தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் வேளாங்கன்னி மாதா தெருவைச் சேர்ந்தவர் ராஜ் பர்னாந்து. இவருக்கு வயது 70 இவர் கடலில் மீன்பிடி தொழில் செய்து வந்தார்.
03.05.2012 அன்று (நேற்று) மாலையில், காயல்பட்டினம் கற்புடையார் பள்ளி வட்டம் பகுதியில் வசிக்கும் தனது மகன் பிச்சை வீட்டிற்குச் செல்வதாகக் கூறி, புன்னக்காயலிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். மறுநாள் (இன்று) காலை 10 மணி ஆன நிலையிலும் பிச்சையின் வீட்டிற்கு ராஜ் பர்னாந்து வந்து சேரவில்லை. இதனையடுத்து, உறவினர்கள் அவரைத் தேடத் துவங்கினர்.
இந்நிலையில், காயல்பட்டினம் சதுக்கைத் தெரு வடமுனையில் முதியவர் ஒருவர் பிணமாகக் கிடப்பதாக ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் பெறப்பட்ட தகவலையடுத்து, காவல்துறை ஆய்வாளர் டி.பார்த்திபன், உதவி ஆய்வாளர்களான ராஜகுமாரி, நடராஜன் ஆகியோர் நிகழிடம் சென்று பார்வையிட்டனர். விசாரணையில், இறந்து கிடந்தவர் ராஜ் பர்னாந்து என்று தெரியவந்தது.
அவரது மூக்கு மற்றும் காதுகளில் குருதி வடிந்திருந்தது. அவர் மது மயக்கத்தில் கீழே விழுந்து இறந்தாரா அல்லது வேறு காரணங்களா என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். |