சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதை தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தப்பட வேண்டும் என எண்ணெய் நிறுவனங்கள் மத்திய அரசை வலியுறுத்தி வந்தன. டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. இதனால் எண்ணெய் நிறுவனங்களுக்கு பெட்ரோலிய பொருட்களின் இறக்குமதி செலவு கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் பெட்ரோல் டீசல் விலையை உடனடியாக உயர்த்த வேண்டும் என பெட்ரோலியத்துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி வலியுறுத்தினார்.
பொதுத்துறை நிறுவனங்களுக்கு 4,860 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. பெட்ரோல் விற்பனையில், வரியுடன் சேர்த்து லிட்டருக்கு ரூ. 7.53 ரூபாய் நஷ்டம் ஏற்படுவதாகவும், இந்த ஆண்டில் 72 ஆயிரம் கோடி ரூபாய் எண்ணெய் நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்படுவதாகவும் அவர் கூறினார். பெட்ரோல் விலையை லிட்டருக்கு 9 ரூபாய் வரை உயர்த்த வேண்டும் என எண்ணெய் நிறுவனங்கள் மத்திய அரசை வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் பெட்ரோல் விலையை மத்திய அரசு லிட்டருக்கு ரூ.7.50 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்தது.. ஒரே நாளில் 7.50 ரூபாய் உயர்த்தப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
விலை உயர்வுக்கு பின்னர் சென்னையில் ரூ.77.25 எனவும், டில்லியில் ரூ.73.14 எனவும், கோல்கட்டாவில் ரூ.77.53 எனவும், பெங்களூருவில் ரூ.81.01 எனவும், ஐதராபாத்தில் ரூ. 80. 58 எனவும், மும்பையில் ரூ.78.16 எனவும் விற்பனையாகிறது.
தகவல்:
தினமலர்.
பெட்ரோல் விலை உயர்வையொட்டி, நேற்றிரவு பெட்ரோல் ஊற்றுமிடங்களில், இரு சக்கர மற்றும் நாற்சக்கர வாகனங்கள் அணிவகுத்து நின்றன. காயல்பட்டினம் எல்.எஃப்.வீதியிலுள்ள காயல் ஃப்யூல் சென்டரிலும் கூட்டம் அலை மோதியது. நீண்ட நேரம் வரிசையில் நின்றவாறு வாடிக்கையாளர்கள் தம் வாகனங்களுக்கு பெட்ரோல் ஊற்றிச் சென்றனர்.
இது ஒருபுறமிருக்க, அதனையடுத்து காயல்பட்டினம் தொடர்வண்டி நிலையத்தைத் தாண்டி - ஆறுமுகநேரியில் அமைந்துள்ள பெட்ரோல் ஊற்று நிலையத்தில் இரவு முற்கூட்டியே பெட்ரோல் தீர்ந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. |