காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க நிர்வாகத்தின் சார்பில், ஆண்டுதோறும் மே மாதத்தில், “மவ்லானா அபுல்கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பை”க்கான அகில இந்திய கால்பந்து போட்டி என்ற பெயரில் கால்பந்து சுற்றுப்போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டு போட்டிகள் மே மாதம் 09ஆம் தேதியன்று துவங்கி, 27ஆம் தேதி நிறைவுறுகிறது.
16.05.2012 அன்று (நேற்று) நடைபெற்ற போட்டியில், தமிழ்நாடு பொலிஸ் - சென்னை அணியும், திருவனந்தபுரத்தைச் சார்ந்த ஸ்டேட் பாங்க் ஆஃப் திருவாங்கூர் அணியும் மோதின.
இரு அணிகளும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியபோதிலும், திருவனந்தபுரம் அணியின் ஆட்டத்தில் நல்ல நேர்த்தி இருந்தது. ஆட்டம் துவங்கிய 6ஆவது நிமிடத்திலும், 47ஆவது நிமிடத்திலும், அந்த அணியின் வீரர் ஷெரீஃப் இரண்டு கோல்களை அடித்தார். மறுமுனையில், சென்னை அணியினர் முழு பலத்துடன் விளையாடியும் கோல் எதுவும் அடிக்காததால், ஸ்டேட் பாங்க் ஆஃப் திருவாங்கூர் அணி 2-0 என்ற கோல் கணக்கில் தமிழ்நாடு பொலிஸ் - சென்னை அணியை வீழ்த்தி, அரையிறுதிக்குள் நுழைந்தது.
நேற்றைய ஆட்டத்தில், காயல்பட்டினம் நகரின் பொதுநல ஆர்வலரும், ஹாங்காங் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவருமான ஹாஜி ஏ.எஸ்.ஜமால் என்ற ஜமால் மாமா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அவருக்கு சுற்றுப்போட்டிக் குழுவின் சார்பில் ஏ.எஸ்.புகாரீ சால்வை அணிவித்தார்.
பின்னர், உமர் ஒலி தலைமையிலான சுற்றுப்போட்டிக் குழுவினர், ஈரணி வீரர்களையும் சிறப்பு விருந்தினருக்கு அறிமுகம் செய்து வைத்தனர்.
நேற்று நடைபெற்ற போட்டியை, நகரின் அனைத்துப் பகுதிகளைச் சார்ந்த கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் கண்டுகளித்தனர்.
|