காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க நிர்வாகத்தின் சார்பில், ஆண்டுதோறும் மே மாதத்தில், “மவ்லானா அபுல்கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பை”க்கான அகில இந்திய கால்பந்து போட்டி என்ற பெயரில் கால்பந்து சுற்றுப்போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டு போட்டிகள் மே மாதம் 09ஆம் தேதியன்று துவங்கி, 27ஆம் தேதி நிறைவுறுகிறது.
23.05.2012 அன்று (நேற்று) நடைபெற்ற போட்டியில், பாண்டிச்சேரி கால்பந்துக் கழக அணியும், சென்னை சாய் அணியும் மோதின.
ஆட்டத்தின் துவக்கம் முதலே, மைதானத்தில் சென்னை சாய் அணியின் ஆதிக்கமே மேலோங்கியிருந்தது. ஆட்டம் துவங்கிய 12ஆவது நிமிடத்தில், அந்த அணியின் பெபிட்டா என்ற வீரரும், 36ஆவது நிமிடத்தில் சச்சின் என்ற வீரரும், 41ஆவது நிமிடத்தில் சீசன் என்ற வீரரும் தலா ஒரு கோல் அடித்து அணியை 3-0 என்ற கோல் கணக்கில் முன்னிலைப்படுத்தினர்.
இரண்டாவது பாதி ஆட்டத்தில், பாண்டிச்சேரி அணி தாக்குதல் ஆட்டத்தையும், சென்னை அணி தற்காப்பு ஆட்டத்தையும் கையாண்டன. ஆட்டத்தின் இறுதி வரை பாண்டிச்சேரி அணியால் கோல் எதுவும் அடிக்க இயலாமற்போகவே, சென்னை சாய் அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, இன்று மாலையில் நடைபெறும் கடைசி காலிறுதிப் போட்டியில், கோழிக்கோடு யுனிவெர்ஸல் கால்பந்துக் கழக அணியுடன் விளையாட தகுதி பெற்றுள்ளது.
தவிர்க்கவியலாத காரணங்களால் நேற்றைய போட்டி நேரலை செய்யப்படவில்லை. நேற்றைய போட்டியை, நகரின் அனைத்துப் பகுதிகளைச் சார்ந்த கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் கண்டுகளித்தனர்.
நேற்றைய போட்டியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அவருடன், மாநில பொதுச் செயலாளர் ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் மற்றும் மாநில - மாவட்ட - நகர நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.
சிறப்பு விருந்தினருக்கு, ஐக்கிய விளையாட்டு சங்கத்தின் சார்பில் அதன் நிர்வாகி ஹாஜி எஸ்.எம்.உஸைர் சால்வை அணிவித்து கவுரவித்தார். அடுத்து, முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளருக்கு, சுற்றுப்போட்டிக் குழுவின் சார்பில் பல்லாக் அப்துல் காதிர் நெய்னா சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தினார். பின்னர், அவர்களனைவருக்கும் இரு அணி வீரர்களும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
நிறைவாக, அவர்களுக்கு சிற்றுண்டியுபசரிப்பும் செய்யப்பட்டது. அப்போது, ஐக்கிய விளையாட்டு சங்கத்தின் விருந்தினர் பதிவேட்டில், பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் வாழ்த்து வசனங்களெழுதி கைச்சான்றிட்டார்.
|