அ.தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்து ஓராண்டுகள் மே 16 (நேற்று) அன்று நிறைவுற்றது. ஓராண்டில் நிறைவேற்றப்பட்ட பணிகளை பாராட்டி
அமைச்சர்கள் சட்டசபையில் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
அன்றைய தினம் முதலமைச்சர் சட்டசபையில் உரையாற்றினார். அதன் முழு விபரம் வருமாறு:-
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் நல்லாசியுடனும், தமிழக மக்களின் ஒருமித்த ஆதரவுடனும் மூன்றாவது முறையாக ஆட்சிப் பொறுப்பை
ஏற்றுள்ள எனது தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு தனது முதலாவது ஆண்டிலேயே மக்கள் மன நிறைவு
அடையும் வகையில், மன நிம்மதி அடையும் வகையில், மகிழ்ச்சி அடையும் வகையில், மகத்தான சாதனைகளைப் புரிந்து, இரண்டாம் ஆண்டில்
இன்று அடியெடுத்து வைக்கிறது. ஒற்றை வரியிலே சொல்ல வேண்டுமென்றால், கொடுங்கோன்மை அகன்று செங்கோன்மை நிலை
நாட்டப்பட்டு இருக்கிறது. இதனையொட்டி, சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் இங்கே என்னை வாழ்த்தியும், பாராட்டியும் பேசினார்கள்.
இந்த மாமன்றத்திலே, இந்த அரசின் சாதனைகளை பாராட்டி வாழ்த்துரை வழங்கியவர்களுக்கும், அதைக் கேட்டு ஆனந்தத்தில் திளைத்துக்
கொண்டிருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், எதிர்க்கட்சி என்றால் அரசின் செயல்பாடுகளை பாராட்டுவது மட்டுமல்லாமல், குறைகள் என தாங்கள்
கருதுவதை எடுத்துச் சொல்ல வேண்டும் என்ற அடிப்படையில் பேசியவர்களுக்கும், எதிர்க்கட்சி என்றால் அரசை பாராட்டவே கூடாது என்ற
கொள்கை கொண்டவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த அரசு தனது 100-வது நாளை நிறைவு செய்தபோது, இங்கே பேசிய அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் முழு மனதோடு அரசின்
செயல்பாடுகளை பாராட்டி இந்த மன்றத்திலே பேசினார்கள். அப்பொழுதே நான் என் உள்ளம் திறந்து சில கருத்துகளை எடுத்துக் கூறினேன். இந்த
அரசின் செயல்பாடுகள் தொடர்ந்து அனைவரும் பாராட்டும்படி அமைய வேண்டுமே என்ற எனது உணர்வினை வெளிப்படுத்தினேன். அவ்வாறு
எல்லோரும் பாராட்டும்படியான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுப்பது மிகப் பெரிய சவால் என்ற என் கருத்தையும் அப்போது தெரிவித்தேன். அந்தச்
சவாலை இன்று வரை செம்மையாக சமாளித்து வந்துள்ளேன் என்பதையும், அதற்கேற்றாற்போல், இந்த அரசின் செயல்பாடுகள் அமைந்துள்ளன
என்பதையும் உங்களின் பேச்சுக்களில் இருந்து நான் தெரிந்து கொண்டேன்.
ஜனநாயகம் என்பது ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற இரண்டும் சேர்ந்ததுதான். எதிர்க்கட்சி இல்லாமல் ஜனநாயகத்தை நிலை நிறுத்த முடியாது
என்பதுதான் எனது திடமான எண்ணமாகும். எந்த ஒரு பிரச்சனையிலும் பல்வேறு வகையான கருத்துகள் வெளிப்பட்டால் தான், அந்தக் கருத்துகளை
சீர்தூக்கிப் பார்த்து பெரும்பான்மையோருக்கு பயனளிக்கக்கூடிய நடவடிக்கைகளை எடுக்க இயலும். இதைத் தான், John Stuart Mill,
The only way in which a human being can make some approach to knowing the whole of a subject, is by hearing what can be said
about it by persons of every variety of opinion, and studying all modes in which it can be looked at by every character of
mind
என்று கூறியிருக்கிறார்.
இவ்வாறு மாறுபட்ட சிந்தனைகளை செவிமடுத்து, ஒரே பொருள் பற்றிய வேறு வேறு கருத்துகளையும் சீர்தூக்கிப் பார்த்தால் தான் பெரும்பான்மையான
மக்களுக்கு நன்மை செய்ய இயலும். அப்பொழுதுதான், It is the greatest good to the greatest number of people என்று Jeremy
Bentham அவர்கள் கூறியது போல், மிக அதிகமானவர்களுக்கு, மிக அதிகமான நன்மையை செய்யக்கூடிய ஜனநாயகம் தழைத்தோங்க இயலும்.
எதிர்க்கட்சி என்றால் அரசின் கொள்கைகளை, திட்டங்களை எதிர்க்கின்ற கட்சி என்ற பொருள் இல்லை. அரசு திட்டங்களின் நிறை குறைகளை
எடுத்துச் சொல்லி, குறைகளை களைவதற்கான ஆலோசனைகளை வழங்குவது தான் எதிர்க்கட்சிக்கு இலக்கணமாக அமைய வேண்டும்.
ஆளுங்கட்சி கொதிக்கிற சோறு என்றால், எதிர்க்கட்சி பதம் பார்க்கிற அகப்பை என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் கூறுவார்கள். அகப்பை
இல்லாமல், சோற்றை கையை வைத்து பதம் பார்க்க முடியாது என்பது உண்மை தான். சோற்றை பதம் பார்க்க அகப்பை
பயன்படுத்தப்பட வேண்டும். இந்த அடிப்படையில், ஆக்கப்பூர்வமான கருத்துகளை, ஆலோசனைகளை, அறிவுரைகளை எதிர்க்கட்சியினர்
தெரிவிக்கும்போது, அதனை இந்த அரசு கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பதை இந்த மாமன்ற
உறுப்பினர்கள் நன்கு அறிவார்கள். இதற்கு ஒன்றிரண்டு உதாரணங்களை மட்டும் இங்கே எடுத்துக்கூற விரும்புகிறேன்.
உள் துறை மானியக் கோரிக்கையின்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த மாண்புமிகு உறுப்பினர் செல்வி பாலபாரதி அவர்கள் காவல்
துறையினருக்கு வழங்கப்பட்டுள்ள Canteen வசதியை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை பணியாளர்களுக்கும் நீட்டித்துத்
தர வேண்டும் என்று விடுத்த கோரிக்கையை ஏற்று, அதற்கான அறிவிப்பை அன்றே நான் வெளியிட்டேன்.
மேலும், காவலர்கள் ஓய்வு பெற்ற பின் அவர்களுக்கு சொந்த வீடு கிடைக்க ஆவன செய்ய வேண்டும் என்று காவல் துறை மானியக் கோரிக்கையின்
போது சில உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்ததை ஏற்று, அரசு அதற்கான ஒரு திட்டம் தீட்டி செயல்படுத்தும் என்று அன்றே அறிவித்தேன். அதன்படி,
காவல் துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் பணிபுரியும் சீருடைப் பணியாளர்களுக்கு ‘உங்கள் சொந்த இல்லம்’
திட்டத்தின்கீழ் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என்ற அறிவிப்பினை சட்டமன்றப் பேரவை விதி 110-ன்கீழ் நான் வெளியிட்டேன்.
அதற்கு நன்றி தெரிவிக்கும் போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் மாண்புமிகு திரு. ஆறுமுகம், மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர் மாண்புமிகு
திரு சவுந்தரராசன், இந்தத் திட்டம் சிறைத் துறைக் காவலர்களுக்கும் நீட்டிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததின் பேரில், அந்தக்
கோரிக்கையும் உடனடியாக என்னால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இதே போன்று, மாண்புமிகு உறுப்பினர்கள் கோரிக்கையினை ஏற்று, சிறைத் துறையில் பணிபுரிபவர்களுக்கும் Canteen வசதியை விரிவுபடுத்தி
அறிவித்தேன்.
உயர் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, அரசு மற்றும் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் உள்ள உட்கட்டமைப்பு
வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்த எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கருத்தினை ஏற்று, அரசு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழக
உறுப்புக் கல்லூரிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் 100 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும் என்ற அறிவிப்பினை இந்தப் பேரவையில் நான்
வெளியிட்டேன்.
போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கையின்போது, ஓய்வு பெற்ற போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு ஓய்வுகாலப் பயன்கள் காலத்தே
வழங்கப்படுவதில்லை என்றும், அதை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மாண்புமிகு
உறுப்பினர் திரு. எம். ஆறுமுகம் மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாண்புமிகு உறுப்பினர் திரு. ஜே.ஜி. பிரின்ஸ் ஆகியோர் கோரிக்கை
விடுத்தார்கள்.
இதே போன்று, போக்குவரத்துக் கழகங்களில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்
திரு. பாலகிருஷ்ணன் மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த மாண்புமிகு உறுப்பினர் திரு. ஜே.ஜி. பிரின்ஸ்
ஆகியோர் சுட்டிக்காட்டினார்கள். இவற்றை ஆராய்ந்து, 2010 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் ஓய்வு பெற்ற போக்குவரத்துத்
தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை வழங்குவதற்கும், காலிப் பணியிடங்களை நிரப்புவதற்குமான அறிவிப்பினை இந்தப் பேரவையில்
நான் அறிவித்தேன்.
இவ்வாறு, எதிர்க்கட்சியினர் எடுத்துக்கூறும் ஆக்கப்பூர்வமான கருத்துகளுக்கு உரிய மதிப்பளித்து அவற்றை செயல்படுத்தும் அரசாக எனது
தலைமையிலான அரசு விளங்கி வருகிறது. இவ்வாறு எதிர்க்கட்சிகள் சோற்றை பதம் பார்க்கிற அகப்பையாக விளங்க வேண்டும்.
ஆனால், சோற்றை பதம் பார்க்கிறேன் என்று கூறி பானையை உடைக்கும் பணியில் அகப்பை ஈடுபடுமானால், அகப்பையைப் பதம் பார்க்க வேண்டிய
நிலைமை தான் ஏற்படும் என்பதை பணிவன்புடன் இங்கே தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.
எவரெஸ்ட் சிகரத்தின் மீது முதன் முதலாக ஏறி சாதனை படைத்தவர்கள் நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த எட்மண்ட் ஹிலாரி (Edmund Hillary)
மற்றும் நேபாள நாட்டைச் சேர்ந்த டென்சிங் நார்கே (Tenzing Norgay) ஆகியோர் ஆவர். இதே நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த மற்றொரு மலை ஏறும்
வீரர் மார்க் இங்லிஸ் (Mark Inglis) நியூசிலாந்தில் உள்ள குக் (Cook) என்ற சிகரம் மீது ஏறிக் கொண்டு இருந்தார். அப்போது, தட்பவெட்ப
நிலை மாறுதல் காரணமாக, மார்க் இங்லிஸ் ஏறிக்கொண்டிருந்த பகுதி பனியால் உறைந்துவிட்டது. இதன் காரணமாக அவர் மலையில் இருந்த ஒரு
குகையில் தங்கும் நிலை ஏற்பட்டது. பின்னர் அவர் மீட்கப்பட்டாலும், இங்லிஸின் இரண்டு கால்களும் முழங்காலுக்கு கீழே துண்டாகிவிட்டன.
மலையேறும் வீரருக்கு கால்கள் தான் முக்கியமானது. இருந்தாலும், இங்லிஸ் மனம் தளரவில்லை. செயற்கை கால்களை பொருத்திக் கொண்டு
மீண்டும் பயிற்சியில் ஈடுபட்டார். உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட் சிகரத்தை அடைய வேண்டும் என்று திட்டமிட்டார். அதன்படி, தீவிரப்
பயிற்சிக்குப் பிறகு எவரெஸ்ட் சிகரத்தின்மீது ஏறிக்கொண்டிருந்த போது, 6,400 மீட்டர் உயரத்தில் இங்லிஸ்க்கு ஒரு சோதனை ஏற்பட்டது.
அவர் அணிந்திருந்த இரண்டு செயற்கை கால்களில் ஒன்று சேதமடைந்தது. இருப்பினும், கைவசம் தயாராக வைத்திருந்த செயற்கைக் காலை
பொருத்திக் கொண்டு தொடர்ந்து சிகரம் ஏறி, தான் நினைத்த சாதனையை எய்தினார் இங்லிஸ். இரண்டு கால்களையும் இழந்த ஒருவர்
நடக்க நினைப்பதே அரிதான ஒன்று. ஆனால், தன் விடா முயற்சியாலும், பயிற்சியாலும் இந்த சாதனையை இங்லிஸ் படைத்தார்.
இங்லிஸ் எப்படி பல்வேறு தடைகளை தகர்த்தெறிந்து சாதனைப் படைத்தாரோ, அது போல் தான் இந்த அரசு, முந்தைய மைனாரிட்டி தி.மு.க.
அரசால் விட்டுச் செல்லப்பட்ட கடன்கள், நிர்வாகச் சீர்கேடு, நிதிச் சீர்கேடு, தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பரிதாபகரமான நிலைமை, அரசு
போக்குவரத்துக் கழகங்களின் அவல நிலைமை, ஆவின் நிறுவனத்தின் அலங்கோல நிலைமை, மத்திய அரசின் பாராமுகம் என பல்வேறு
சவால்களையும், சோதனைகளையும் எதிர்கொண்டு, தடைக் கற்களை படிக்கற்களாக்கி, முள் பாதையை மலர் பாதையாக்கி மிகக் குறுகிய காலத்தில்,
அதாவது இந்த ஓராண்டிலேயே மகத்தான சாதனைகளை படைத்து இருக்கிறது.
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, ஓடுகின்ற நதியில், பாய்கின்ற ஆற்றில் ஒரு ஈர்ப்பு சக்தி இருக்கும். அதற்குப் பெயர் தான் கரண்ட்.
அந்த ஆற்றில், நதியில் நீந்த வேண்டும் என்று நினைப்பவர் அந்த நீர் ஒடுகின்ற பாதையிலேயே, அந்த ஈர்ப்பு சக்தி, கரண்ட் பாய்கின்ற
திசையிலேயே நீந்திச் சென்றால் நீந்துவது என்பது மிகவும் எளிதான காரியம். அவர் எந்த சிரமும்பட வேண்டிய அவசியம் இல்லை. அந்த கரண்டே
அவரை ஈர்த்துச் சென்று அக்கரையில் சேர்த்துவிடும். ஆனால், அதற்கு மாறாக ஒருவர் சந்தர்ப்ப சூழ்நிலையால் அந்தக் கரண்டை
எதிர்த்து எதிர் நீச்சல் போட வேண்டுமென்றால் அதைப் போன்ற ஒரு கடினமான காரியம் இந்த உலகத்திலேயே இருக்க முடியாது. அந்த ஈர்ப்பு சக்தி
ஒரு திசையில் கொண்டு செல்லும், நீரைக் கொண்டு செல்லும். அந்த நீரில் எவ்வளவு பெரிய கனமான பொருள் விழுந்தாலும்,
அதையும் ஈர்த்துச் செல்லும். மிகப் பெரிய மரம் விழுந்தால் கூட அதையும் அந்தக் கரண்ட் இழுத்துச் செல்லும். அத்தகைய சக்தி வாய்ந்த கரண்டிற்கு
எதிராக எதிர்நீச்சல் போட்டு வெற்றிகரமாக அக்கரைக்குப் போய்ச் சேர வேண்டுமென்றால் அது எவ்வளவு பெரிய சாதனை என்பதை எண்ணிப் பார்க்க
வேண்டும். அத்தகைய சாதனையைத்தான் எனது தலைமையிலான அரசு இந்தக் கடந்த ஓராண்டு காலத்தில் செய்து காட்டியிருக்கிறது, வெற்றி
படைத்திருக்கிறது என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும், இங்கே இல்லாமை இல்லாத நிலை வேண்டும் என்ற எனது எண்ணத்தின் அடிப்படையில் தான், வாழ்வாதாரம்
ஏதுமில்லாத ஏழை, எளிய, அடித்தளத்து மக்களுக்கு 1,000 ரூபாய் ஓய்வூதியம்; உணவுப் பாதுகாப்பை அனைவரும் பெற வேண்டும் என்ற
அடிப்படையில் தான் விலையில்லா அரிசி; தாய்மார்களின் வேலைப் பளுவை குறைக்கும் வகையில், விலை ஏதுமின்றி மிக்சி, கிரைண்டர் மற்றும்
மின்விசிறி வழங்குதல்; ஏழை, எளிய மக்களுக்கு விலை ஏதுமில்லாமல் பசுமை வீடுகள் வழங்குதல் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு
வருகின்றன.
மனித வள மேம்பாட்டிற்கென பல திட்டங்களை எனது அரசு அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவ – மாணவியருக்கு
விலையில்லா மடிக் கணினி; இடை நிற்றலைத் தடுக்கும் வகையில், பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவ-மாணவியருக்கு கல்வி
ஊக்கத் தொகை வழங்குதல்; விலையில்லா சீருடைகள், பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், காலணிகள், புத்தகப் பைகள், Geometry Box
போன்ற உபகரணங்கள் வழங்குதல்; மேல் கல்விக்கான உதவித் தொகை வழங்குதல்; விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ-மாணவியருக்கு
உணவுப் படி அதிகரிப்பு; விடுதிகளுக்கு சொந்தக் கட்டடங்கள் கட்டுதல்; வளரிளம் பெண்களுக்கு விலையில்லா சானிடரி நாப்கின் வழங்குதல்;
பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில், உயர்த்தப்பட்ட திருமண நிதி உதவியுடன் தாலிக்கு 4 கிராம் தங்கம் வழங்குதல்; மகப்பேறு நிதி உதவியை
உயர்த்தி வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
சுகாதாரக் குறியீடுகளை மேம்படுத்தும் வகையில், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்கள்
செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
விவசாயிகள், மீனவர்கள், கால்நடை பராமரிப்போர், என முதன்மைத் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் வாழ்க்கை தரம் உயரும் வகையில்
பல்வேறு திட்டங்களை எனது அரசு செயல்படுத்தி வருகிறது. ஏழை, எளிய மக்கள் தங்கள் சொந்தக் கால்களிலேயே நிற்க வழிவகை செய்யும்
வண்ணம், அவர்களுக்கு விலையில்லா கறவைப் பசுக்கள், ஆடுகள் வழங்கும் முன்னோடித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதே போன்று, பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான பல்வேறு திட்டங்களையும் எனது
அரசு செயல்படுத்தி வருகிறது.
நாட்டில் உள்ளோர், வாழ்வில் வளம் பெற வேண்டுமெனில் நாட்டின் பொருளாதாரம் மகத்தான வளர்ச்சி பெற வேண்டும். அதற்குத் தேவையான
உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்திட வேண்டும். சிறந்த உட்கட்டமைப்பு வசதிகள் இருந்தால்தான் தொழில் முனைவோர் இங்கே தொழில் தொடங்க
முன்வருவர். இதனைக் கருத்தில் கொண்டு, பலப்பல உட்கட்டமைப்பு வசதிகளை எனது அரசு ஏற்படுத்தி வருகிறது. அனைத்துத் துறைகளிலும்
தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்வதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட்ட தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் 2023 தயாரிக்கப்பட்டுள்ளது.
அளப்பறிய சாதனைகளை இந்த ஓர் ஆண்டில் எனது அரசு நிகழ்த்தியிருந்தாலும், மின் பற்றாக்குறை இன்னமும் நீக்கப்படவில்லை என்பதை நான்
நன்கு உணர்ந்துள்ளேன். மின் பற்றாக்குறையை நீக்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எனது அரசு முனைப்புடன் எடுத்து வருகிறது.
விரைவில் தமிழகத்தில் உள்ள மின் பற்றாக்குறை நீக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த ஓராண்டில் எனது தலைமையிலான அரசு செய்துள்ள சாதனைகள் எண்ணற்றவை என்றாலும், மேன்மேலும் சாதனைகள் பல தொடர வேண்டும்
என்பதே எனது விருப்பம். இந்த ஓராண்டு சாதனைகள் இன்னும் பல சாதனைகளை எட்டுவதற்கான அடித்தளமாக அமையும். மக்களின் கனவுகள்
திட்டங்களாக உருப்பெறுகின்றன. இந்தத் திட்டங்கள் உடனடியாக செயல்வடிவம் பெற்று அதன் பயன்கள் மக்களை சென்றடைய வேண்டும் என்பதே
எனது குறிக்கோள் ஆகும். அதற்கேற்ற நடவடிக்கைகளை நாள்தோறும், நாள்தோறும் எனது அரசு எடுத்து வருகிறது.
வீணையின் நரம்புகள் தனித்தனியாக இருந்தாலும், அதை விரலாலே மீட்டுகின்ற போது, ஒரே இசையை எழுப்புவதைப் போல, அனைத்துக்
கட்சியினருக்கும் பொதுவான நோக்கமாக விளங்கும் தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் தமிழக மக்களின் வளர்ச்சி ஆகியவற்றை மேம்படுத்தும் எனது
நடவடிக்கைகளுக்கும், தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டும் எனது முயற்சிக்கும், அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைத்துக் கட்சியினரும்
உறுதுணையாக இருக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
எனக்கு இந்த மாமன்றத்திலே அளிக்கப்பட்ட பாராட்டுரைகளை என்னை முதலமைச்சராக்கிய தமிழக மக்களுக்கு அர்ப்பணித்து அமைகிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் உரை நிகழ்த்தினார்.
தகவல்:
இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை,
தலைமைச் செயலகம், சென்னை. |