இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளைக்குச் சொந்தமான - தியாகி பி.எச்.எம்.முஹம்மது அப்துல் காதர் மன்ஸில் திறப்பு விழா, காயல்பட்டினம் சதுக்கைத் தெருவில், மே 23 புதன்கிழமை மாலை 05.00 மணிக்கு நடைபெற்றது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் தலைமை தாங்கினார். நகர முஸ்லிம் லீக் கவுரவ ஆலோசகர்களான மவ்லவீ எஸ்.எஸ்.இ.காழி அலாவுத்தீன், ஹாஜி ஆர்.எஸ்.அப்துல் காதிர், ஹாஜி வாவு எஸ்.அப்துல் கஃப்பார், ஹாஜி எம்.எம்.அஹ்மத், ஹாஜி எம்.ஏ.முஹம்மத் ஹஸன், நகர பிரமுகர்களான எம்.எம்.உவைஸ், எஸ்.எம்.மிஸ்கீன் ஸாஹிப் ஃபாஸீ, ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அலுவலகத்தைத் திறந்து வைத்தார்.
மாநில செயலாளர் காயல் மகபூப் பிறைக்கொடியை ஏற்றி வைத்தார். தூத்துக்குடி மாவட்ட முஸ்லிம் லீக் தலைவர் பி.மீராசா மரைக்காயர் பெயர்ப் பலகையைத் திறந்து வைத்தார்.
மாநில பொருளாளர் எம்.எஸ்.ஏ.ஷாஜஹான், மாநில துணைத்தலைவர் எஸ்.கோதர் முகைதீன், மாநில அமைப்புச் செயலாளர் நெல்லை அப்துல் மஜீத், நெல்லை மாவட்ட தலைவர் எம்.எஸ்.துராப்ஷா, செயலாளர் எல்.கே.எஸ்.மீரான் முகைதீன், குமரி மாவட்ட தலைவர் குளச்சல் நாஸர், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.ஜே.மஹ்மூதுல் ஹஸன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில், பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பேசியதாவது:-
சரித்திரப் புகழ் வாய்ந்த காயலம்பதியில் இந்த மன்ஸிலை வாங்கி, நம் நெஞ்சங்களில் வாழ்ந்துகொண்டிருக்கும் பி.எச்.எம்.முஹம்மது அப்துல் காதர் அவர்களின் பெயரில் அதனைத் திறந்து வைக்கும் வாய்ப்பினை வழங்கியமைக்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
மனிதனுக்கு நன்றி செலுத்தாதவன் இறைவனுக்கு நன்றி செலுத்தியவனாக மாட்டான் என்ற அண்ணல் நபிகளாரின் அமுத மொழிக்கேற்ப, கடந்த காலத்தில் விதையைப் போல் இருந்து விருட்சமாக பணி செய்த பெருமக்களுக்கு கடமை உணர்ச்சியோடு இங்கு நன்றி பாராட்டியுள்ள பாங்கு மனநிறைவைத் தருகிறது. இந்த செயல் அவர்களின் குடும்பத்தார், அனுதாபிகள், ஆதரவாளர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியை வழங்கக் கூடியதாகும்.
காயலம்பதியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு அதன் துவக்க காலம் தொட்டே தியாக உள்ளத்துடன் உழைத்தவர்கள் ஏராளம்... அந்த வரிசையில், இன்றளவும் உழைத்துக் கொண்டிருக்கும் நகர முஸ்லிம் லீக் தலைவர் வாவு நாஸர், செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூ ஸாலிஹ், பொருளாளர் எம்.ஏ.முஹம்மத் ஹஸன் உள்ளிட்ட நகர நிர்வாகிகளுக்கும், மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், மாநில செயலாளர் காயல் மகபூப், மாவட்டச் செயலாளர் மஹ்மூதுல் ஹஸன், வாவு ஷம்சுத்தீன், இப்றாஹீம் மக்கீ உள்ளிட்ட பொறுப்பாளர்களுக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீகை நிலைப்படுத்த இந்த ஊர் அளித்துள்ள பங்களிப்பு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. கடந்த காலங்களைப் போல் இன்றைய தினமும் தமிழகத்திலும், இந்தியா முழுக்கவும் இந்த இயக்கத்தை வளர்க்க இந்த ஊர் காட்டி வரும் ஆர்வம், அளித்து வரும் ஒத்துழைப்பு, உதவி அனைத்தும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய அம்சங்கள்.
சமுதாயத்தின் பாதுகாப்புக் கேடயமான இந்திய யூனியன் முஸ்லிம் லீகை பலப்படுத்த இனி பத்து மடங்கு கூடுதலாக உங்களின் ஒத்துழைப்பு தேவை. அப்பேர்ப்பட்ட ஒத்துழைப்பின் மூலம், ஒன்றுபட்ட இயக்கத்திற்கு உன்னதமான - உயரிய இடத்தை நாம் பெற்றுத் தர முடியும் என்பதில் சந்தேகமில்லை.
இவ்வாறு பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பேசினார்.
அதனைத் தொடர்ந்து. புதிய அலுவலகக் கட்டிடத்திற்கு, தாம்பரம் மாவட்ட முஸ்லிம் லீக் சார்பில் சுவர் கடிகாரம் அன்பளிப்பு செய்யப்பட்டது. அதனை, காஞ்சிபுரம் மாவட்டத்தின் செய்தித் தொடர்பாளர் செய்யித் அலீ ரஸா வழங்க, காயல்பட்டினம் நகர கிளைத் தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.நாஸர் பெற்றுக்கொண்டார்.
பின்னர். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளைக்குச் சொந்தமான சீதக்காதி நகர் சொத்தை விற்று, சதுக்கைத் தெருவில் இப்புதிய கட்டிடத்தை வாங்கிட ஒத்துழைத்த ஹாஜி எம்.எஸ்.அப்துல் காதிர், பெத்தப்பா சுல்தான், ஹாஜி என்.டி.அஹ்மத் ஸலாஹுத்தீன், ஹாஜி மாஷாஅல்லாஹ் தாவூத் ஆகியோரைப் பாராட்டி, பேராசிரியர் சால்வை அணிவித்தார்.
பின்னர், மர்ஹூம் பி.எச்.எம்.முஹம்மத் அப்துல் காதிர் குடும்பத்தார் சார்பில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீனுக்கு, ஹாஜி சாளை முஹம்மத் அப்துல் காதிர் சால்வை அணிவித்தார்.
பின்னர், நடைபெற்று முடிந்த ப்ளஸ் 2 அரசுப் பொதுத் தேர்வில் காயல்பட்டினம் நகரளவில் முதலிடம் பெற்ற காயல்பட்டினம் சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் மாணவி அபிஷா ஜூலியட் மேரி, இரண்டாம், மூன்றாமிடங்களைப் பெற்ற - எல்.கே.மேனிலைப்பள்ளி மாணவர்களான எம்.எச்.முஹம்மத் அபூபக்கர், எம்.ஏ.கே.ஹாஜா தவ்ஃபீக் ஆகியோரைப் பாராட்டி நகர முஸ்லிம் லீக் சார்பில் முறையே ரூ.2,000, 1,500, 1,000 பணப்பரிசு வழங்கப்பட்டது.
அதுபோல, மனையியல் பாடத்தில் மாநில அளவில் இரண்டாமிடம் பெற்றுள்ள காயல்பட்டினம் அரசு மகளிர் மேனிலைப்பள்ளி மாணவி செய்யித் அலீ ஃபாத்திமாவுக்கு ரூ.2,500 பணப்பரிசு வழங்கப்பட்டது. பரிசுகளை பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் வழங்கினார்.
பின்னர், மர்ஹூம் ஹாஜி வாவு சுலைமான் குடும்பத்தாரின் அனுசரணையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை சார்பாக, 17ஆவது வார்டுக்கு வழங்கப்படும் குப்பை சேகரிப்பு வாகனத்தின் சாவியை, அந்த வார்டு நகர்மன்ற உறுப்பினர் ஏ.ஏ.அஜ்வாத் இடம் பேராசிரியர் வழங்கினார்.
முன்னதாக, மாவட்ட செய்தித் தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் கிராஅத் ஓதினார். நகர தலைவர் வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் வரவேற்றுப் பேசினார். மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப் நிகழ்ச்சியை நெறிப்படுத்தினார்.
நிகழ்ச்சியில், குமரி மாவட்ட செயலாளர் நவ்ஷாத், முன்னாள் செயலாளர் நஸீம், மாநில பொதுக்குழு உறுப்பினர் தென்காசி பி.டி.எஸ்.ஆர்.முஹம்மத் இஸ்மாஈல், மாநில இளைஞரணி இணைச் செயலாளர் தென்காசி முஹம்மத் அலீ, நெல்லை மாவட்ட வர்த்தக அணி செயலாளர் பாட்டப்பத்து முஹம்மத் அலீ, தூத்துக்குடி மாவட்ட பொருளாளர் ஷாஹுல் ஹமீத், தூத்துக்குடி மாநகர கவுரவ தலைவர் எம்.அப்துல் கனி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கே.மீராசா, துணைச் செயலாளர் உவைஸ், எம்.எஸ்.எஃப். ரஹ்மான், ஹாங்காங் வி.எம்.டி.முஹம்மத் ஹஸன், கத்தர் கே.வி.ஏ.டி.ஹபீப் முஹம்மத் மற்றும் நகரின் அனைத்துப் பகுதிகளைச் சார்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ் நன்றி கூறினார். மாவட்ட காஜீ மவ்லவீ எஸ்.டி.அம்ஜத் அலீ மஹ்ழரீ துஆ ஓதினார்.
நிகழ்ச்சிகள் நிறைவுற்ற பின்னர், வெளியூர்களிலிருந்து திறப்பு விழாவிற்கு வருகை தந்தோருக்கு, புதிய அலுவலகக் கட்டிடத்தில் சிற்றுண்டியுபசரிப்பு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீனுடன், தூத்துக்குடி மாநகர நிர்வாகிகள் குழுப்படம் எடுத்துக்கொண்டனர்.
படங்களில் உதவி:
P.K.முஹம்மத் செய்யித் அலீ ரஸா,
செய்தித் தொடர்பாளர்,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,
காஞ்சிபுரம் மாவட்டம். |