டெங்கு, சிக்குன்குனியா காய்ச்சல்களைப் பரப்பும் கொசுக்களை ஒழிப்பது குறித்து, காயாமொழி ஆரம்ப சுகாதார நிலையம் ஏற்பாட்டில், காயல்பட்டினம் நகராட்சி மன்ற கூட்டரங்கில், 16.05.2012 அன்று மதியம் 03.00 மணிக்கு கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
நகர்மன்ற துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் அஷோக் குமார் முன்னிலை வகித்தார். நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல் ராஜ் - கூட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கிப் பேசினார்.
இக்கூட்டத்தில், காயாமொழி ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில், ஆறுமுகநேரி சுகாதார ஆய்வாளர் முத்துக்குமார், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சுப்பிரமணியம், காயாமொழி சுகாதார ஆய்வாளர் ஆனந்தராஜ், பிச்சிவிளை சுகாதார ஆய்வாளர் ஜெய்சங்கர், சோனகன்விளை சுகாதார ஆய்வாளர் பொம்மையா, காயல்பட்டினம் சுகாதார ஆய்வாளர் சோமசுந்தரம் ஆகியோர் உரையாற்றினர்.
அவர்களின் உரையில் இடம்பெற்ற தகவல்களின் சுருக்கம் பின்வருமாறு:-
டெங்கு, சிக்குன்குனியா காய்ச்சல்கள் குணப்படுத்தக் கூடியவையே... அச்சப்பட வேண்டியதில்லை...
*** நல்ல தண்ணீரில்தான் டெங்கு கொசுக்கள் முட்டையிட்டு உருவாகும். எனவே, வீடுகளில் சேகரிக்கும் தண்ணீரை எப்போதும் இறுக மூடி வைத்துக் கொள்ள வேண்டும்...
*** உறங்கும்போது கொசு கடிக்காமல் இருக்க கொசு வலையைப் பயன்படுத்துவதே சிறந்தது... எனினும், கொசு ஒழிப்பிற்காக பயன்படுத்தப்படும் மேட், திரவம் உள்ளிட்டவற்றை அளவோடு பயன்படுத்துவதில் தவறில்லை... கொசுவர்த்திச் சுருள் எனில் - இயன்றளவுக்கு அதன் புகையை சுவாசிக்க வாய்ப்பில்லாத வகையில் அமைத்துக்கொள்வது நல்லது...
*** நகராட்சி வினியோகிக்கும் குடிநீரில் தினமும் க்ளோரின் கலந்தே வினியோகிக்க வேண்டும்... அவ்வாறு செய்வதால், நோய்களைப் பரப்பும் கொசுக்களின் முட்டைகள் அழிக்கப்படுகிறது. மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளை மாதமிருமுறை சுத்தம் செய்ய விதி உள்ளது... எனினும், குறைந்தபட்சம் மாதம் ஒருமுறையேனும் சுத்தம் செய்ய வேண்டும்...
*** பொதுமக்கள், தாம் குடிக்கும் நீரை நன்கு காய்ச்சி, ஆற வைத்து குடிக்க வேண்டும்...
கண்ட இடங்களிலும் நீரைத் தேங்க விடக்கூடாது... நீர் தேங்கும் வகையில் ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் டயர், சிரட்டை, உடைந்த பாத்திரங்கள், வளைந்த ஓடுகள் உள்ளிட்ட பொருட்களை உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும்...
*** குளிர்சாதனப் பெட்டியின் அடியிலிருக்கும் கழிவு நீர் தட்டை குறைந்தபட்சம் வாரம் ஒருமுறையாவது கழுவி சுத்தம் செய்து மீண்டும் பொருத்த வேண்டும்...
*** 15 வயதுக்குக் கீழுள்ளவர்களுக்கே டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் அதிகளவில் ஏற்படுகிறது... அவர்களின் குருதியில் இருக்க வேண்டிய platelets எண்ணிக்கை குறைவாக இருப்பதே இதற்குக் காரணம்...
*** கடற்கரைப் பகுதிகளில் அமைந்துள்ள ஊர்களில் கூடுதல் கவனம் செலுத்த நாங்கள் பணிக்கப்பட்டுள்ளோம்...
*** பொதுமக்களில் யாருக்கேனும் காய்ச்சல் ஏற்பட்டால், வெறுமனே மாத்திரை - மருந்துகளை உட்கொண்டுவிட்டு - சாதாரண காய்ச்சல்தான் என்ற நினைப்பில் இருந்துவிட வேண்டாம்... நாளை அதுவே உங்கள் உயிரைப் பறிக்கும் நோயாக இருக்கலாம்... எனவே, காய்ச்சல் கண்டவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனைகளுக்குச் சென்று மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்...
*** வட்டாரத்தின் எந்தப் பகுதியில் யாருக்கு டெங்கு காய்ச்சல் இருந்தாலும் அத்தகவலை ஆரம்ப சுகாதார நிலைய அலுவலர்களுக்கு உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும். அவர்களுக்கு சிகிச்சையளிக்கும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலிருந்து ஆரம்ப சுகாதார நிலையத்திற்குத் தகவல் தரப்பட்டுவிடும்... அதனடிப்படையில், காய்ச்சல் பாதித்த பகுதி சுற்றுவட்டாரங்களில் தடுப்பு நடவடிக்கைகளை அலுவலர்கள் மேற்கொள்வர்...
*** வீடுகளில் கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் தண்ணீர் தேக்கம் உள்ளதா என்பதைக் கண்டறிந்து களைந்திட ஆரம்ப சுகாதார நிலைய அதிகாரிகள், அலுவலர்கள் காயல்பட்டினம் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலுமுள்ள வீடுகளுக்கு வருவார்கள்... அவர்கள் தமது சட்டையில் அடையாள அட்டை அணிந்திருப்பார்கள்... உங்கள் உயிரைப் பாதுகாக்கும் நோக்குடன் சேவை செய்ய வரும் அவர்களுக்கு வீட்டிலிருப்போர் - குறிப்பாக பெண்கள் முழு ஒத்துழைப்பளிக்க வேண்டும்...
*** காயல்பட்டினத்தைச் சார்ந்த வீடுகளில் இதுபோன்று சுகாதாரப் பணிகளுக்காக வரும் அலுவலர்கள் நீண்ட நேரம் காக்க வைக்கப்படுவதால் அவர்களின் பணி பாதிக்கிறது... எனவே, வெளியிடங்களிலிருக்கும் அவர்களின் உறவினர்கள், பொதுநல ஆர்வலர்கள், பொதுநல அமைப்பினர் இது விஷயத்தில் அக்கறையெடுத்து, அம்மக்களுக்கு உணர்த்தி, அலுவலர்கள் விரைந்து தமது பணிகளை முடிக்க ஆவன செய்து தர வேண்டும்...
*** வருமுன் காப்போம் என்ற அடிப்படையில் நாம் வாழ முற்பட்டால், வேண்டாத நோய்கள் நம்மை அண்டாமல் பாதுகாக்க இயலும்...
இவ்வாறு அவர்களின் உரை அமைந்திருந்தது.
இக்கூட்டத்தில், காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர்களான வி.எம்.எஸ்.முஹம்மத் செய்யித் ஃபாத்திமா, பி.எம்.எஸ்.சாரா உம்மாள், எம்.ஜஹாங்கீர், ஜெ.அந்தோணி, எஸ்.எம்.பி.பத்ருல் ஹக், எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், பாக்கியஷீலா, எஸ்.எம்.சாமு ஷிஹாப்தீன் ஆகிய நகர்மன்ற உறுப்பினர்களும், நகராட்சி குடிநீர் குழாய் பொருத்துநர் நிஸார், சுகாதார துணை ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் காயாமொழி ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர், காயல்பட்டினம் நகரின் பொதுநல அமைப்பினர் பங்கேற்றனர்.
|