காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா, தேர்தலில் போட்டியிட்டபோது அளித்த வாக்குறுதிகளில் ஒன்றான வெளிப்படை நிர்வாகத்தை தற்சமயம் நடைமுறைப்படுத்தி வருகிறார்.
பொதுமக்களைச் சந்தித்து, நகராட்சி சேவைகளில் அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து உடனுக்குடன் களைந்திட, மக்கள் குறைதீர் மாதாந்திர கூட்டம், நகர்மன்றக் கூட்டங்களைப் பொதுமக்கள் பார்வையிடுவதற்கு, பார்வையாளர்களுக்கென தனி இருக்கை வசதிகள், விரைவில் நகர்மன்றக் கூட்டங்கள் வீடியோ ஒளிப்பதிவு, நகராட்சியின் பொதுவான நடவடிக்கைகள் குறித்து அவ்வப்போது தகவல் தெரிவித்து, தேவையான அம்சங்களுக்கு கலந்தாலோசனை மூலம் கருத்துக்களைப் பெற்றுக்கொள்வதற்காக, அனைத்து ஜமாஅத்துகள் - பொதுநல அமைப்புகள் - புறநகர் ஊர் நலக்கமிட்டியினர் கலந்துகொள்ளும் மாதாந்திர கூட்டம் ஆகியன அவரது வெளிப்படை நிர்வாகத்தின் முக்கிய அம்சங்கள்.
அந்த அடிப்படையில், மக்கள் கூட்டமைப்புகள் சந்திப்பு முதல் கூட்டத்தை, காயல்பட்டினம் மகுதூம் தெருவில் இயங்கி வரும் ரஃப்யாஸ் ரோஸரி மழலையர் பள்ளியில் நகர்மன்றத் தலைவர் நடத்தினார். இரண்டாவது கூட்டம், 28.04.2012 அன்று காயல்பட்டினம் ரெட் ஸ்டார் சங்க வளாகத்தில் நடைபெற்றது.
அன்று மாலை 05.00 மணியளவில் துவங்கிய இக்கூட்டத்திற்கு, நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா தலைமை தாங்கினார். அப்பாபள்ளி ஜமாஅத் தலைவர் ஹாஜி எம்.எஸ்.கே.எஸ்.மரைக்கார் என்ற சி.எம்.கே., அப்பகுதி (09ஆவது வார்டு) நகர்மன்ற உறுப்பினர் ஏ.ஹைரிய்யா, நகர்மன்ற உறுப்பினர்களான கே.வி.ஏ.டி.முத்து ஹாஜரா, ஜே.அந்தோணி, எஸ்.எம்.பி.பத்ருல் ஹக் கே.ஜமால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கிராஅத்தைத் தொடர்ந்து, கூட்டத் தலைவரும் நகர்மன்றத் தலைவருமான ஐ.ஆபிதா உரையாற்றினார். அவரது உரை பின்வருமாறு:-
எல்லாப்புகழும் இறைவனுக்கே வல்லோன் அவனே துணை நமக்கே!
எனது மதிப்பிற்கும் மரியாதைக்குமுரிய காயல்மாநகரின் ஜமாத்துக்கள், பொது நல அமைப்புக்கள் மற்றும் புறநகரின் ஊர் தலைவர்களின் பிரதிநிதிகளாக வருகை தந்துள்ள அனைத்து சமுதாயத்தை சேர்ந்த சகோதரர்களே உங்கள் அனைவரின் மீதும் இறைவனின் ஒற்றுமையும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக.
இறையருளால் காயல்பட்டினம் நகராட்சியில் புதிய நகர்மன்றம் பொறுப்பேற்று இந்த மாதம் 25ஆம் தேதியுடன் 6 மாதங்கள் நிறைவு பெற்றுள்ளது அல்ஹம்துலில்லாஹ். புதிய நகர்மன்றமானது பொறுப்பேற்ற காலத்தில் நம் ஊரின் முக்கிய பிரச்சனைகள், அதற்க்கான தீர்வுகள் மக்களின் தேவைகள், அதற்கான நலத்திட்டங்கள், மக்களின் எதிர்ப்பார்ப்புகள், மக்கள் விரும்பும் மாற்றங்கள் இவைகளுக்கு மக்களின் பிரதிநிகளாகிய நாங்கள் - எங்களை தேர்ந்தெடுத்து நகராட்சிக்கு அனுப்பிவைத்த மக்களாகிய உங்களுடன் கலந்தாலோசித்து, உங்களின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளித்து, மக்களின் குரலை மக்கள் மன்றத்தில் ஒலிக்க செய்ய வென்டும் என்ற நல்ல நோக்கத்தோடும், அதன் மூலம் நல்ல மாற்றங்களையும் ஏற்றங்களையும் நம் காயல்மாநகர் காணவேண்டும் என்ற கனவுகளோடும் இந்த மக்கள் சந்திப்பு கலந்தாய்வு கூட்டமானது - முதன் முதலாக ஜனவரி மாதம் 15ஆம் தேதி அன்று மகுதூம் தெரு ரப்யாஸ் ரோசரி மழலையர் பள்ளியில் வைத்து நடைபெற்றது.
அக்கூட்டத்தில் இதுபோன்ற சந்திப்பு நமது நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெற வேண்டும் என்ற கருத்து மக்களால் தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் 2 வது கூட்டமானது இன்று இங்கே ரெட் ஸ்டார் சங்கத்தில் நடைபெற்று கொண்டுள்ளது. இதற்க்கான ஏற்பாடுகளை செய்து ஒத்துழைப்பு தந்த இந்த சங்கத்தின் அங்கத்தினருக்கு அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
எங்களது புதிய நகர்மன்றமானது இந்த 6 மாத காலத்தில் அத்தியாவசியமான பணிகளை நிறைவேற்றி மக்களுக்கு நல்ல முறையில் அதன் பலன்கள் கிடைக்க வேண்டும் மென்று அடிப்படையளவிலே நாங்கள் எடுத்து கொண்டு இருக்கின்ற முயற்சிகள் அனைத்திலும் போராட்டத்துடன் கூடிய சவால்களை சந்தித்து கொண்டு இருக்கின்றோம்.
எங்கள் முன்னால் நின்று இயக்கும் இறைவனின் சக்தி, எங்களுக்கு பின்னால் நின்று இயக்கும் மக்கள் சக்தி - இந்த இரு சக்திகளும் எங்களுடன் இணைத்து நிற்கும் காலமெல்லாம், இறைவனின் அளவிலா அருளும், இணை இல்லா கருணையும் கொண்டு, அனைத்து சவால்களையும் துணிவுடன் சந்தித்து வெற்றி பெறுவோம், இன்ஷா அல்லாஹ்.
எந்த ஒரு ஆதிக்க சத்திகளுக்கும், எந்த ஒரு காலத்திலும் பயப்படவும் மாட்டோம், பணியவும் மாட்டோம். ஊசி தங்கத்திலே இருந்தாலும் கண்ணிலே குத்த முடியாது என்பதனை மக்கள் தெளிவாகப் புரிந்துவிட்டார்கள். உண்மை என்னவென்று மக்கள் உணர்ந்து விட்டார்கள். அக்கிரமங்களுக்கு எதிராக போராட மக்கள் துணிந்து விட்டார்கள்.
என்னுடைய தேர்தல் அறிக்கையின் முதல் அம்சமே வெளிப்படையான - தூய்மையான நிர்வாகம். அதனை மக்களுக்கு காட்டவேண்டும் என்பதற்காக நாங்கள் எடுக்கும் அனைத்து நல்ல விசயங்களிலும் தடைக்கற்கள் எத்தனை வந்தாலும், அதனை உடைத்து படிக்கற்களாக்கி சாதித்துக் காட்டுவோம், இன்ஷா அல்லாஹ்.
மக்கள் நீங்கள் மக்கள் பிரதிநிதிகளுடன் இணைந்து செயல்படுங்கள். உங்களின் தேவைகளைச் சொல்வதற்கும், உங்கள் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கும், உங்கள் வீட்டுப் பிள்ளையாக நகராட்சிக்கு அனுப்பிவைத்த உங்கள் பிரதிநிதிகளிடம் கலந்து ஆலோசியுங்கள். உங்களின் ஒருமித்த எண்ணங்களை, அவர்கள் குரல் மூலம் நகராட்சியில் நிச்சயம் ஒலிப்பார்கள். ஏனென்றால், எம்முடைய சகோதர சகோதரிகளாகிய நகர்மன்ற உறுப்பினர்கள் அனைவருமே மக்கள் பணி செய்ய ஓடோடி உழைக்கும் நல்ல மனதிற்கு சொந்தக்காரர்களாக இருக்கின்றார்கள். அவர்களின் செயல்பாடுகளை பாராட்டுகிறேன். அவர்கள் மக்களுக்காற்றும் தூய நற்பணியில் என்றும் அவர்களுடன் இணைந்து நின்று செயலாற்றுவேன், இன்ஷா அல்லாஹ்.
தொலைநோக்கு பார்வையில் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்பதற்காக நாங்கள் எடுத்து கொண்டு இருக்கின்ற முயற்சிகள் பலன் தருவதற்கு சற்று காலதாமதம் ஆனாலும், எதிர்காலத்தில் அவைகள் அனைத்தும் ஒரு பெரிய மாற்றத்தை நாம் பிறந்த மண்ணில் - இன்ஷா அல்லாஹ் - நிச்சயம் ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.
மக்களிடம் தற்போது ஏற்பட்டுள்ள விழிப்புணர்வானது தவறுகளை சுட்டிக்காட்டி தட்டிகேட்கும் மனப்பாங்கினை தந்ததுடன், நம் ஊர், நம் மக்கள் - நம் ஊரின் வளர்ச்சியில் - நம் ஊரின் முன்னேற்றத்தில் நம் பங்கு நிச்சயம் இருக்க வேண்டும் என்ற அக்கறை சீமையில் இருந்தாலும் கூட, சமுக அக்கறையுடன் கூடிய உன்னதமான சிந்தனைகள் நம் இளைய சமுதாயத்தினரின் உள்ளத்திலே உதித்துக் கொண்டே இருப்பது நமதூருக்கு நல்லதொரு விடியல் காத்திருக்கிறது என்பதனை காட்டுகிறது. அவர்களின் பயணங்கள் காயலின் வெளிச்சத்தை நோக்கி புறப்படட்டும்.
இந்த 6 மாத காலத்தின் நகரமன்றத்தின் அனைத்து பிரிவுகளிலும் உள்ள நன்மை, தீமைகளை அலசி ஆராய்ந்து தெளிந்து தெரிந்து கொண்டுள்ளோம். அதன் அடிப்படையிலே அதனை நல்ல முறையில் சீர்செய்வதற்கு பல மாற்றங்களை உடனடியாக ஏற்படுத்த வேண்டி உள்ளது.
மக்கள் பிரதிநிதிகளின் மகத்தான ஒத்துழைப்புடன் அவைகள் அனைத்தையும் சரி செய்வதற்குரிய முயற்சிகளை தொடர்ச்சியாக எடுத்துகொண்டு இருக்கிறோம்.
சென்னையில் மாண்புமிகு தமிழக அமைச்சர்கள், நகராட்சி நிர்வாக அதிகாரிகளை என அனைவரையும் - நகர்மன்ற உறுப்பினர்களுடன் நேரில் சந்தித்து, நமது நகராட்சிக்கு நிரந்தர ஆணையர் நியமனம், காலிப் பணியிடங்களுக்கு அலுவலர்களை நியமித்தல் உள்ளிட்ட பல்வேறு தேவைகளை கோரிக்கையாக முன்வைத்து வந்தோம். அதன் பலனாக, தற்போது நம் நகராட்சிக்கு திரு. அசோக் குமார் என்பவர் நிரந்தர ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். நகராட்சிக்கு நிர்வாக அதிகாரி என்ற நிலை மாறி, ஆணையர் பொறுப்பு என்று ஆனது முதல் தற்போதுதான் நிரந்தர ஆணையர் நியமிக்கப்பட்டுள்ளார் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
நமதூரின் பிரதான பிரச்னை குடிநீர். தற்போது பெறப்படும் தண்ணீரை முறையாக விநியோகிக்க ஆலோசனை வழங்க குழு ஒன்றினை காயல்பட்டினதிற்கு அனுப்ப - நாங்கள் சென்னை சென்றிருந்தப்போது கோரிக்கைவைத்துள்ளோம். அது குறித்த முடிவினை அதிகாரிகள் விரைவில் எடுப்பார்கள் என நான் நம்புகிறேன்.
மேலும் - நீண்டகாலமாக நாம் அனைவரும் எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கும் - இரண்டாம் குடிநீர் திட்டத்திற்கான, நிர்வாக ஒப்புதல் தற்போது பெறப்பட்டுள்ளது. இத்தருணத்தில் - இதற்காக உழைத்த முன்னாள் நகர்மன்றத் தலைவர்கள், உறுப்பினர்கள், அதிகாரிகள், பொது நல அமைப்புகள் மற்றும் அரசாங்கங்களுக்கு எனது நன்றியினை கூறிகொள்கிறேன்.
தெருவிளக்கு பராமரிப்பு பணியில் ஏற்ப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண மின்வாரிய உயர் அதிகாரியை சந்தித்து கோரிக்கைகளை முன் வைத்து தேவையான விளக்கங்களை பெற்றுள்ளோம். நகராட்சியின் விதிப்படி நம் நகர் மன்றத்தின் மூலமே ஒப்பந்த அடிப்படையில் நாமே இரண்டு வயர் மேன்களை நியமித்தும், நல்ல தரமான முன்னணி நிறுவனங்களிடம் இருந்து நேரடியாக மின்சாதன பொருட்களை கொள்முதல் செய்தும், தெருவிளக்கு பராமரிப்பு பணிகளை நல்ல முறையில் செய்திட நாடி உள்ளோம்.
மின்சார சேமிப்பிற்கு உதவும் சூரியன் மின்சக்தி மற்றும் எல்.இ.டி. போன்ற நவீன தொழில் நுட்ப விளக்குகளை வருங்காலத்தில் நமதூரில் அறிமுகப்படுத்த முயற்சிகள் எடுக்க உள்ளோம்.
நவீன முறையில் குப்பைகளை உரமாக்கும் திட்டத்தினை அறிமுகப்படுத்த உள்ளோம்.
தமிழக அரசின் புதிய திட்டமான பிளாஸ்டிக் சாலை அமைக்கும் திட்டமானது நமதூரிலும் செயல்படுத்த பட வேண்டி இருப்பதால் அத்திட்டம் பற்றிய விளக்கங்களை எடுத்துரைக்கவும் நம் ஊரின் தெருக்களை ஆய்வு செய்யவும் - அந்த தொழில்நுட்பத்தை கண்டுப்பிடித்த - டாக்டர் வாசுதேவன் அவர்கள் நமதூருக்கு வருகை தர இருக்கிறார்கள் என்பதனையும் தெரிவித்து கொள்கிறேன்.
இத்திட்டங்கள் எல்லாம் சிறப்பாக செயல்பட்டு அதன் பலன்கள் எல்லாம் நமதூருக்கும் நமது மக்களுக்கும் முழுமையாக கிடைக்க வேண்டும் என்றால் உங்கள் அனைவர்கள்ளுடைய அன்பான ஆதரவும் அனுசரணையும் ஆலோசனையும் என்றும் எங்களுக்கு நீங்கள் தந்திட வேண்டும் என்று வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறோம்.
புதிய நகர்மன்றம் பொறுப்பேற்ற காலம் முதல் பொதுமக்களாகிய உங்களுக்கு நிறைவேற்றப்பட வேண்டிய சேவைகள் பல உடனடியாக நிறைவேற்றப்பட முடியாமல் இருக்கின்றது. நேர்மையாகவும், வெளிப்படையாகவும் உங்கள் நன்மைக்காகவே செயல்பட்டு கொண்டிருக்கும் எங்களுக்காக அச்சிரமங்களை சற்றே பொறுத்துக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தேவையான அனைத்து நடவடிக்கைகளும் விரைவில் மேற்கொள்ளப்பட்டு, பொதுமக்களாகிய உங்களுக்கு நகராட்சி மூலம் கிடைக்க வேண்டிய அனைத்து சேவைகளும் தங்குதடையின்றி கிடைத்திட ஆவன அனைத்தும் செய்யப்படும் என்பதைத் தெரிவித்து கொண்டு எனதுரையை நிறைவு செய்கிறேன். அஸ்ஸலாமு அலைக்கும்.
இவ்வாறு, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா உரையாற்றினார். பின்னர், நகர்மன்றம் மற்றும் நகராட்சி நிர்வாகம் குறித்த சில சந்தேகங்களை பொதுநல அமைப்புகளின் பிரதிநிதிகள் கேள்வியாகக் கேட்டு, தேவையான விளக்கங்களைப் பெற்றுக்கொண்டனர்.
இக்கூட்டத்தில் நகரின் ஜமாஅத் - பொதுநல அமைப்புகளின் பிரதிநிதிகள், புறநகர் ஊர் நலக்கமிட்டி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
தகவல் மற்றும் படங்களில் உதவி:
ஹிஜாஸ் மைந்தன். |