நகராட்சி நிர்வாகத்துறையின் இணை ஆணையர் (JOINT COMMISSIONER) டாக்டர் டி. ஜகன்னாதன் IAS யை காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ. ஆபிதா சேக் நேற்று காலை சென்னையில் சந்தித்தார். அச்சந்திப்பின் போது - காயல்பட்டினம் நகராட்சியை மாநிலத்தின் முன்மாதிரியான நகராட்சியாக மாற்றிட மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து முயற்சிகளுக்கும், நகராட்சி நிர்வாகத்துறையின் ஆதரவையும், ஒத்துழைப்பையும் அவர் கோரினார்.
சிறந்த நகராட்சியாக மாற்றுவதற்கு எடுத்துக்கொள்ளவேண்டிய முயற்சிகளையும், வழிகளையும், சிரமங்களையும் விளக்கிய இணை ஆணையர் டாக்டர் டி. ஜகன்னாதன் IAS - நகராட்சி நிர்வாகத்துறை (COMMISSIONERATE OF MUNICIPAL ADMINISTRATION) அனைத்து உதவிகளையும் காயல்பட்டினம் நகராட்சிக்கு வழங்கும் என உறுதி கூறினார்.
நகரில் குடிநீர் விநியோகத்தில் உள்ள குறைப்பாடுகளை நகர்மன்றத் தலைவர் அவ்வேளையில் - இணை ஆணையரிடம் எடுத்துக்கூறினார். அவைகளை நிவர்த்தி செய்ய சில ஆலோசனைகளை இணை ஆணையர் அப்போது வழங்கினார். மேலும் - டெண்டர் அறிவிப்பை எதிர்நோக்கி இருக்கும் புதிய குடிநீர் திட்டம் குறித்தும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.
பின்னர் நகர்மன்றத் தலைவர் ஐ. ஆபிதா சேக் - நகராட்சி நிர்வாகத்துறையின் தலைமை பொறியாளர் (CHIEF ENGINEER) ஆர்.விஜய்குமாரை சந்தித்தார். தலைமை பொறியாளர் - புதிய குடிநீர் திட்டம் அமைய இருக்கும் பொன்னன்குறிச்சி பகுதியை தான் ஞாயிறு அன்று (மே 20) ஆய்வு செய்தது குறித்து நகர்மன்றத் தலைவரிடம் விளக்கினர்.
புதிதாக நிறைவேற்றப்பட இருக்கும் குடிநீர் திட்டத்தின் ஓர் அம்சமான நகர குடிநீர் விநியோக முறையை (INTERNAL DISTRIBUTION SYSTEM) - முக்கியத்துவம் அடிப்படையில் சீர்செய்து, புதுப்பிப்பது குறித்து - காயல்பட்டினம் நகர்மன்றம் தீர்மானம் ஏற்றி உள்ளது பற்றி நகர்மன்றத் தலைவர் அவ்வேளையில் தலைமை பொறியாளரிடம் விளக்கினார்.
அதற்கு பதில் கூறிய தலைமை பொறியாளர் அதை நிறைவேற்றுவதில் பெரிய சிரமம் இருக்காது என்றும், பணிகளை துவக்க அறிவிப்பு வரும்போது - உள்ளூர் பணிகளுக்கான அறிவிப்பையும் அதே சமயத்தில் வெளியிடலாம் என்றும் கூறினார்.
பின்னர் நகராட்சி நிர்வாகத்துறை சட்ட அலுவலர் வசந்த குமாரியை நகர்மன்றத் தலைவர் சந்தித்தார். நகராட்சி சம்மந்தப்பட்ட நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து அப்போது ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.
|