காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் ஏற்பாட்டில், ஹாங்காங் வாழ் காயலர்கள் இன்பச் சிற்றுலா சென்று, சிறுவர் முதல் பெரியோர் வரை அனைவரும் விளையாடி மகிழ்ந்துள்ளனர்.
இன்பச் சிற்றுலா குறித்து, அவ்வமைப்பின் சிற்றுலா ஒருங்கிணைப்பாளர்களான எஸ்.எச்.ரியாஸ் முஹம்மத், எஸ்.ஏ.முஹம்மத் நூஹ் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
இறையருளால், எமது காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை ஹாங்காங் அமைப்பின் சார்பில், கடந்த 06.05.12 அன்று - குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரையும் விளையாட வைக்கும் இடங்களில் ஒன்றான வு க்வாய் ஷா யூத் விலேஜ் (Wu Kwai Sha Youth Village) என்ற இடத்திற்கு செல்வதற்கு காலை 09.00 மணிக்கு ஓரிடத்தில் ஒன்று கூடி இரண்டு பேருந்துகளில் சிற்றுலா இடத்தை வந்தடைந்தனர் ஹாங்காங் வாழ் காயலர்கள். மொத்தம் 120 பேரை உள்ளடக்கிய சிற்றுலாக் குழுவினர் காலை 10.15 மணியளவில் சிற்றுலா இடத்தை வந்தடைந்தனர்.
அங்கு ஓரிடத்தில் அனைவருக்கும் துவக்கமாக குளிர்பானம் பரிமாறப்பட்டது. பிறகு காயல்பட்டினம் ஐக்கிய பேரவை - ஹாங்காங் அமைப்பின் தலைவர் அப்துல் அஜீஸ் விளையாட்டு வசதிகளைப் பற்றி விளக்கிப் பேசினார். அதனைத் தொடர்ந்து, அனைவரும் கலைந்து சென்று தமக்குப் பிடித்தமான விளையாட்டுகளை விளையாட களமிறங்கினர்.
குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் நீச்சல் குளத்தில் நீந்தியும், இதர விளையாட்டுகளிலும் மகிழ்வுற பொழுதைக் கழித்தனர்.
பின்னர், சிற்றுலா ஏற்பாட்டுக் குழுவினரால் வெளியில் ஆயத்தம் செய்து கொண்டு வரப்பட்ட மதிய உணவு அனைவருக்கும் பரிமாறப்பட்டது.
மதிய உணவுக்குப் பின்னர், குழந்தைகளுக்கான போட்டிகள், பெண்களுக்கே உரித்தான பந்து வீசல் போட்டி உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டிகளில் வென்ற முதல் மூன்று பேருக்கு பணப் பரிசுகள் வழங்கப்பட்டது.
இறுதியாக, குலுக்கல் முறையில் அதிர்ஷ்டசாலிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டது. சிற்றுலாவில் கலந்துகொண்ட சிலர் அப்பரிசுகளுக்கு அனுசரணையளித்திருந்தனர்.
இச்சிற்றுலாவில், ஹாங்காங்கிற்கு வருகை தந்துள்ள - சென்யைில் தொழில் செய்து வரும் காயல்பட்டினத்தைச் சார்ந்த அப்துல் அஜீஸ், மீராஸாஹிப் ஆகியோரும், சீனாவில் வசித்து வரும் சதக் தம்பி அவர்களும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
மாலை 05.30 மணிக்கு சிற்றுலா நிகழ்வுகள் யாவும் நிறைவுற்றன. பின்னர், ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேருந்துகளில் அனைவரும் வசிப்பிடம் திரும்பினர்.
இவ்வாறு காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் சிற்றுலா ஒருங்கிணைப்பாளர்களான எஸ்.எச்.ரியாஸ் முஹம்மத், எஸ்.ஏ.முஹம்மத் நூஹ் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படங்கள்:
D.இஸ்மாஈல்,
மற்றும்
காழி அலாவுத்தீன்,
கவ்லூன், ஹாங்காங். |