இ.சி.ஜி. டெக்னீஷியன் படித்து, அதற்கேற்ற வேலையில் அமர விரும்புவதாக, மனையியல் பாடத்தில் மாநில அளவில் இரண்டாமிடம் பெற்றுள்ள, காயல்பட்டினம் அரசு மகளிர் மேனிலைப்பள்ளி மாணவி எஃப்.செய்யித் அலீ ஃபாத்திமா தெரிவித்துள்ளார்.
பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் 08ஆம் தேதி துவங்கி, 30ஆம் தேதி வரை நடைபெற்றது. தேர்வு முடிவுகள் இன்று காலை 11.00 மணியளவில் வெளியிடப்பட்டுள்ளது.
இத்தேர்வில், காயல்பட்டினம் கீழ நெய்னார் தெருவைச் சார்ந்த ஃபாரூக் அலீ என்பவரின் மகள் எஃப்.செய்யித் அலீ ஃபாத்திமா, மனையியல் (Home Science) பாடத்தில், 200க்கு 195 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாமிடம் பெற்றுள்ளார்.
பாடவாரியாக இவர் பெற்ற மதிப்பெண்கள் பின்வருமாறு:-
தமிழ் - 182
ஆங்கிலம் - 144
இயற்பியல் - 154
வேதியல் - 148
உயிரியல் - 128
மனையியல் - 195
மொத்த மதிப்பெண்கள் - 1200க்கு 0951.
தனது சாதனை குறித்து, மாணவி எஃப்.செய்யித் அலீ ஃபாத்திமா கருத்து தெரிவிக்கையில்,
எனது தந்தை ஃபாரூக் அலீ சமையல் தொழில் செய்து வருகிறார்... தாயார் ஃபவுஸியா இல்லத்தரசியாக உள்ளார்... எனது மூத்த சகோதரி ஷமீமா 10ஆம் வகுப்பு வரை படித்துள்ளார்...
நான் மனையியல் பாடத்தில் மாநில அளவில் முதலிடத்தை எதிர்பார்த்து மிகுந்த ஆவலுடன் படித்தேன்... இப்பாடத்தில் மாநிலத்தின் முதன்மதிப்பெண்ணும் 195தான் என்றாலும், மொத்த மதிப்பெண்களில் என்னை விட 51 மதிப்பெண்கள் அதிகம் பெற்றதால், கோவையைச் சார்ந்த மாணவி சூரிய ப்ரியா முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
மாநிலத்தில் இரண்டாமிடம் என்ற இந்த சாதனை எனக்கு பெருமகிழ்ச்சியைத் தந்துள்ளது... இதற்காக முதலில் என்னைப் படைத்து பராமரிக்கும் இறைவனுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்...
அடுத்து என் பெற்றோருக்கு நான் பெரிதும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்... பொருளாதாரத்தில் தாழ்நிலையிலிருக்கின்ற நிலையிலும், பெண் பிள்ளையான எனது படிப்பிற்கு என் பெற்றோர் தடங்கல் எதுவும் தராதது மட்டுமின்றி, நன்கு படிக்க என்னை ஊக்கப்படுத்தவும் தவறவில்லை... அவர்கள் தந்த ஒத்துழைப்புதான் எனது இந்த சாதனைக்கு வாய்ப்பை ஏற்படுத்தியது...
அடுத்து, எனது மதிப்பிற்குரிய ஆசிரியை வாணி அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். படிக்க வேண்டிய நேரத்தில்தான் படிக்க வேண்டும்... விளையாட வேண்டிய நேரத்தில் விளையாட வேண்டும்... உண்ண வேண்டிய நேரத்தில் உணவுண்ண வேண்டும்... என அடிக்கடி அவர் சொல்லிக்கொண்டே இருப்பார்...
எந்த நேரத்தில் எந்த உணவை உண்டால் நலமாக வாழலாம், நன்றாகப் படிக்கலாம் என்பன போன்ற அரிய அறிவுரைகளையெல்லாம் அவர் எங்களுக்கு நிறைவாகத் தருவார்...
வகுப்பில் அடிக்கடி சிறப்புத் தேர்வுகள் நடத்தி எங்களுக்கு நல்ல பயிற்சியளிப்பார்... சில நேரங்களில் மதிப்பெண் குறைவாக எடுத்துவிட்டாலும், கடிந்துகொள்ளாமல் - அடுத்த முறை நன்றாக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று ஊக்கப்படுத்தி, குறைந்த மதிப்பெண் பெற்றதையே மறக்கச் செய்வார்... இந்த நேரத்தில் அவர்களுக்கு எனது மனங்குளிர்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்...
அடுத்து, எங்கள் பள்ளி தலைமையாசிரியை முஹம்மத் ஆயிஷா அவர்களை இந்த நேரத்தில் நினைவுகூர கடமைப்பட்டிருக்கிறேன்... எங்களது படிப்பு, ஒழுக்கம், முன்னேற்றம் உள்ளிட்ட விஷயங்களில் தனிக்கவனம் செலுத்தி, மாணவியர் அனைவரோடும் பாரபட்சம் பாராமல் பழகி ஊக்கம் தந்துகொண்டே இருப்பார்... இந்நேரத்தில் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்...
தொலைக்காட்சி பார்ப்பதில் எனக்கு அவ்வளவாக விருப்பமில்லை... 12ஆம் வகுப்பு மாறியதும் முற்றிலுமாக தொலைக்காட்சி பார்ப்பதையே விட்டுவிட்டேன்...
மாணவ-மாணவியருக்கு நான் தெரிவிக்க விரும்புவதெல்லாம், இரவில் நீண்ட நேரம் படிப்பதை விட, அதிகாலையில் முன்னரே எழுந்து படித்தால், படித்த பாடம் அப்படியே மனதில் நிற்கும்.. அந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதை அறிவுரையாகத் தெரிவித்துக்கொள்கிறேன்...
இவ்வாறு, மனையியல் பாடத்தில் மாநில அளவில் இரண்டாமிடம் பெற்று சாதனை புரிந்துள்ள மாணவி எஃப்.செய்யித் அலீ ஃபாத்திமா தெரிவித்துள்ளார்.
இம்மாணவியை, பள்ளி தலைமையாசிரியை முஹம்மத் ஆயிஷா, பாட ஆசிரியை வாணி மற்றும் ஆசிரியையர் பாராட்டினர்.
இம்மாணவி, ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காமல் 100 சதவிகித வருகைப் பதிவைக் கொண்டமைக்காக, பள்ளியின் சார்பில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் எழுதிய, “அக்னி சிறகுகள்” நூல் பரிசாக அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. |