காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க நிர்வாகத்தின் சார்பில், ஆண்டுதோறும் மே மாதத்தில், “மவ்லானா அபுல்கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பை”க்கான அகில இந்திய கால்பந்து போட்டி என்ற பெயரில் கால்பந்து சுற்றுப்போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டு போட்டிகள் மே மாதம் 09ஆம் தேதியன்று துவங்கி, 27ஆம் தேதி நிறைவுறுகிறது.
19.05.2012 அன்று (இன்று) நடைபெற்ற போட்டியில், மதுரை மாவட்ட கால்பந்துக் கழக அணியும், பெங்களூரு யூத் லெவன் அணியும் மோதின.
இன்றைய ஆட்டத்தில் துவக்கம் முதலே பெங்களூரு அணியின் ஆதிக்கத்தில் பந்து இருந்தது. அந்த அணியின், அரவிந்த் (சீனியர்), ரினாஸ் ஆகியோர் ஆட்டத்தில் முதற்பாதியிலும், அரவிந்த் (ஜூனியர்), ரினாஸ் ஆகியோர் இரண்டாவது பாதியிலும் கோல் அடித்தனர். மதுரை அணி கோல் எதுவும் அடிக்காததால், 4-0 என்ற கோல் கணக்கில் பெங்களூ அணி வெற்றிபெற்று காலிறுதிக்குள் நுழைந்தது.
இந்த அணி, நேற்று நடைபெற்ற போட்டியில் வென்று காலிறுதிக்குள் நுழைந்த காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க அணியை எதிர்த்து காலிறுதிப் போட்டியில் நாளை களம் காணவுள்ளது.
இன்றைய போட்டியின் சிறப்பு விருந்தினராக, மஹாராஷ்டிர மாநிலம் தாராப்பூர் அரிமா சங்கத்தின் தலைவரும், பாமராக்ஸ் நிறுவனத்தின் இயக்குநருமான எம்.கே.ஹமீத் சுல்தான் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அவருக்கு சுற்றுப்போட்டிக் குழுவின் சார்பில் சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டதுடன், ஆட்ட வீரர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
இன்றைய போட்டி, நேர்முக வர்ணனையுடன் அசைபட நேரலை செய்யப்பட்டது. காயல்பட்டணம்.காம் வலைதளத்தில் ஐக்கிய விளையாட்டு சங்கத்தின் - மவ்லானா அபுல்கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பை கால்பந்துப் போட்டிக்கான சிறப்புப் பக்கத்தில் உள்ள “நேரடி ஒளிபரப்பு” என்ற இணைப்பில் இந்நேரலையைக் காண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ஐக்கிய விளையாட்டு சங்கத்தின் சார்பில் யூனுஸ் முஸ்தஃபா கணினியை இயக்க, எம்.டி.ஹபீப் ஒளிப்பதிவாளராக செயல்பட்டார்.
ஹாஃபிழ் ஏ.ஆர்.முஹம்மத், ஹாஃபிழ் பி.ஏ.உக்காஷா ஆகியோர் இன்றைய போட்டியை நேர்முக வர்ணனை செய்தனர்.
இன்று நடைபெற்ற போட்டியை, நகரின் அனைத்துப் பகுதிகளைச் சார்ந்த கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் கண்டுகளித்தனர்.
|