காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க நிர்வாகத்தின் சார்பில், ஆண்டுதோறும் மே மாதத்தில், “மவ்லானா அபுல்கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பை”க்கான அகில இந்திய கால்பந்து போட்டி என்ற பெயரில் கால்பந்து சுற்றுப்போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டு போட்டிகள் மே மாதம் 09ஆம் தேதியன்று (இன்று) துவங்கி, 27ஆம் தேதி நிறைவுறுகிறது.
10.05.2012 அன்று (நேற்று) நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் பெங்களூரு சதர்ன் ப்ளூஸ் அணியும், சென்னை மாநகர காவல்படை அணியும் மோதின. துவக்கம் முதலே ஆட்டம் விறுவிறுப்பாக சென்றது.
ஆட்டத்தின் 11ஆவது நிமிடத்தில், சென்னை அணியின் பரத் கிங்ஸ்லீ தனதணிக்கான முதல் கோலை அடித்தார். 59ஆவது நிமிடத்தில், கோல் கம்பத்தை நெருங்கி பந்தை உதைக்க ஆயத்தமான சென்னை வீரரை பெங்களூரு வீரர் தவறான முறையில் தடுத்ததால், சென்னை அணிக்கு ஃப்ரீ கிக் வாய்ப்பு வழங்கப்பட்டது. அதனை சரியாகப் பயன்படுத்திக்கொண்ட அந்த அணியின் வீரர் அண்ணாமலை அற்புதமாக ஒரு கோலை அடித்தார்.
ஆட்டத்தின் 82ஆவது நிமிடத்தில், சென்னை அணியின் பரத் கிங்ஸ்லீ மீண்டும் கோல் அடித்து, தனதணியின் கோல் எண்ணிக்கையை 3 ஆக்கினார். பின்னர், ஆட்ட நேர இறுதி வரை பெங்களூரு அணி கோல் எதுவும் அடிக்காததால், சென்னை அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
நேற்றைய ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் அடிக்கடி மோதிக்கொண்டு, அடிதடியில் இறங்கினர். அதனையடுத்து, ஆட்ட நடுவர்கள் அவ்வப்போது மஞ்சள் அட்டையைக் காண்பித்து எச்சரிக்கை வழங்கியவண்ணம் இருந்தனர். ஆட்டத்தின் 36ஆவது நிமிடத்தில் சென்னை அணியின் சசிகுமார் என்ற வீரருக்கு சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு, அவர் வெளியேற்றப்பட்டார். எனவே, எஞ்சிய போட்டி நேரத்தில் 10 பேருடன் சென்னை அணியினர் ஆடினர்.
இப்போட்டியை, நகரின் பல பகுதிகளிலிருந்தும் திரளான ரசிகர்கள் கண்டு களித்தனர்.
|