவினங்களைக் கருத்திற்கொள்ளாமல் - தோட்டக்கலையில் ஆர்வம் கொண்டு இத்தனை பேர் வருகை தந்திருப்பது குறித்து வியப்பும், பாராட்டும் தெரிவித்தார்.
பின்னர், சொந்தத் தேவைக்காக வீட்டு காலியிடங்களிலும், மாடிகளிலும் காய்கறித் தோட்டங்களை அமைப்பது குறித்து அவர் விளக்கிப் பேசினார்.
*** என்னென்ன காய்கறிகளில் என்னென்ன சத்துக்கள் உள்ளன...?
*** எந்தெந்த காய்கறிகளை எந்தெந்த நேரத்தில் பயிர் செய்யலாம்...?
*** வீட்டுக் காய்கறித் தோட்டம் அமைப்பதால் விளையும் நன்மைகள்...
*** காய்கறிச் செடிகள் வளர்ப்பு முறை...
உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கி அவர் பயிற்சியளித்தார்.
மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு, பயிற்சி வகுப்பு நடைபெற்ற வேளாண்மை உதவி மைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஊட்டச் சத்து காய்கறித் தோட்டத்தை - பயிற்சியில் பங்கேற்றோருக்கு நேரடியாகக் காண்பித்த அவர், மரங்களை நடும் முறை, நாற்றங்கால் முறை, தண்ணீர் தெளிக்கும் முறை, பயிர் செய்யும் முறை, பறிப்பு முறை உள்ளிட்டவற்றை செய்முறையில் விளக்கினார்.
மதியம் 02.30 மணிக்கு மீண்டும் துவங்கிய பயிற்சி வகுப்பில், கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரியின் பயிர் நோயியல் துறை இணைப் பேராசிரியர் கண்ணன், பயிர்களுக்கு ரசாயன பூச்சி மருந்து தெளித்தல், இயற்கை முறையில் மருந்து தெளித்தல் குறித்து விளக்கினார்.
பயிற்சி வகுப்பு நிறைவுற்ற பின், மாலை 04.30 மணியளவில் காயலர்கள் தமதில்லம் திரும்பினர். பயிற்சி வகுப்பில் பங்கேற்பதற்காகவும், இதர செலவினங்களுக்காகவும் ஒரு பங்கேற்பாளரிடம் ரூ.200 மட்டும் கட்டணமாகப் பெறப்பட்டது.
வாகன வசதி மற்றும் இதர செலவினங்களுக்கு, தாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வா) சார்பில் அதன் செயலாளர் ஹாஜி எம்.எஸ்.செய்யித் முஹம்மத் (கரூர் ட்ரேடர்ஸ்) அனுசரணையளித்திருந்தார்.
பயிற்சி வகுப்பிற்கான பயண ஏற்பாடுகளை, ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூது தலைமையில், எழுத்தாளர் சாளை பஷீர் ஆரிஃப், கே.எம்.டி.சுலைமான், ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ, எஸ்.கே.ஸாலிஹ் ஆகியோர் செய்திருந்தனர்.
|