காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க நிர்வாகத்தின் சார்பில், ஆண்டுதோறும் மே மாதத்தில், “மவ்லானா அபுல்கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பை”க்கான அகில இந்திய கால்பந்து போட்டி என்ற பெயரில் கால்பந்து சுற்றுப்போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டு போட்டிகள் மே மாதம் 09ஆம் தேதியன்று துவங்கி, 27ஆம் தேதி நிறைவுறுகிறது.
18.05.2012 அன்று (இன்று) நடைபெற்ற போட்டியில், திருநெல்வேலி ப்ரெஸிடென்ட் லெவன் அணியும், காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க அணியும் களம் கண்டன.
இந்தியாவின் தலைசிறந்த அணிகளுக்காக கால்பந்து விளையாடி வரும் காயல்பட்டினத்தைச் சார்ந்த வீரர் காழி அலாவுத்தீன் காயல்பட்டினம் அணிக்கு பயிற்சியாளராக உள்ளார்.
துவக்கம் முதலே ஆட்டம் விறுவிறுப்பாக இருந்தது. இரு அணிகளும் சம பலத்தில் ஆடியபோதிலும், மண்ணின் மைந்தர்கள் விளையாடியதால் - ரசிகர்களின் ஒட்டுமொத்த ஆதரவுக்குரல் காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க அணியை உற்சாகப்படுத்தியது.
ஆட்டத்தின் முதல் பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இரண்டாம் பாதியில் ஆட்டம் முடிவதற்கு சில நிமிடங்கள் முன்பாக - 78ஆவது நிமிடத்தில் திருநெல்வேலி அணி வீரர் கோல் எல்லைக்குள் பந்தை கையால் தொட்டுவிட்டதால், நடுவர் பெனாலிட்டி கிக் வாய்ப்பை காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க அணிக்கு வழங்கினார். அந்த வாய்ப்பை அற்புதமாகப் பயன்படுத்தி, காயல்பட்டினம் வீரர் ஜமால் ஒரு கோல் அடித்தார்.
பின்னர் ஆட்டம் முடியும் வரை ஈரணிகளும் கோல் எதுவும் அடிக்காததால், காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க அணி, 1-0 என்ற கோல் கணக்கில் திருநெல்வேலி ப்ரெஸிடெண்ட் லெவன் அணியை வென்று, காலிறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இன்றைய ஆட்டத்தில், காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியின் தலைவர் டாக்டர் முஹம்மத் லெப்பை சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அவருக்கு, சுற்றுப்போட்டிக்குழுவினர் சால்வை அணிவித்து கவுரவித்ததோடு, ஈரணி வீரர்களையும் அறிமுகம் செய்து வைத்தனர்.
நாளை நடைபெறும் போட்டியில், யூத் லெவன் பெங்களூரு அணியும், மதுரை மாவட்ட கால்பந்துக் கழக அணியுடன் மோதவுள்ளன.
இன்றைய போட்டி அசைபட நேரலை செய்யப்பட்டது. காயல்பட்டணம்.காம் வலைதளத்தில் ஐக்கிய விளையாட்டு சங்கத்தின்- மவ்லானா அபுல்கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பை கால்பந்துப் போட்டிக்கான சிறப்புப் பக்கத்தில் உள்ள “நேரடி ஒளிபரப்பு” என்ற இணைப்பில் இந்நேரலையைக் காண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ஐக்கிய விளையாட்டு சங்கத்தின் சார்பில் யூனுஸ் முஸ்தஃபா கணினியை இயக்க, எம்.டி.ஹபீப் கேமரா மேனாக செயல்பட்டார்.
இன்று நடைபெற்ற போட்டியை, நகரின் அனைத்துப் பகுதிகளைச் சார்ந்த கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் கண்டுகளித்தனர்.
படங்களில் உதவி:
யூனுஸ் முஸ்தஃபா
மற்றும்
புகாரி ஷரீஃப்.
[செய்தியில் சிறு திருத்தம் செய்யப்பட்டது @ 06:33/19.05.2012] |