காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க நிர்வாகத்தின் சார்பில், ஆண்டுதோறும் மே மாதத்தில், “மவ்லானா அபுல்கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பை”க்கான அகில இந்திய கால்பந்து போட்டி என்ற பெயரில் கால்பந்து சுற்றுப்போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டு போட்டிகள் மே மாதம் 09ஆம் தேதியன்று துவங்கி, 27ஆம் தேதி நிறைவுறுகிறது.
20.05.2012 அன்று (நேற்று) நடைபெற்ற போட்டியில், பெங்களூரு நகரின் கர்நாடகா யூத் லெவன் அணியும், காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க அணியும் மோதின.
ஆட்டத்தில் துவக்கம் முதலே இரு அணிகளும் சம பலத்துடன் விளையாடியபோதிலும், பெங்களூரு அணியின் மகேஷ் பாபு என்ற வீரர், தனக்குக் கிடைத்த இரண்டு வாய்ப்புகளை அற்புதமாகப் பயன்படுத்தி, ஆட்டத்தின் முதற்பாதியில், ஆட்டம் துவங்கிய 02ஆவது நிமிடத்திலும், இரண்டாவது பாதியில், 82ஆவது நிமிடத்திலும் என மொத்தம் இரண்டு கோல்களை அடித்தார்.
காயல்பட்டினம் அணியினருக்கு 3 முறை கோல் அடிக்கும் வாய்ப்பு கிடைத்த போதிலும், துரதிஷ்டவசமாக அவை கோல் கம்பத்தில் பட்டும், கம்பத்திற்கு சற்று வெளியே பாய்ந்தும் கை நழுவிப் போயின. இதனால், பெங்களூரு நகரின் கர்நாடகா யூத் லெவன் அணி, 2-0 என்ற கோல் கணக்கில், காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க அணியை வென்று, அரையிறுதிக்குள் நுழைந்தது.
காயல்பட்டினம் அணியின் பயிற்சியாளராக, நகரின் தலைசிறந்த கால்பந்து வீரர் காழி அலாவுத்தீன் செயல்பட்டார்.
நேற்றைய ஆட்டத்தில் நடுவர் 3 வீரர்களுக்கு சிவப்பு அட்டை காண்பித்து வெளியேற்றினார். தவறான ஆட்டத்திற்காக இரண்டு முறை மஞ்சள் அட்டை எச்சரிக்கை பெற்ற காரணத்தால், ஆட்டத்தின் 55ஆவது நிமிடத்தில், பெங்களூரு அணியின் ரமேஷ் என்ற வீரருக்கும், 65ஆவது நிமிடத்தில் கிரண் என்ற வீரருக்கும் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர். ஆட்டத்தின் 81ஆவது நிமிடத்தில், காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க அணியின் ஆஸாத் என்ற வீரருக்கு சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு அவர் வெளியேற்றப்பட்டார்.
நேற்றைய போட்டியில், தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தலைவரும், மருத்துவ துறையின் உயரிய விருதான பி.சி.ராய் விருதைப் பெற்றவரும், காயல்பட்டினம் எல்.கே.பள்ளிகளின் தலைவருமான டாக்டர் அஷ்ரஃப் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அவருக்கு சுற்றுப்போட்டிக் குழுவின் சார்பில் சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டதுடன், ஆட்ட வீரர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
நேற்றைய போட்டி, நேர்முக வர்ணனையுடன் அசைபட நேரலை செய்யப்பட்டது. காயல்பட்டணம்.காம் வலைதளத்தில் ஐக்கிய விளையாட்டு சங்கத்தின் - மவ்லானா அபுல்கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பை கால்பந்துப் போட்டிக்கான சிறப்புப் பக்கத்தில் உள்ள “நேரடி ஒளிபரப்பு” என்ற இணைப்பில் இந்நேரலையைக் காண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ஐக்கிய விளையாட்டு சங்கத்தின் சார்பில் யூனுஸ் முஸ்தஃபா கணினியை இயக்க, எம்.டி.ஹபீப் ஒளிப்பதிவாளராக செயல்பட்டார்.
ஹாஃபிழ் ஏ.ஆர்.முஹம்மத், ஹாஃபிழ் பி.ஏ.உக்காஷா ஆகியோர் இப்போட்டியை நேர்முக வர்ணனை செய்தனர்.
நேற்று நடைபெற்ற போட்டியை, நகரின் அனைத்துப் பகுதிகளைச் சார்ந்த கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் கண்டுகளித்தனர்.
இன்று மாலை நடைபெறும் லீக் ஆட்டத்தில், திருச்சி மாவட்ட கால்பந்துக் கழக அணியும், சென்னை டான் பாஸ்கோ கால்பந்து அணியும் களம் காணவுள்ளன. |