சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் செயற்குழுக் கூட்டத்தில், மருத்துவ உதவி வகைக்காக ரூ.70,000 தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் செயலர் மொகுதூம் முஹம்மத் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
இறையருளால் எமது சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் செயற்குழுக் கூட்டம், 30.04.2012 அன்று 20.00 மணிக்கு, மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.
ஹாஃபிழ் எம்.ஆர்.ஷேக் அப்துல் காதிர் ஸூஃபீ கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். மன்றத் தலைவர் எம்.ஆர்.ரஷீத் ஜமான் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.
சிறப்பழைப்பாளர்கள்:
சஊதி அரபிய்யா - ரியாத் காயல் நற்பணி மன்றத்தின் செயலர் ஹாஜி கூஸ் முஹம்மத் அபூபக்கர், காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளியின் கத்தீபும், முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரியின் நிறுவனருமான மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ ஆகியோர் இக்கூட்டத்தில் சிறப்பழைப்பாளர்களாகக் கலந்துகொண்டனர்.
அவர்களையும், கூட்டத்தில் பங்கேற்ற அனைவரையும் கூட்டத் தலைவர் வரவேற்றுப் பேசியதோடு, குறுகிய கால அவகாசத்தில் இக்கூட்டம் கூட்டப்பட்ட நிலையிலும், ஆர்வத்துடன் வந்து கலந்துகொண்டமைக்காக உறுப்பினர்களனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
கடந்த கூட்ட அறிக்கை:
பின்னர், கடந்த கூட்ட நிகழ்வறிக்கையை மன்றச் செயலர் மொகுதூம் முஹம்மத் வாசித்து விளக்கமளித்தார். அவசர உதவி கோரி மன்றத்தால் பெறப்பட்ட விண்ணப்பங்களனைத்தும் கடந்த செயற்குழுக் கூட்டத்திலேயே ஏற்கப்பட்டு, அதனடிப்படையில், உள்ளூர் பிரதிநிதி மூலம் உதவித் தொகை முறைப்படி பயனாளிகளிடம் சேர்ப்பிக்கப்பட்டதாக அப்போது அவர் தெரிவித்தார்.
அத்தியாவசிய சமையல் பொருளுதவி:
அத்தியாவசிய சமையல் பொருளுதவியை மே மாதம் 06ஆம் தேதியன்று வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், இவ்வகைக்காக அனுசரணையளித்த உறுப்பினர்களனைவரையும் பாராட்டினார்.
வரவு - செலவு கணக்கறிக்கை:
மன்றத்தின் நாளது தேதி வரையிலான வரவு-செலவு கணக்கறிக்கையையும் சமர்ப்பித்த அவர், உறுப்பினர்கள் தமது இரண்டாம் காலாண்டு சந்தாத் தொகையை இயன்றளவு விரைவாக செலுத்தி ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொண்டார்.
பருவ உறுப்பினர்களைக் கொண்டு செயற்குழுவை கூட்டல்:
பின்னர், மன்ற ஆலோசகர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் பேசினார். செயற்குழுவை - மன்றத்தின் நடப்பு பருவத்தின் செயற்குழு உறுப்பினர்களாக உள்ளவர்களைக் கொண்டு சுழற்சி முறையில் மாதந்தோறும் நடத்தினால், வருங்காலத்தில் இம்மன்றத்தை அவர்கள் வழிநடத்தவும், நல்ல மேலாண்மைத் திறனை அவர்கள் பெற்றுக்கொள்ளவும் உதவியாக இருக்கும் என்று கருத்து தெரிவித்தார்.
அக்கருத்தை கூட்டம் ஏற்றுக்கொண்டதையடுத்து, வரும் ஜூன் மாதம் நடைபெற வேண்டிய செயற்குழுக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளைச் செய்திட, எம்.என்.ஜவஹர் இஸ்மாஈல், எம்.ஆர்.ஏ.ஷேக் அப்துல் காதிர் ஸூஃபீ ஆகியோர் ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர்.
சிறப்பழைப்பாளர் கூஸ் அபூபக்கர் உரை:
அதனைத் தொடர்ந்து, சிறப்பழைப்பாளர் கூஸ் அபூபக்கர் வாழ்த்துரை வழங்கினார். நகர்நல அமைப்புகளின் குறிக்கோள்களுடன் கூடிய செயல்திட்டங்களையும், இவ்வகைக்காக பங்களிப்போர் பெறும் நன்மைகளையும் அவர் தனதுரையில் விளக்கிப் பேசினார்.
சிங்கப்பூர் காயல் நல மன்ற ஆலோசகர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் அவர்களின் வழிகாட்டலில், எம்.ஆர்.ரஷீத் ஜமான் அவர்களின் சீரிய தலைமையில் இம்மன்றம் வெற்றிப்பாதையில் சென்றுகொண்டிருப்பதாக பாராட்டிப் பேசிய அவர், மன்ற உறுப்பினர்களுடன் சரியான தகவல் பரிமாற்றம் செய்துகொண்டதாலும், பயனாளிகளுக்கு உதவித்தொகைகள் உரிய நேரத்தில் அளிக்கப்பட்டதாலும் மட்டுமே இது சாத்தியமாயிற்று என்று புகழ்ந்துரைத்தார்.
பின்னர், பல்வேறு நகர்நல அம்சங்கள் குறித்து உறுப்பினர்கள் அவருடன் கலந்தாலோசனை மேற்கொண்டனர். அப்போது பேசிய மன்றச் செயலாளர் மொகுதூம் முஹம்மத், காயல்பட்டினத்தில் பல்வேறு நகர்நல நிகழ்ச்சிகளை நடத்தும் விஷயத்தில், உலக காயல் நல மன்றங்களிடையே நல்ல முன் கருத்துப்பரிமாற்றங்கள் இருக்க வேண்டியது அவசியம் என்றும், அவ்வாறிருந்தால் தேவையற்ற பொருட்செலவுகளையும், நேர விரயத்தையும் வெகுவாகக் குறைத்து, அனைத்து செலவினங்களையும் பயனுள்ள வகையில் அமைத்துக்கொள்ளலாம் என்று தெரிவித்தார்.
மருத்துவ உதவி வகைக்கு நிதியொதுக்கீடு:
அதனைத் தொடர்ந்து, மருத்துவ உதவி கோரி மன்றத்தால் பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, மருத்துவ உதவி வகைக்காக ரூபாய் 70,000 ஒதுக்கீடு செய்யப்பட்டது. துவக்கமாக நான்கு விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. எஞ்சிய விண்ணப்பங்கள் குறித்து பரிசீலிப்பதற்காக, மே மாதம் 18ஆம் தேதியன்று மன்றத்தின் விண்ணப்ப ஏற்புக் குழு கூடும் என அறிவிக்கப்பட்டது.
உண்டியல் திறப்பு தேதி அறிவிப்பு:
நகர்நலப் பணிகளுக்கான நிதியாதாரத்தைப் பெருக்கும் மன்ற உறுப்பினர் வீட்டு உண்டியல் திட்டத்தின் கீழ், வரும் 08.06.2012 அன்று நடைபெறவுள்ள மன்ற செயற்குழுவில் உண்டியல்கள் திறக்கப்படும் என்றும், மன்ற உறுப்பினர்கள் கூட்ட தேதிக்கு முன்பாக - நிரப்பப்பட்ட தமது உண்டியல்களை உரிய பொறுப்பாளர்களிடம் வழங்கிடுமாறும் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
சிறப்பழைப்பாளர் அஹ்மத் அப்துல் காதிர் ஆலிம் உரை:
பின்னர், சிறப்பழைப்பாளர் மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ வாழ்த்துரை வழங்கினார். காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளை சார்பில் நகரில் செய்யப்பட்டு வரும் பல்வேறு நகர்நலப் பணிகள் குறித்து அவர் தனதுரையில் பல தகவல்களைத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், நகரில் பொருளாதாரத்தில் தாழ்நிலை - உயர்நிலை போல நடுநிலையிலும் பலர் உள்ளதாகவும், இவர்கள் தமது தேவைகளை வெட்கத்தை விட்டு வாய்திறந்து கேட்க வாய்ப்பில்லை என்றும், அவ்வாறானவர்களை இனங்கண்டு, இயன்றளவுக்கு அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்வது மிகவும் சிறந்ததாக இருக்கும் என்றும், அப்பணியை இம்மன்றம் சிரமேற்கொண்டு செய்திட வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.
அடுத்த பொதுக்குழு மற்றும் குடும்ப சங்கம நிகழ்ச்சி:
மன்றத்தின் அடுத்த பொதுக்குழு மற்றும் குடும்ப சங்கம நிகழ்ச்சி வரும் ஜூன் மாதம் 30ஆம் தேதியன்று நடத்தப்படும் என்றும், கூட்ட நிகழிடம் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
மீலாதுன் நபி நிகழ்வில் பங்கேற்றோருக்கு நன்றி:
சிங்கப்பூர் பெடோக் விளையாட்டரங்கில், சிங்கை ஜாமிஆவால் கடந்த 28.04.2012 அன்று நடத்தப்பட்ட மீலாதுன் நபி நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்துறுப்பினர்களுக்கும் மன்றத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
சிங்கை ஜாமிஆ நடத்திய மீலாத் விழாவில் சிங்கை கா.ந.மன்றம் பங்கேற்ற காட்சி
விவாதிக்க வேறம்சங்களில்லா நிலையில், 21.15 மணியளவில் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது. கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் இரவு உணவு வழங்கியுபசரிக்கப்பட்டது.
இவ்வாறு, சிங்கப்பூர் காயல் நல மன்ற செயலாளர் மொகுதூம் முஹம்மத் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
|