காயல்பட்டினம் கிழக்குப் பகுதியில், கடற்கரையையொட்டி அமைந்துள்ளது மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் ஸபை. கடந்த 84 ஆண்டுகளாக வருடந்தோறும் ரஜப் மாதத்தில் அல்ஜாமிஉஸ் ஸஹீஹுல் புகாரீ எனும் நபிமொழிக் கிரந்தம் 30 நாட்கள் முழுமையாக ஓதப்பட்டு, அனுதினமும் ஓதப்படும் பொன்மொழிகளுக்கான விளக்கவுரைகள் மார்க்க அறிஞர்களால் வழங்கப்பட்டு வருகிறது.
நடப்பு 85ஆம் ஆண்டு நிகழ்வுகள் 23.05.2012 புதன் கிழமை துவங்கி, 21.06.2012 வியாழக்கிழமையன்று அபூர்வ துஆவுடன் நிறைவுறுகிறது. மறுநாள் 22.06.2012 வெள்ளிக்கிழமையன்று நேர்ச்சை வினியோகம் நடைபெறுகிறது.
முதல் நாளான நேற்று, இலங்கை - கொழும்பு சம்மாங்கோட் பள்ளியின் இமாம் மவ்லவீ நஹ்வீ ஐ.எல்.செய்யித் அஹ்மத் முத்துவாப்பா ஃபாஸீ உரை நிகழ்த்தினார்.
ஸஹீஹுல் புகாரீ நபிமொழிக் கிரந்தம் தொகுக்கப்பட்ட வரலாறு, அக்கிரந்தத்தைத் தொகுப்பதற்காக இமாம் புகாரீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் சந்தித்த சிரமங்கள் உள்ளிட்டவை இன்றைய உரையில் இடம்பெற்ற செய்திகளாகும்.
இரண்டாம் நாளான இன்று (24.05.2012) ஓதப்பட்ட நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, பன்னூலாசிரியர் “முத்துச்சுடர்” என்.டி.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் நுஸ்கீ மஹ்ழரீ வழங்குகிறார்.
தினமும் காலை 09.15 மணிக்கு நடைபெறும் மார்க்க சொற்பொழிவுகள் மற்றும் இறுதிநாள் நிகழ்ச்சிகள் அனைத்தும், மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் ஸபையின் www.bukhari-shareef.com என்ற பிரத்தியேக இணையதளத்தில் நேரலை செய்யப்படுகிறது. இந்நேரலையை, காயல்.டி.வி இணையதளத்திலும், புகாரிஷ் ஷரீஃப் சிறப்புப் பக்கத்தில் கேட்கலாம்.
[செய்தி திருத்தப்பட்டது @ 14:43/24.05.2012]
|