தமிழகம் முழுவதும் உள்ள உள்ளாட்சிகளில் - சாதாரண தார் சாலைகளுக்கு பதிலாக பிளாஸ்டிக் சாலைகள் - உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்த தொழில்நுட்பத்தில் 90 சதவீதம் பிடுமின் என்ற வேதிப்பொருளும், 10 சதவீதம் பிளாஸ்டிக்கும் கலக்கப்பட்டு, சாலைகள் போடப்படும். இதுபோன்ற சாலைகள் நீண்ட ஆயுட்காலம் கொண்டதாகவும், மழை நீர் தேக்கத்தால் பாதிப்படையாததாகவும் இருக்கும்.
இந்த பிளாஸ்டிக் சாலை தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தவர் டாக்டர் ஆர்.வாசுதேவன். அதற்கான Patent உரிமையை இவர் பெற்றுள்ளார். மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் வேதியியல் துறை தலைவரான இவர், நகர்மன்றத் தலைவர் ஐ. ஆபிதாவின் அழைப்பின் பெயரில் 03.05.2012 அன்று (நேற்று) காயல்பட்டினம் வருகை தந்தார்.
காலை 10:30 மணியளவில், காயல்பட்டினம் நகர்மன்றக் கூட்டரங்கில் நடைபெற்ற கருத்தரங்கில் அவர் கலந்துகொண்டார். இந்நிகழ்விற்கு, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா தலைமை தாங்கி தலைமையுரையாற்றினார்.
நகர்மன்ற உறுப்பினர் இ.எம்.சாமி அனைவரையும் வரவேற்றுப் பேசினார். பின்னர், டாக்டர் வாசுதேவன், ப்ளாஸ்டிக் சாலை குறித்து விரிதிரை உதவியுடன் விளக்கிப் பேசினார். அவரது உரைச்சுருக்கம் பின்வருமாறு:-
கான்க்ரீட் சாலை, தார் சாலைகளைக் காட்டிலும் ப்ளாஸ்டிக் சாலை மிகவும் பாதுகாப்பதும், சேதப்படாமல் நீண்ட காலம் நீடித்திருக்கக் கூடியதுமாகும்...
இந்த சாலை அமைக்கப்படும்போது, அதன் இரு ஓரங்களிலும் இடைவெளி விடப்படும்... இந்த இடைவெளி வழியே மழை நீர் போன்றவை பூமிக்குள் சென்று, நிலத்தடி நீர் மட்டத்தைப் பாதுகாக்கும்.
ப்ளாஸ்டிக் சாலையில், சாலையினூடே துளை (Pot hole) உருவாகாது. எனவே, அத்துளைகள் வழியாக மழை நீர் உட்சென்று, அரிப்பை ஏற்படுத்தி சாலையை சிதிலமடையச் செய்ய வழியில்லை. ப்ளாஸ்டிக் சாலை போட பயன்படுத்தப்படும் கற்களில், சூடாக்கி திரவப்படுத்தப்பட்ட ப்ளாஸ்டிக் கழிவு ஊற்றப்படும். அவை சாலைக்கு நல்ல பொலிவைக் கொடுப்பதுடன், நீர் உள்ளே செல்லாமல் பாதுகாக்கும். இந்த ப்ளாஸ்டிக் படிவத்தால் (லேயர்) சாலையில் இருக்க வேண்டிய உராய்வுத் தன்மை (Friction)யில் எவ்வித பாதிப்பும் இருக்காது.
அழைக்கப்படும் அனைத்திடங்களுக்கும் சென்று எங்களால் விளக்கமளிக்க இயலவில்லையெனினும், இந்தியா முழுக்க பல்வேறு இடங்களில் இதுகுறித்து நாங்கள் விளக்கி வருகிறோம்... ஷிம்லா, ஜேம்ஷெட்பூர் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும், தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலும் ப்ளாஸ்டிக் சாலை அமைத்துள்ளோம்... அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்தும் அழைப்புகள் வந்தவண்ணம் உள்ளன.
இந்த ப்ளாஸ்டிக் சாலை தொழில்நுட்பத்திற்கு நாங்கள் பேடன்ட் உரிமை வைத்துள்ளபோதிலும், இந்தியாவில் இச்சாலை அமைப்பதற்கு நாங்கள் இலவசமாகவே எமது தொழில்நுட்பத்தை வழங்கி வருகிறோம்.
இந்த தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், ப்ளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட வேண்டியவை என பொத்தாம்பொதுவாக சொல்வதை விட, அவற்றை மறுசுழற்சி முறையில் இதுபோன்று பயன்படுத்தச் சொல்வதே சிறந்தது.
இந்த சந்திப்பின் மூலம், காயல்பட்டினம் நகராட்சிக்கு நான் தெரிவிக்க விரும்புவது என்னவெனில், இதுபோன்ற திட்டங்களுக்காக ப்ளாஸ்டிக் கழிவுப் பொருட்களை சேகரிக்கத் துவங்கினால், சிறு கழிவு கூட உங்கள் நகராட்சிப் பகுதியில் குப்பையாகக் கிடக்காது. எனவே, இக்கழிவுகளை சேகரிக்க முறையான செயல்திட்டம் வகுத்து, வாரம் ஒருமுறை ப்ளாஸ்டிக் கழிவுகளை மட்டும் சேகரிக்க நகராட்சி பணியாளர்களைப் பயன்படுத்துங்கள்... நகராட்சிக்கு அதன் மூலம் வருமானத்தைப் பெற்றிடுங்கள்...
இவ்வாறு டாக்டர் வாசுதேவன் தெரிவித்தார். இக்கருத்தரங்கில் கலந்துகொள்ளக் கோரி, ஆறுமுகநேரி, ஆத்தூர், திருச்செந்தூர், வீரபாண்டியன்பட்டினம், உடன்குடி ஆகிய ஊராட்சிகளின் பிரதிநிதிகளுக்கும், காயல்பட்டினம் நகராட்சி ஒப்பந்தக்காரர்களுக்கும், பொதுநல அமைப்புகளுக்கும் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா விடுத்திருந்த அழைப்பின் பேரில், ஆத்தூர் பேரூராட்சி மன்றத்தின் தலைவர் எம்.பி.முருகானந்தம், நிர்வாக அதிகாரி வி.முத்து கிருஷ்ணன், ஆறுமுகநேரி பேரூராட்சி நிர்வாக அதிகாரி குமார் மற்றும் காயல்பட்டினம் நகரின் பொதுநல அமைப்புகளின் பிரதிநிதிகள் திரளாகக் கலந்துகொண்டு, இத்தொழில்நுட்பம் குறித்த தமது சந்தேகங்களைக் கேட்டு விளக்கம் பெற்றனர்.
நிறைவாக, நகராட்சி சுகாதார ஆய்வாளர் பொன்வேல்ராஜ் நன்றி கூறினார். காயல்பட்டினம் நகராட்சிக்கு - குப்பை சேகரிப்பிற்காக விரைவில் நவீன டம்பர் ப்ளேசர் இயந்திரம் வாங்கப்படவுள்ளதாகவும், ப்ளாஸ்டிக் கழிவுகள் சேகரிப்பு குறித்து நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானமியற்றப்பட்ட பின்னர், அவை முறைப்படி சேகரிக்கப்படும் என்று அப்போது அவர் தெரிவித்தார்.
பின்னர், காயல்பட்டினம் நகராட்சி சார்பில், ஆணையர் அஷோக் குமார் டாக்டர் வாசுதேவனுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
டாக்டர் வாசுதேவனுடன், முதுநிலை ஆய்வாளர் ராமலிங்க சந்திரசேகர், இளநிலை ஆய்வாளர் சுந்தர கண்ணன், உதவியாளர் கங்காதரன் ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர்களான வி.எம்.எஸ்.முஹம்மத் செய்யித் ஃபாத்திமா, பி.எம்.எஸ்.சாரா உம்மாள், எம்.ஜஹாங்கீர், ஜே.அந்தோணி, எஸ்.எம்.பி.பத்ருல் ஹக், எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், பாக்கிய ஷீலா, கே.ஜமால் ஆகியோரும் இக்கருத்தரங்கில் சமூகமளித்திருந்தனர்.
|