தூத்துக்குடி மாவட்டத்தில், அனுமதியின்றி நிறுவப்படும் விளம்பரப் பலகைகள் பறிமுதல் செய்யப்படுமென, மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் சுருக்கம் பின்வருமாறு:-
தமிழ்நாடு பஞ்சாயத்துகள் சட்டத்தின் கீழ் பஞ்சாயத்து பகுதிகளில் விளம்பர பலகைகள் மற்றும் விளம்பர தட்டிகள் வைப்பது குறித்து விளக்கப்பட்டு உள்ளது. அதன்படி விளம்பர பலகை வைப்பதற்கு உரிமம் பெற முதலில் தனியாருக்கு சொந்தமான இடம் எனில், நில உரிமையாளரிடம் இருந்து தடையில்லா சான்றும், அரசு நிலம் என்றால் தொடர்புடைய அரசு அலுவலகத்தில் இருந்து தடையில்லா சான்றும் பெற வேண்டும்.
தனியார், பொது இடங்களில் விளம்பர பலகை வைக்க விரும்பினால் மாவட்ட ஆட்சியருக்கு முறைப்படி விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும். அனுமதி பெறாத, அனுமதி மறுக்கப்பட்ட அல்லது ரத்து செய்யப்பட்ட விளம்பர பலகைகள் மற்றும் தட்டிகளை சம்பந்தப்பட்டவர்கள், உரிய அலுவலரால் அறிவிப்பு கிடைக்கப்பெற்ற அல்லது ரத்து செய்யப்பட்ட ஆணை கிடைக்கப்பெற்ற நாளில் இருந்து 7 நாட்களுக்குள் விளம்பர பலகைகளை அகற்ற வேண்டும்.
அவ்வாறு அகற்றத் தவறினால், அதனை மாவட்ட ஆட்சியரால் அதிகாரம் அளிக்கப்பட்ட அலுவலர்களால் அப்புறப்படுத்தப்படும். அதற்கான செலவுத்தொகை விளம்பரம் செய்த நபர், நிறுவனத்தாரிடம் இருந்து வசூல் செய்யப்படும். மேலும் கிராம பஞ்சாயத்து பகுதிகளில் மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெறப்படாத விளம்பர பலகைகள் பறிமுதல் செய்யப்படும்.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் தெரிவித்து உள்ளார் |