காயல்பட்டினம் நகராட்சியின் 01, 02ஆவது வார்டு மக்களுக்கான குடும்ப அட்டை பெயர் சேர்த்தல் - திருத்தல் முகாம் இம்மாதம் 25ஆம் தேதி நடைபெறுமென, காயல்பட்டினம் கோமான் தெருவில் அண்மையில் நடைபெற்ற நியாய விலைக் கடை கிளை நிறுவன திறப்பு விழாவின்போது, மாவட்ட வழங்கல் அதிகாரி பஷீர் தெரிவித்திருந்தார். இம்முகாம் குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
காயல்பட்டினத்தின் 01, 02ஆவது வார்டுகளைச் சார்ந்த குடும்ப அட்டைதாரர்கள் தமது குடும்ப அட்டைகளில் புதிதாக பெயர்களை சேர்த்தல் அல்லது இருக்கும் பெயர்களில் திருத்தம் செய்தல் ஆகிய தேவைகளுக்காக, இம்மாதம் 25ஆம் தேதியன்று காலை 10.00 மணிக்கு, காயல்பட்டினம் சென்ட்ரல் மேனிலைப்பள்ளியில் நடைபெறவுள்ள முகாமில் விண்ணப்பிக்கலாம்.
அவற்றை சரிபார்த்த பின்னர், அந்த இடத்திலேயே அவர்களின் குடும்ப அட்டைகளில் அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக திருத்தம் செய்து தருவர்.
குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் - திருத்தல் பணிக்காக முகாமுக்கு வருவோர், தமது கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) அல்லது வாக்காளர் அடையாள அட்டை மற்றும் குடும்ப அட்டையின் அசல் - நகல் ஆகியவற்றைக் கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு, மாவட்ட வழங்கல் அதிகாரி பஷீர் தெரிவித்துள்ளார்.
தகவல்:
லேண்ட்மார்க் ஹாஜி ராவன்னா அபுல்ஹஸன்,
எல்.எஃப்.ரோடு, காயல்பட்டினம்.
இம்முகாமில் தமது குடும்ப அட்டைகளுக்குத் தேவையான பெயர் சேர்த்தல், திருத்தல்களைச் செய்ய விரும்புவோர், அதற்கு விண்ணப்பிப்பதற்கான முன்னேற்பாட்டு ஒத்துழைப்புகளை காயல்பட்டினம் அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றத்தில் இன்று மாலை 04.30 மணி முதல் 08.30 மணி வரை பெற்றுக்கொள்ளலாம் என அவ்வமைப்பின் துணைச் செயலாளர் முஹம்மத் முஹ்யித்தீன் தெரிவித்துள்ளார். |