இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் கிளைக்கு சொந்தமான - தியாகி பி.எச்.எம்.முஹம்மது அப்துல் காதர் மன்ஸில் என்ற பெயரிலான அலுவலகக் கட்டிட திறப்பு விழா இன்று மாலை 05.00 மணியளவில் காயல்பட்டினம் சதுக்கைத் தெருவில் நடைபெறவுள்ளது.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, கட்டிடத்தைத் திறந்து வைப்பதற்காக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், செந்தூர் விரைவுத் தொடர்வண்டியில், இன்று காலை 07.30 மணியளவில் காயல்பட்டினம் தொடர்வண்டி நிலையம் வந்திறங்கினார்.
கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் தலைமையில் நடைபெற்ற வரவேற்பில், காயல்பட்டினம் நகர தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீனுக்கு சால்வை அணிவித்து வரவேற்றார்.
கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.ஜே.மஹ்மூதுல் ஹஸன், மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப், மாவட்ட செய்தித் தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ், நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூ ஸாலிஹ், நகர பொருளாளர் ஹாஜி எம்.ஏ.முஹம்மத் ஹஸன் மற்றும் மாவட்ட நகர நிர்வாகிகள், உறுப்பினர்கள் இந்த வரவேற்பில் திரளாகக் கலந்துகொண்டனர்.
பின்னர் தொடர்வண்டி நிலையத்திலிருந்து, அவர் தங்குமிடமான - தாய்லாந்து காயிதேமில்லத் பேரவை அமைப்பாளர் ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீன் இல்லம் வரை அவரை நகர முஸ்லிம் லீக் மாணவரணியான முஸ்லிம் மாணவர் பேரவையினர் மோட்டார் சைக்களில் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.
இன்று மாலையில், காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் நடைபெறும் கால்பந்து போட்டியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார். பின்னர், அவர் முஸ்லிம் லீக் அலுவலக கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்று கட்டிடத்தைத் திறந்து வைக்கிறார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்திக்கவுள்ளார். |