காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க நிர்வாகத்தின் சார்பில், ஆண்டுதோறும் மே மாதத்தில், “மவ்லானா அபுல்கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பை”க்கான அகில இந்திய கால்பந்து போட்டி என்ற பெயரில் கால்பந்து சுற்றுப்போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டு போட்டிகள் மே மாதம் 09ஆம் தேதியன்று துவங்கி, 27ஆம் தேதி நிறைவுறுகிறது.
24.05.2012 அன்று (நேற்று) நடைபெற்ற போட்டியில், சென்னை சாய் அணியும், கோழிக்கோடு யுனிவெர்ஸல் கால்பந்துக் கழக அணியும் மோதின. இரு அணிகளும் சம பலத்துடன் மோதியபோதிலும், யாராலும் கோல் மட்டும அடிக்க இயலவில்லை.
இரு அணிகளும் விளையாடிக்கொண்டிருந்தபோது திடீரென கைகலப்பு ஏற்பட்டது.
காரணமாக கோழிக்கோடு அணியில் மூன்று வீரர்களுக்கும், சென்னை அணியில் ஒரு வீரருக்கும் நடுவரால் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு, அவர்கள் வெளியேற்றப்பட்டனர். இதனால் சென்னை அணி 10 வீரர்களுடனும், கோழிக்கோடு அணி வெறுமனே 08 வீரர்களுடனும் விளையாடினர்.
சூழ்நிலையை நன்றாக உணர்ந்துகொண்ட கோழிக்கோடு அணியினர் அதன்பிறகு நேர்த்தியாக விளையாடினர். அந்த அணியின் வீரர் கோல் எல்லைக்குள் பந்தைக் கடத்தி வந்தபோது தவறான முறையில் சென்னை அணி வீரர் அவரைத் தடுத்ததால், ஆட்டம் நிறைவடைய சில நிமிடங்கள் எஞ்சியிருந்த நிலையில் கோழிக்கோடு அணிக்கு ஃப்ரீ கிக் பெனாலிட்டி வாய்ப்பு கிடைத்தது. அதனை சரியாகப் பயன்படுத்திக்கொண்ட கோழிக்கோடு வீரர் ப்ரசாந்த் அற்புதமாக ஒரு கோல் அடித்தார்.
அதன்பிறகு, ஆட்டம் நிறைவுறப்போவதைக் கருத்திற்கொண்டு - அவ்வப்போது தாக்குதல் ஆட்டத்திலீடுபட்டாலும், பெரும்பாலும் தடுப்பாட்டத்தையே மேற்கொண்டது கோழிக்கோடு அணி.
பின்னர், ஆட்டத்தின் இறுதி வரை இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்காததால், கோழிக்கோடு யுனிவெர்ஸல் கால்பந்துக் கழக அணி, 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது. வரும் 26ஆம் தேதி (நாளை) நடைபெறவுள்ள இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்த அணி பெங்களூரு யூத் லெவன் அணியுடன் மோதவுள்ளது.
நேற்றைய போட்டியில், இ.டி.ஏ. மெல்கோ நிறுவனத்தின் தெற்காசிய பிராந்திய இயக்குனர் ஹாஜி எச்.என்.ஸதக்கத்துல்லாஹ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். ஆட்டத்தின் இடைவேளையின்போது அவருக்கு ஐக்கிய விளையாட்டு சங்கம் சார்பில் ஹாஜி பி.எஸ்.எம்.இல்யாஸ் சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தினார். பின்னர் சுற்றுப்போட்டிக் குழுவினர், அவருக்கு இரு அணி வீரர்களையும் அறிமுகம் செய்து வைத்தனர்.
இன்று நடைபெற்ற போட்டியே இச்சுற்றுப்போட்டியின் கடைசி லீக் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றைய போட்டி, நேர்முக வர்ணனையுடன் அசைபட நேரலை செய்யப்பட்டது. காயல்பட்டணம்.காம் வலைதளத்தில் ஐக்கிய விளையாட்டு சங்கத்தின் - மவ்லானா அபுல்கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பை கால்பந்துப் போட்டிக்கான சிறப்புப் பக்கத்தில் உள்ள “நேரடி ஒளிபரப்பு” என்ற இணைப்பில் இந்நேரலையைக் காண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. எம்.டி.ஹபீப் ஒளிப்பதிவாளராக செயல்பட்டார். மாணவர் எம்.அஃப்ரஸ் நேர்முக வர்ணனை செய்தார்.
இப்போட்டியை, நகரின் அனைத்துப் பகுதிகளைச் சார்ந்த கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் கண்டுகளித்தனர்.
|