காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க நிர்வாகத்தின் சார்பில், ஆண்டுதோறும் மே மாதத்தில், “மவ்லானா அபுல்கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பை - 2012”க்கான அகில இந்திய கால்பந்து போட்டி என்ற பெயரில் கால்பந்து சுற்றுப்போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டு போட்டிகள் மே மாதம் 09ஆம் தேதியன்று (இன்று) துவங்கி, 27ஆம் தேதி நிறைவுறுகிறது.
சுற்றுப்போட்டி துவக்க விழா 09.05.2012 அன்று (நேற்று) மாலை 04.30 மணியளவில், ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு கால்பந்துக் கழகத்தின் தலைவரும், சேது பொறியியல் கல்லூரியின் இயக்குநருமான எஸ்.எம்.சீனி முஹ்யித்தீன் இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, சுற்றப்போட்டியைத் துவக்கி வைத்தார்.
இந்திய நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஏ.டி.கே.ஜெயசீலன், தமிழ்நாடு கால்பந்துக் கழக முன்னாள் செயலாளர் சதாச்சரம், தூத்துக்குடி மாவட்ட கால்பந்துக் கழக துணைத்தலைவர் ஸ்ரீதர் ரோட்ரிகோ, அதன் பொருளாளர் ஆல்ட்ரின் மிராண்டா, அதன் செயற்குழு உறுப்பினரும், காயல்பட்டினம் காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் (கே.எஸ்.ஸி.) செயலருமான பேராசிரியர் சதக்கு தம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
துவக்க ஆட்டத்தில் சென்னை மாநகர காவல் படை அணியும், திருவனந்தபுரத்தைச் சார்ந்த கோவளம் கால்பந்துக் கழக அணியும் மோதின. சிறப்பு விருந்தினர் மற்றும் முன்னிலை வகித்தோருக்கு, ஐக்கிய விளையாட்டு சங்க தலைவர் ஹாஜி பி.எஸ்.ஏ.பல்லாக் லெப்பை, துணைத்தலைவர் ஹாஜி எஸ்.எம்.உஸைர் மற்றும் சுற்றுப்போட்டி ஏற்பாட்டுக் குழுவினர் இரு அணி வீரர்களையும் அறிமுகம் செய்து வைத்தனர். அவர்களுக்கு ஐக்கிய விளையாட்டு சங்க நிர்வாகம் சார்பில் சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டது.
ஆட்டம் துவங்குமுன், ஐக்கிய விளையாட்டு சங்கத்தின் - அண்மையில் காலமான உறுப்பினர்கள், தமிழ்நாடு கால்பந்துக் கழக முன்னாள் செயலாளர் டாக்டர் கருணா செல்லையா, தூத்துக்குடி மாவட்ட கால்பந்துக் கழக துணை செயலாளர் செல்வம் ஃபர்னான்டோ ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஆட்டம் துவங்கி முதல் முதல் பாதி நிறைவுறும் நேரத்தில், சென்னை அணி வீரர் பரத் கிங்ஸ்லீ தனதணிக்கான முதல் கோலையும், இரண்டாவது பாதியில் 2ஆம், 4ஆம் கோலையும் அடித்தார். சஞ்ஜய் 3ஆவது கோலையும், ஜெரால்ட் 5ஆவது கோலையும் அடித்தனர்.
ஆட்ட நேர இறுதி வரை திருவனந்தபுரம் அணி கோல் எதுவும் அடிக்காததால், 5-0 என்ற கோல் கணக்கில் சென்னை அணி வெற்றிபெற்றது. இப்போட்டியை, நகரின் அனைத்துப் பகுதிகளைச் சார்ந்த கால்பந்தாட்ட ரசிகர்கள் திரண்டிருந்து, கண்டு களித்தனர்.
‘ஆடு‘களமானது ஆடுகளம்!
ஆட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கையில், திடீரென ஒருபுறக் கதவு திறந்ததால், சில ஆடுகள் மைதானத்திற்குள் நுழைந்து, எந்தச் சலனமுமின்றி மறுபுறமாக திரும்பிச் சென்றன. இதனைக் கண்ணுற்ற ரசிகர்கள் உற்சாகத்தில் குரலெழுப்பினர்.
ஆட்ட இடைவேளையில், சிறப்பழைப்பாளர்களுக்கு ஐக்கிய விளையாட்டு சங்க அலுவலகத்தில் சிற்றுண்டியுபசரிப்பு நடைபெற்றது.
நேற்று வெற்றி பெற்ற சென்னை மாநகர காவல் படை அணி, இன்று மாலையில் பெங்களூரு சதர்ன் ப்ளூஸ் அணியுடன் மோதவுள்ளது. |