இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் 02.05.2012 அன்று தூத்துக்குடியில் நடைபெற்றுள்ளது.
இக்கூட்டம் குறித்து, அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செய்தித் தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் கூட்டம், 02.05.2012 அன்று இரவு 07.30 மணியளவில், மாவட்ட தலைவர் பி.மீராசா தலைமையில், தூத்துக்குடி தெற்கு புதுத் தெருவில் நடைபெற்றது.
மாவட்ட கவுரவ தலைவர் அப்துல் கனி, காயல்பட்டினம் நகர தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் சிறப்பு விருந்திராகக் கலந்துகொண்டார்.
அறிமுகவுரை:
அக்கட்சியின் மாவட்ட செய்தித் தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். மாவட்ட துணைத்தலைவர் ஹாஜி மன்னர் பாதுல் அஸ்ஹப் அனைவரையும் வரவேற்றதோடு, கூட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கிப் பேசினார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், தேசிய செயலாளரும் - கேரள சட்டமன்ற உறுப்பினருமான பன்மொழிப் பேச்சாளர் அப்துஸ்ஸமது ஸமதானீ ஆகியோரின் காயல்பட்டினம் வருகை - அதனையொட்டி நடத்தப்பட வேண்டிய நிகழ்ச்சிகள் குறித்த கலந்தாலோசனை, சாதிவாரி கணக்கெடுப்பை மாவட்டம் முழுவதும் முறைப்படுத்தி செய்தல் ஆகிய அம்சங்கள் குறித்து இக்கூட்டத்தில் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படவுள்ளதாக அப்போது அவர் தெரிவித்தார்.
தலைமையுரை:
பின்னர், மாவட்ட தலைவரும் - கூட்டத் தலைவருமான பி.மீராசா தலைமையுரையாற்றினார்.
மூத்த நிர்வாகிகளின் உடல் பலவீனம் காரணமாக மாவட்டத்தில் கட்சிப் பணிகள் தொய்வுற்றிருந்த வேளையில் தன்னிடம் தலைமைப் பொறுப்பு அளிக்கப்பட்டதாகவும், அன்று முதல் தன்னாலியன்ற வரை சிறப்புற கட்சிப்பணிகளை செய்து வந்ததன் பலனாக மாவட்டத்தில் இன்று கட்சி நல்ல நிலையில் சென்றுகொண்டிருப்பதாகவும் தெரிவித்த அவர், குடும்பச் சூழல் காரணமாக தான் பெரும்பகுதி சென்னையில் குடும்பத்துடன் வசிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டதால், கட்சிப் பணிகள் பாதிக்கப்படாதிருக்கும் பொருட்டு, மாவட்டத்தின் அனைத்து நிர்வாகிகளும் தனக்கு முழு ஒத்துழைப்பளிக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.
திமுகவின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் என்.பெரியசாமி, தமிழக முன்னாள் அமைச்சர் பெ.கீதாஜீவன், அஇஅதிமுகவின் தற்போதைய அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் ஆகியோருடன் தனக்கு நெருங்கிய தொடர்புள்ளதாகவும், யாரையும் எதற்காகவும் பகைத்துக்கொள்ளாமல், அவ்வப்போது ஆட்சியிலிருப்போரிடம் நம் சமுதாயத்திற்குத் தேவையானவற்றைக் கேட்டுப் பெறுவதற்கு இந்த உறவுகள் பயன்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
காயல்பட்டினத்தில் அரசு நூலக கட்டிட விரிவாக்கப் பணிகளுக்கான அரசு ஒத்துழைப்புகளைப் பெற்றிட, தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியனை தான் தொடர்புகொண்டதாகவும், உடனடியாக அவர் அதற்கான ஏற்பாடுகளைச் செய்து தந்துள்ளதாகவும் தெரிவித்த அவர், கட்சிப் பணிகளிலோ, தனது தலைமைப் பொறுப்பிலோ குறைகளிருப்பின், அவற்றை உடனுக்குடன் திருத்திக்கொள்ளும் பொருட்டு, தயங்காமல் சுட்டிக்காட்டுமாறு கேட்டுக்கொண்டார்.
தூத்துக்குடியில் கட்சிப் பணிகளை முடுக்கவிடும் பொருட்டு, கண் சிகிச்சை இலவச முகாம், தண்ணீர் பந்தல், முத்துநகர் விரைவு வண்டியில் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் வரும்போது, தூத்துக்குடி தொடர்வண்டி நிலையத்தில் வரவேற்பளித்தல், கடந்த மார்ச் 10ஆம் தேதியன்று, முஸ்லிம் லீக் நிறுவன தினத்தில் தூத்துக்குடியில் கொடியேற்றுகையில் விடுபட்ட ரஹ்மத்துல்லாஹ்புரம் உள்ளிட்ட பகுதிகளில் பிறைக்கொடியேற்றம் உள்ளிட்ட பணிகள் அனைத்தும் இம்மாதத்திற்குள் செய்யப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தை அடிக்கடி நடத்தி, கட்சி நடவடிக்கைகள் குறித்து கலந்தாலோசித்தால், சமூகப் பணிகளுக்காக கட்சி இன்னும் வளர்ச்சிப் பாதையில் பயணிக்கும் என்று தெரிவித்த அவர், தற்போது நடைபெறும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில், மாவட்டத்தின் பல கிளை நிர்வாகிகள் வருகை தரவில்லை என்றும், அதற்கான காரணங்களை ஆய்ந்தறிந்து விரைந்து களைந்திட வேண்டுமென்றும் அவர் தனதுரையில் தெரிவித்தார்.
கருத்துப் பரிமாற்றங்கள்:
பின்னர், கூட்டத்தில் கலந்துகொண்டோர் கருத்துரையாற்றினர்.
துவக்கமாக, இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் காயல்பட்டினம் நகரச் செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூ ஸாலிஹ் உரையாற்றினார்.
தனிச்சின்னத்தைப் பாதுகாக்க வேண்டும்...
கட்சிக்கு தேசிய அளவில் தனிச்சின்னம் கிடைக்கப்பெற்றதை பெருமிதத்துடன் கூறிய அவர், தேர்தல் ஆணைய விதிகளின் படி, தனிச்சின்னத்தைப் பாதுகாப்பதற்காக உள்ள வழிமுறைகளை தவறாமல் பின்பற்றி, இச்சின்னத்தை முறைப்படி பாதுகாத்திட வேண்டியது ஒவ்வொரு முஸ்லிம் லீகனின் கடமையாகும் என்று கூறினார்.
இம்மாதம் 23ஆம் தேதி காயல்பட்டினத்தில் நடைபெறவுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர கிளை அலுவலகமான தியாகி பி.எச்.எம்.அப்துல் காதிர் மன்ஸில் திறப்பு விழாவில் மாவட்டத்தின் அனைத்துக் கிளை நிர்வாகிகளும், உறுப்பினர்களும் பெருந்திரளாகப் பங்கேற்க வருமாறு அவர் அழைப்பு விடுத்தார்.
அடுத்து, கட்சியின் தூத்துக்குடி மாநகர தலைவர் நவ்ரங் சஹாப்தீன் உரையாற்றினார். தூத்துக்குடி நகரில் நடைபெற்று வரும் கட்சிப் பணிகளை விளக்கிப் பேசிய அவர், இம்மாதம் 16ஆம் தேதியன்று நடைபெறவுள்ள தனது மகளின் திருமண நிகழ்ச்சியில் அனைவரும் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுத்தார்.
கேம்பலாபாத் பேருந்து நிறுத்தம்...
அடுத்து, கேம்பலாபாத் ஜமாஅத் தலைவரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கிளைத் தலைவருமான எம்.பி.எம்.அப்துல் காதிர் உரையாற்றினார். தமதூர் பேருந்து நிறுத்தத்தில் அரசு உத்தரவின்படி நின்று செல்ல வேண்டிய பல பேருந்துகள் நிற்காமலேயே சென்றுவிடுவதால், தம் பகுதி மக்கள் மிகவும் அவதியுறுவதாகவும், கட்சி நிர்வாகம் இது விஷயத்தில் அக்கறையெடுக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.
இளைஞர்களின் பங்களிப்பு...
அடுத்து, கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் உவைஸ் உரையாற்றினார். கட்சியின் மாவட்ட நிர்வாக நடவடிக்கைகளில் இளைஞர்களின் பங்களிப்பு குறித்து பேசிய அவர், கட்சியின் மாவட்ட மீனவரணி தலைவர் இல்லத்தில் இம்மாதம் 10ஆம் தேதி நடைபெறவுள்ள திருமண நிகழ்ச்சியில் அனைவரும் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுத்தார்.
மாணவர்களுக்கு பயிற்சி...
அடுத்து, காயிதேமில்லத் பேரவையின் காயல்பட்டினம் நகர அமைப்பாளர் ஆசிரியர் மு.அப்துல் ரசாக் உரையாற்றினார். கோடை விடுமுறையை முன்னிட்டு மாணவரணிக்கு - மக்கள் நலப் பணிகளாற்றுவது குறித்து நல்ல பயிற்சியளிக்க வேண்டுமென்றும், ஜூன் 05ஆம் தேதியன்று காயிதேமில்லத் ஸாஹிப் அவர்களின் பிறந்த நாளை கல்வி விழிப்புணர்வு நாளாகக் கொண்டாட வேண்டும் என்ற கட்சியின் கொள்கைப்படி, அவ்விழாவை சிறப்புற நடத்திட ஆவன செய்ய வேண்டுமென்றும், அதற்காக தான் முன்னின்று உழைக்க ஆயத்தமாக உள்ளதாகவும் தெரிவித்தார். அவர் தெரிவித்த அதே கருத்தை, கட்சியின் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் எம்.ஏ.சி.சுஹைல் இப்றாஹீம் வலியுறுத்திப் பேசினார்.
மதுரை விமான நிலையம் அருகில் மஸ்ஜித் கட்டுமானம்...
அடுத்து, கட்சியின் காயல்பட்டினம் நகர துணைச் செயலாளர் ஹாஜி என்.டி.அஹ்மத் ஸலாஹுத்தீன் உரையாற்றினார். மதுரை விமான நிலையம் அருகில் முஸ்லிம் குடியிருப்புகள் பெருகி வருவதைக் கருத்திற்கொண்டு, அப்பகுதியில் இறையில்லமான பள்ளிவாசலைக் கட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மூலம் அதற்கு முழு ஒத்துழைப்பளிக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.
சொந்தக் கட்டிடத்தில் கட்சி அலுவலகம்...
அடுத்து, காயல்பட்டினம் நகர துணைச் செயலாளர் துளிர் எம்.எல்.ஷேக்னா லெப்பை உரையாற்றினார். காயல்பட்டினத்தில் கட்சிக்காக சொந்தக் கட்டிடத்தில் அலுவலகம் அமைவதைப் போல, அகில இந்திய அளவில் கட்சியின் அனைத்துக் கிளைகளிலும் - குறிப்பாக தூத்துக்குடி மாநகரிலும் சொந்தக் கட்டிடத்தில் அலுவலகம் அமைத்திட முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும், ஒரு கட்சியின்பால் மக்கள் ஆர்வப்பட வேண்டுமெனில், மக்கள் பிரச்சினைகளில் கட்சி தலையிட வேண்டுமென்றும், அப்பணியை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிறைவாகச் செய்து வருவதாகவும் தெரிவித்தார்.
மாணவர் - மகளிர் மார்க்க விழிப்புணர்வு...
அடுத்து உரையாற்றிய துல்ஹன், தற்போதைய கவலையளிக்கக் கூடிய காலச்சூழலைக் கருத்திற்கொண்டு, குழந்தைகள் மற்றும் பெண்களின் நடவடிக்கைகளில் தனிக்கவனம் செலுத்தி, அவர்களை முன்னேற்றப் பாதையில் பயணிக்கச் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கட்சி செய்திட வேண்டுமென்றும், கட்சியின் மகளிரணி முழு உத்வேகத்துடன் செயல்பட்டு காரியமாற்ற வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.
விமர்சனங்களைப் புறந்தள்ளுவோம்...
அடுத்து உரையாற்றிய - கட்சியின் தூத்துக்குடி மாநகர இளைஞரணி செயலாளர் இம்ரான், விமர்சனங்களைப் புறந்தள்ளி, எடுத்த காரியத்தை இயல்பாகச் செய்து முடிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.
முந்திக்கொண்டு கூட்டணியை அறிவித்ததேன்...?
அடுத்து கருத்து தெரிவித்த ஜெய்லானீ, தேர்தல் அப்போதுதான் அறிவிக்கப்பட்டு - கூட்டணிகள் அமைப்பதற்கான வேலைகள் துவங்கப்படும் முன்னரே முந்திக்கொண்டு திமுகவிற்கு ஆதரவளிப்பதாக கட்சி அறிவித்ததற்கான காரணத்தை வினவினார். அதற்கு தனதுரையில் விளக்கமளிப்பதாக மாநில பொதுச் செயலாளர் தெரிவித்தார்.
அனைத்திற்கும் வழிகாட்டி முஸ்லிம் லீக்...
அடுத்து, தாய்லாந்து காயிதேமில்லத் பேரவை அமைப்பாளர் ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீன் உரையாற்றினார்.
முஸ்லிம் சமூகத்தில் பைத்துல்மால், ஜமாஅத் கூட்டமைப்புகள், மக்கள் நல அமைப்புகள் என இயங்கி வரும் எல்லா நிறுவனங்களையும் துவக்கத்தில் உருவாக்கி வழிகாட்டியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்தான் என்றும், மக்கள் நலனில் கட்சி இன்னும் ஊக்கத்துடன் அக்கறை செலுத்தி பணியாற்றிட வேண்டுமென்றும், சமுதாயத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதில்தான் அனைவரின் மறுமை வெற்றியும் அமைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
பொதுச் செயலாளர் உரை:
அடுத்து, கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் உரையாற்றினார். அவரது உரைச் சுருக்கம் பின்வருமாறு:-
ஏதேனும் ஒரு கூட்டணி அவசியமே...
தமிழகத்தில் இன்று, அதிமுக - திமுக என இரண்டு அணிகள்தான் உள்ளன... இவ்விரண்டில் ஒன்றை ஆதரித்து களப்பணியாற்றினால்தான் சமுதாயத் தேவைகளைப் பூர்த்தி செய்திட இயலும்... தமிழகத்தில் திமுக அணியில் கட்சி இருந்து வந்த நேரத்தில், தேர்தலில் எந்த அணிக்கு ஆதரவு என செய்தியாளர்கள் கேட்டபோது, திமுக அணியிலேயே கட்சி தொடரும் என்று தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தெரிவித்தார். இது ஒன்றும் கட்சியின் தனித்தன்மையைப் பாதிக்கும் விஷயமல்ல.
கட்சிகளின் மீது பாரபட்சமற்ற பார்வை...
ஒரு பாராளுமன்றத் தேர்தலின்போது முஸ்லிம்களை எதிர்ப்பதையே செயல்திட்டமாகக் கொண்டிருந்த பாரதீய ஜனதா கட்சியை திமுக ஆதரிக்க முடிவெடுத்தபோது, அந்த அணியிலிருந்து விலகி, அதிமுக கூட்டணியில் கட்சி இணைந்தது. அதுபோல, அண்மையில் நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தலில், முஸ்லிம் லீக் தனித்தே போட்டியிட்டதால், பல பகுதிகளில் திமுக வேட்பாளர்களுக்கெதிராகவும் களமிறங்கியது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு எந்தக் கட்சியின் மீதும் தனிப்பட்ட விருப்போ - வெறுப்போ கிடையாது என்பதை உணர்த்தவே இங்கு இதைக் குறிப்பிடுகிறேன்.. அந்தந்தக் காலச் சூழலில் கட்சி மூலம் அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து மக்களுக்குத் தொண்டாற்றிட ஏதேனும் ஒரு கூட்டணியில் இருப்பது இன்றியமையாதது என்பதைக் கவனத்திற்கொள்ள வேண்டும்.
நல்ல தலைமை...
தூத்துக்குடி மாவட்டத்தில் நம் கட்சிக்கு நல்லதொரு தலைமை தற்போது கிடைத்திருக்கிறது. அனைத்துக் கட்சி நிர்வாகிகளுடனும் நல்ல உறவுமுறையை வைத்துக்கொண்டு, சமுதாயத்திற்குத் தேவைாயனவற்றைக் கோரிப் பெற்றுக்கொண்டிருக்கிறார் தூத்துக்குடி மாவட்டத் தலைவர் பி.மீராசா அவர்கள். “இருந்தா தூத்துக்குடி மாவட்டத் தலைவர் மீராசா போல் இருங்கள்” என பேராசிரியர் காதர் மொகிதீன் அவர்கள் பல இடங்களிலும் வலியுறுத்திப் பேசும் அளவிற்கு அவரது பணி சிறப்பாக அமைந்துள்ளது. அவருடன், இதர நிர்வாகிகள் மனப்பூர்வமாக ஒத்துழைப்பளிப்பது மனதிற்கு மகிழ்ச்சியைத் தருகிறது.
கேரள ஒற்றுமை...
கேரள மாநிலத்தில், முஸ்லிம்கள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்ற ஓரணியில் நிற்பதால், இன்று கேரள சட்டமன்றத்தில் 5 முஸ்லிம்கள் அமைச்சர்களாக உள்ளனர். இந்த ஒற்றுமை தமிழகத்திலும் மிளிர வேண்டும்.
மே மாத சிறப்பு நிகழ்ச்சிகள்...
நடப்பு மே மாதத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் அடுத்தடுத்து நிறைய நிகழ்ச்சிகள் நம் கட்சி தொடர்பாக நடைபெறுகின்றன.
மே 10ஆம் தேதி, நகர மீனவரணி தலைவரின் திருமண வரவேற்பு நடைபெறுகிறது.
மே 16ஆம் தேதி தூத்துக்குடி மாநகர தலைவர் நவ்ரங் சஹாப்தீன் இல்லத் திருமணத்திற்கு தலைவர் பேராசிரியர் வந்து, அன்று மாலையிலேயே சென்னை திரும்புகிறார்.
மே 23ஆம் தேதி செந்தூர் விரைவுத் தொடர்வண்டியில் காயல்பட்டினம் வந்திறங்குகிறார். அன்று காலையில், நகர முஸ்லிம் லீக் பிரமுகர் இல்லத் திருமணத்தில் பங்கேற்கிறார். மாலையில், நம் கட்சியின் காயல்பட்டினம் கிளைக்கு புதிதாக வாங்கப்பட்டுள்ள கட்டித்தில், தியாகி பி.எச்.எம்.அப்துல் காதிர் மன்ஸில் என்ற பெயரில் கட்சி அலுவலகத்தை பேராசிரியர் திறந்து வைக்கிறார். அன்றிரவு காயல்பட்டினத்தில் தங்கிவிட்டு, மறுநாள் மே 24ஆம் தேதி காலையில், தூத்துக்குடியில் நடைபெறவுள்ள கண் சிகிச்சை இலவச முகாமையும், தண்ணீர் பந்தலையும் அவர் துவக்கி வைக்கிறார்.
கட்சி அலுவலக வரலாறு...
காயல்பட்டினத்தில் கட்சியின் கிளை அலுவலகத்திற்காக வாங்கப்பட்டுள்ள கட்டிடத்தின் வரலாற்றை நான் சுருக்கமாகத் தெரிவிக்க விரும்புகிறேன். திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தூத்துக்குடி மாவட்டம் தனியாகப் பிரிந்த பிறகு, கிடைக்கப்பெற்ற ஒரு தொகையுடன் கூடுதலாக நகரப் பிரமுகர்கள் பங்களிப்பு செய்து ரூ.4,80,000 தொகையில், காயல்பட்டினம் சீதக்காதி நகரில் சொத்து வாங்கி, வீடுகள் வாடகைக்கு விடப்பட்டது.
தற்போது அந்த சொத்தை ரூ.11 லட்சத்திற்கு விற்று, கூடுதலாக இரண்டு லட்சம் போட்டு 13 லட்சம் ரூபாயில் சதுக்கைத் தெருவில் இந்த கட்டிடம் விலைக்கு வாங்கப்பட்டுள்ளது. கட்சி நடப்புகளை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டுமென்பதற்காக இத்தகவலை இங்கு நான் தெரிவித்துள்ளேன்.
இதன் மூலம், காயல்பட்டினத்தில் சொந்தக் கட்டிடத்தில் அலுவலகத்தைக் கொண்ட ஒரே கட்சி இந்திய யூனியன் முஸ்லிம் லீக்தான் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இம்மாத இறுதியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயலாளரும், கேரள சட்டமன்ற உறுப்பினரும், 8 மொழிகளில் திறம்பட உரையாற்றி - அந்தந்த பிராந்திய மக்களைக் கவர்ந்தவருமான அப்துஸ்ஸமத் ஸமதானீ ஸாஹிப் அவர்கள் காயல்பட்டினம் வருகை தரவுள்ளார். அவரைக் கொண்டு மாபெரும் சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டத்தை காயல்பட்டினத்தில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டம் சிறப்புற நடந்தேற மாவட்ட நிர்வாகம் முழு ஏற்பாடுகளையும் முன்னின்று செய்திட வேண்டுமென இந்நேரத்தில் கேட்டுக்கொள்கிறேன்.
சமுதாயப் பாதுகாப்பு...
அடுத்து ஒரு கவலைக்குரிய விஷயத்தை இங்கே பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். கடந்த இரண்டாண்டுகளில், நம் சமுதாயப் பெண்கள் மாற்றாருடன் தவறாகப் பழகி, முறை தவறி அவர்களுடன் சென்றுவிடும் நிலை அதிகரித்து வருகிறது. நம் பெண்களிடம் முறையான மார்க்க விழிப்புணர்வை நாம் ஏற்படுத்தத் தவறியதே இச்சீரழிவிற்குக் காரணமாகும்.
எனவே, நம் சமுதாயப் பெண்களுக்கு முறையான மார்க்க விழிப்புணர்வை அளித்திடும் பொருட்டு நம் கட்சியின் காயல்பட்டினம் நகர மகளிரணி சார்பில், மகளிரணி மாநில அமைப்பாளர் பேராசிரியை தஸ் ரீஃப் ஜஹான் அவர்களைக் கொண்டு மாபெரும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை காயல்பட்டினத்தில் நடத்திட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒருங்கிணைப்புப் பணிகளை, மாவட்ட செய்தித் தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் அவர்கள் நகர மகளிரணியுடன் கலந்தாலோசித்து செய்வார்.
இதே போன்ற நிகழ்ச்சியை தூத்துக்குடியிலும் நடத்திட விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து இடங்களிலும் இந்நிகழ்ச்சி நடத்தப்பட வேண்டியது அவசியம் என்ற அடிப்படையில், தூத்துக்குடியிலும் நிகழ்ச்சி நடத்திட ஆவன செய்யப்படும்.
மாணவர் பயிற்சி முகாம்...
நம் கட்சியின் மாணவரணியை ஊக்கப்படுத்தி, இக்கோடைகால விடுமுறையில் அவர்களுக்கு ஒருநாள் பயிற்சி முகாமை - பசுமை நிறைந்த ஏதேனும் ஒரு தோப்பில் வைத்து நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சாதிவாரி கணக்கெடுப்பு...
தமிழகத்தில் தற்போது சாதிவாரி கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. இதில் பல கேள்விகள் கேட்கப்படும். அனைத்திற்கும் சரியான விபரங்களை தயங்காமல் தெரிவிக்க பொதுமக்களை நாம் வலியுறுத்த வேண்டும்.
குறிப்பாக, ‘மதம்‘ என்ற கேள்விக்கு ‘இஸ்லாம்‘ என்றும், ‘சாதி‘ என்ற கேள்விக்கு ‘லெப்பை‘ என்றும் நாம் விபரமளிக்க வேண்டும். இஸ்லாம் மார்க்கத்தில் சாதிகள் இல்லை என்பதை நாம் நன்றாக அறிவோம். என்றாலும், இவ்வாறு விபரமளித்தால் மட்டுமே அரசின் சலுகைகளை நம் சமுதாயம் பெற்றிட இயலும். ப்ளஸ் 2 முடித்துவிட்டு, கல்லூரியில் சேரும்போது, அனைத்து மாணவர்களுமே சாதிச் சான்றிதழ் வாங்கிட தவறுவதில்லை. அதுபோன்ற ஒன்றுதான் இது.
இந்த உண்மையை அறியாமலோ அல்லது வித்தியாசமாக எதையாவது சொல்ல வேண்டுமென்றோ, நம் சமுதாயத்திலேயே சிலர், “இஸ்லாத்தில் சாதி இல்லை... எனவே யாரும் சாதியைக் குறிப்பிட வேண்டாம்” என அறிவீனமாக சில அறிக்கைகளை வெளியிட்டு, சமுதாயத்தைக் குழப்ப முயற்சிக்கின்றனர். சமுதாயம் விழிப்போடு இருக்க வேண்டும்.
காயல்பட்டினம் மாணவரணிக்கு பாராட்டு...
காயல்பட்டினத்தில் இந்தக் கணக்கெடுப்பை நடத்திட தன்னிச்சையாக சிலர் நியமிக்கப்பட்டதையறிந்த நம் கட்சியின் மாணவரணியினர், கணினி இயக்கத் தெரிந்த மாணவர்களைத் திரட்டிச் சென்று, கணக்கெடுப்புப் பணியைக் கையிலெடுத்து, தற்போது 12 முஸ்லிம் மாணவர்கள் உட்பட 18 பேர் அடங்கிய குழு காயல்பட்டினத்தில் கணக்கெடுப்புப் பணியைச் செய்து வருவதை நான் மனதாரப் பாராட்டுகிறேன்.
இவ்வாறு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் உரையாற்றினார்.
பின்னர், கீழ்க்காணும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 01 - மே மாத நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாட்டுப் பணிகள்:
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், தேசிய செயலாளர் அப்துஸ்ஸமத் ஸமதானீ ஆகியோரின் தூத்துக்குடி - காயல்பட்டினம் வருகையையொட்டி நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் முறையான ஏற்பாடுகளைச் செய்திட இக்கூட்டம் தீர்மானிப்பதோடு, மாவட்ட - நகர நிர்வாகிகள் இது விஷயத்தில் உடனுக்குடன் கலந்தாலோசித்து உரிய ஏற்பாடுகளைச் செய்திட இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 02 - விடுபட்ட இடங்களில் கொடியேற்றம்:
கடந்த மார்ச் 10ஆம் தேதியன்று, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிறுவன தினத்தின்போது, தூத்துக்குடி மாநகரில் விடுபட்ட இடங்களில், 24.05.2012 அன்று, தேசிய பொதுச் செயலாளரும், மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களைக் கொண்டு பிறைக்கொடியை ஏற்ற தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம் 03 - ஜூன் 05 காயிதேமில்லத் பிறந்த தின நிகழ்ச்சி:
ஜூன் மாதம் 05ஆம் தேதியன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை நிறுவிய காயிதேமில்லத் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் பிறந்த தினமாகும். இத்தினத்தை கல்வி விழிப்புணர்வு தினமாக அனுஷ்டிப்பது கட்சியின் கொள்கை. அந்த அடிப்படையில், வரும் ஜூன் மாதம் 05ஆம் தேதியன்று தூத்துக்குடியிலும், காயல்பட்டினத்திலும் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்த தீர்மானிக்கப்படுகிறது.
தூத்துக்குடியில் இம்ரான் அவர்களும், காயல்பட்டினத்தில் ஆசிரியர் அப்துல் ரசாக் அவர்களும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்டத்தின் இதர ஊர்களில் இந்நிகழ்ச்சியை நடத்துவது குறித்து, மாவட்டத் தலைவர் மற்றும் துணைத்தலைவர் கலந்து பேசி இறுதி முடிவெடுப்பர்.
தீர்மானம் 04 - சாதிவாரி கணக்கெடுப்பு:
தமிழகத்தில் நடைபெற்று வரும் சாதி வாரிக கணக்கெடுப்புப் பணியின் கீழ், காயல்பட்டினத்தில் கணக்கெடுப்புப் பணியில் முஸ்லிம் மாணவர்களை ஈடுபடுத்த உழைத்த காயல்பட்டினம் நகர முஸ்லிம் மாணவரணியை இக்கூட்டம் பாராட்டுகிறது.
தூத்துக்குடி நகரில் நடைபெறும் கணக்கெடுப்பின்போது, முஸ்லிம் லீகர்கள் உடன் செல்ல வேண்டுமென இக்கூட்டம் பணிக்கிறது.
தீர்மானம் 05 - மணிச்சுடர் நாளிதழ் மேம்பாட்டுப் பணி:
முஸ்லிம் லீகின் அதிகாரப்பூர்வ நாளிதழான மணிச்சுடர் நாளிதழை அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்க்கும் பொருட்டு பொதுமக்களை அதிகளவில் பத்திரிக்கையை வாங்கச் செய்வதற்கு, தூத்துக்குடியில் இம்ரான் அவர்களையும், காயல்பட்டினத்தில் ஆசிரியர் மு.அப்துல் ரசாக் அவர்களையும் இக்கூட்டம் நியமிக்கிறது.
தீர்மானம் 06 - கேம்பலாபாத்தில் பேருந்து நிறுத்தம்:
அரசு உத்தரவின்படி கேம்பலாபாத் பேருந்து நிறுத்தத்தில் நின்று செல்ல வேண்டிய பேருந்துகள் சில நிற்காமல் செல்வதை இக்கூட்டம் கண்டிக்கிறது. அந்நிறுத்தத்தில் நின்று செல்ல பணிக்கப்பட்டுள்ள பேருந்துகள் அனைத்தும் தவறாமல் நின்று செல்ல பேருந்து போக்குவரத்துத் துறையை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 07 - காயல்பட்டினம் தொடர்வண்டி நிலைய நிலுவைப் பணிகள்:
காயல்பட்டினத்தில் இடைநின்று போன தொடர்வண்டி நிலைய மேம்பாட்டுப் பணிகளை துரிதமாக நிறைவேற்றி முடித்திட தொடர்வண்டித் துறையை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
தேவையற்ற காலதாமதம் இனியும் ஏற்பட்டால், பொதுமக்களைத் திரட்டி மாபெரும் கண்டனப் போராட்டத்தை நடத்திட இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 08 - மதுரை குண்டுவெடிப்பு குறித்து பாரபட்சமற்ற விசாரணை:
அண்மையில் மதுரையில் குண்டுவெடிப்புச் சம்பவத்தை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிப்பதோடு, கண்ணை மூடிக்கொண்டு யாரையும் குற்றஞ்சாட்டி விடாமல், பாரபட்சமற்ற விசாரணை மூலம் உண்மைக் குற்றவாளிகளை அடையாளங்கண்டு, கடும் தண்டனை வழங்க தமிழக அரசை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 09 - தூத்துக்குடி கொழும்பு கப்பல் போக்குவரத்து:
தூத்துக்குடி - கொழும்பு இடையே துவக்கப்பட்ட பயணியர் கப்பல் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டதற்கு இக்கூட்டம் வருத்தம் தெரிவிக்கிறது.
மீண்டும் இந்த வழித்தடத்தில் சிறிய அளவில் துவக்க திட்டமிடப்பட்டுள்ள கப்பல் போக்குவரத்து சேவையை விரைந்து துவக்கிட இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 10 - விவேக் விரைவுத் தொடர்வண்டியை தூத்துக்குடி வரை இயக்கல்:
தூத்துக்குடியிலிருந்து துவாரகா நகர் வரை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்ட விவேக் விரைவுத் தொடர்வண்டியை மதுரையோடு நிறுத்திவிடாமல், அறிவிக்கப்பட்ட படி தூத்துக்குடி வரை இயக்க தொடர்வண்டித் துறையை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
இறுதியாக, கட்சியின் மாவட்ட செய்தித் தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் நன்றி கூற, தைக்கா உமர் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |