மகளிர் சமூகக் கட்டுப்பாடு, இஸ்லாமிய மார்க்க கலாச்சாரப் பாதுகாப்பு, ஒழுக்க விழுமியங்கள் பேணிக்கை, மகளிர் முன்னேற்றம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, காயல்பட்டினம் சதுக்கைத் தெருவிலமைந்துள்ள நஸூஹிய்யா பெண்கள் தைக்காவில் மாதந்தோறும் சமூக ஆர்வலர்களையும், மார்க்க அறிஞர்களையும் கொண்டு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த அடிப்படையில், 01.05.2012 அன்று மாதாந்திர சிறப்புரை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். ஹாஃபிழ் எம்.எஸ்.எல்.மீராலெப்பை ஃபத்தாஹ் கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். நஸூஹிய்யா மத்ரஸாவின் அமைப்பாளர் துளிர் எம்.எல்.ஷேக்னா லெப்பை அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
இஸ்லாமிய மகளிரிடம் இருக்க வேண்டிய ஒழுக்க மாண்புகள், தற்காலத்தில் அதில் ஏற்பட்டு வரும் சறுக்கல்கள், அதைத் தடுத்திடத் தேவையான வழிமுறைகள் குறித்து அவர் தனதுரையில் விளக்கிப் பேசினார்.
அதனைத் தொடர்ந்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர மகளிரணி சார்பில் விரைவில் நடைபெறவுள்ள மகளிர் விழிப்புணர்வுக் கருத்தரங்கம் குறித்து, அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செய்தித் தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் விளக்கியதோடு, அதற்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்கக் கோரினார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகரச் செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ் நன்றி கூற, துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. |