இ.யூ.முஸ்லிம் லீக் பொதுக்குழுவில் நகர புதிய நிர்வாகிகள் தேர்வு! மாநில பொதுச் செயலாளர் சிறப்புரை!!
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை பொதுக்குழுக் கூட்டத்தில், அக்கட்சியின் நகர நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மாநில பொதுச் செயலாளர் ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் சிறப்புரையாற்றினார்.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, அக்கட்சியின் மாவட்ட செய்தித் தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை பொதுக்குழுக் கூட்டம், 28.04.2012 சனிக்கிழமை மாலை 05.00 மணியளவில், காயல்பட்டினம் திருச்செந்தூர் சாலையில் அமைந்துள்ள - பாங்காக் காயிதெமில்லத் பேரவை அமைப்பாளர் ஹாஜி வாவு ஷம்சுத்தீன் இல்லத்தில் நடைபெற்றது.
ஹாஜி எம்.எஸ்.எம்.பாதுல் அஸ்ஹப் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். தைக்கா உமர் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
தலைமையுரையைத் தொடர்ந்து, கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.ஜே.மஹ்மூதுல் ஹஸன், ஹாஜி மன்னர் பாதுல் அஸ்ஹப், ஹாஜி எஸ்.டி.வெள்ளைத் தம்பி, ஹாஜி என்.டி.அஹ்மத் ஸலாஹுத்தீன், எஸ்.இ.காழி அலாவுத்தீன் ஆலிம், ஹாஜி வாவு ஷம்சுத்தீன், துளிர் ஹாஜி எம்.எல்.ஷேக்னா லெப்பை, எஸ்.கே.ஸாலிஹ், ஹாஜி ஆர்.பி.ஷம்சுத்தீன், ஏ.ஆர்.ஷேக் முஹம்மத், எம்.எல்.முஹம்மத் முஹ்யித்தீன், எம்.இசட்.சித்தீக் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
அதனைத் தொடர்ந்து, கட்சியின் நகர நிர்வாகிகள் போட்டியின்றி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பின்னர், புதிய நிர்வாகிகளை வாழ்த்தியும், கட்சியின் அண்மை நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்தும், மாநில பொதுச் செயலாளர் ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் சிறப்புரையாற்றினார். அவரது உரையில் இடம்பெற்ற தகவல்கள் பின்வருமாறு:-
வரலாற்றுப் பேரியக்கமான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் புதுப்பொலிவுடன் செயலாற்றி வருகிறது. மூத்தவர்களின் வழிகாட்டுதல், இளைஞர்களின் செயல்திறன் இணைந்த உத்வேகத்துடன் செயலாற்றி வரும் இக்கட்சியின் வளர்ச்சியைப் பொருந்திக்கொள்ள இயலாத - சமுதாய அக்கறையற்ற சிலர் கட்சியின் பெயரையும், கொடியையும் தவறான முறையில் பயன்படுத்தி வந்தனர்.
கட்சிக்கு அங்கீகாரம், தனிச்சின்னம்:
இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்திய தேர்தல் ஆணையம், இ.அஹ்மத் ஸாஹிப் தலைமையில் செயல்பட்டு வரும் கட்சிதான் அங்கீகரிக்கப்பட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி என்று அறிவித்துள்ளதோடு, கட்சியின் அதிகாரப்பூர்வ சின்னமாக ஏணி சின்னத்தையும் ஒதுக்கித் தந்துள்ளது. இது மாபெரும் வரலாற்றுச் சாதனையாகும்.
குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி:
தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பின் மூலம், இனி கட்சியின் பெயரையோ, சின்னத்தையோ யாரும் முறைகேடாகப் பயன்படுத்திட இயலாது என்ற நிலை ஏற்பட்டுள்ளதால், அதிருப்தியாளர்களின் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
கட்சிக்கு புதிதாக கிடைக்கப்பெற்றுள்ள ஏணி சின்னத்தை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியது கட்சியின் தலைமை முதல், கடைமட்ட ஊழியர் வரை அனைவரின் பொறுப்புமாகும்.
கேரள முஸ்லிம் லீகிற்கு நன்றி:
தேர்தல் ஆணையத்தின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பு கிடைத்தமைக்கு, கட்சியின் தேசிய தலைவரும், மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சருமான இ.அஹ்மத் ஸாஹிப், தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் மற்றும் கேரள மாநில முஸ்லிம் லீகிற்குத்தான் நாம் நன்றி சொல்ல வேண்டும்.
கேரள மாநில முஸ்லிம் லீக் நிர்வாகத்தின் - விளைவுகளைப் பற்றி அஞ்சாத துணிச்சலான நடவடிக்கை மூலமாகத்தான் இவ்வளவு பெரிய வாய்ப்பு நமக்குக் கிடைத்துள்ளது.
சாதிவாரி கணக்கெடுப்பின் அவசியம்:
சச்சார் கமிஷனால் பரிந்துரைக்கப்பட்ட 74 பரிந்துரைகளில் 71 பரிந்துரைகள் இந்திய அரசால் ஏற்கப்பட்டுள்ளது. ஏற்கப்படா நிலையிலிருந்த எஞ்சிய பரிந்துரைகளில், மத ரீதியான மக்கள் தொகை அடிப்படையில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதும் ஒன்றாகும்.
நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் வழங்கியுள்ள பரிந்துரையில், இந்தியாவில் சிறுபான்மையினருக்கு 15 சதவிகித இடஒதுக்கீடும், அதில் முஸ்லிம்களுக்கு 10 சதவிகித உள் ஒதுக்கீடும் வழங்கப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பரிந்துரைகளின்படி முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டுமென, அண்மையில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீ்க் தமிழ்நாடு மாநில பொதுக்குழு தீர்மானமியற்றியிருந்தது. இத்தீர்மானத்திற்கு பதிலளித்துள்ள தமிழக அரசு, 1931இல் வெள்ளையராட்சியின்போது எடுக்கப்பட்ட மத ரீதியான கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே தற்போது முஸ்லிம்களுக்கு 3.5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாகவும், புதிதாக எடுக்கப்படும் கணக்கெடுப்பின் அடிப்படையில் இட ஒதுக்கீட்டை உயர்த்துவது பற்றி பரிசீலித்து முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
எனவே, 81 ஆண்டுகளுக்குப் பிறகு எடுக்கப்படும் இக்கணக்கெடுப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இக்கணக்கெடுப்பில் கேட்கப்படும் கேள்விகளுக்கு நம் சமுதாயத்தினர் ஒளிவு-மறைவு, அச்சம், தயக்கம் எதுவுமின்றி சரியான தகவல்களைத் தரவேண்டியதும், பதியப்பட்ட தகவல்களை சரிபார்க்க வேண்டியதும் மிகவும் அவசியமாகும்.
இக்கணக்கெடுப்பில் பெறப்படும் தகவல்கள் அடிப்படையில்தான் இட ஒதுக்கீடு உள்ளிட்ட அரசின் அனைத்து சலுகைகளையும் நம் சமுதாயம் பெற்றுக்கொள்ள முடியும் என்பதைக் கருத்திற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் பேசினார்.
அதனைத் தொடர்ந்து, பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 01 - புதிய நிர்வாகக் குழு:
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளைக்கு பின்வருமாறு புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது:-
கவுரவ ஆலோசகர்கள்:
கட்சியின் மூத்த அங்கத்தினரான
ஹாஜி எம்.எஸ்.எம்.பாதுல் அஸ்ஹப்
ஹாஜி எஸ்.டி.வெள்ளைத்தம்பி
எஸ்.இ.காழி அலாவுத்தீன் ஆலிம்
ஹாஜி வாவு சித்தீக்
ஹாஜி எம்.எம்.அஹ்மத்
ஹாஜி ஆர்.எஸ்.அப்துல் காதிர்
ஹாஜி வாவு அப்துல் கஃப்ஃபார்
ஆகியோர் கவுரவ ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தலைவர்:
ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர்
துணைத்தலைவர்கள்:
ஹாஜி எம்.எம்.மொகுதூம் கண்டு ஸாஹிப்
ஹாஜி எஸ்.டி.முஸ்தஃபா கமால்
ஹாஜி எம்.கே.முஹம்மத் அலீ என்ற ஹாஜி காக்கா
ஹாஜி பி.எம்.எஸ்.அமானுல்லாஹ்
அரபி ஷாஹுல் ஹமீத்
ஹாஜி எம்.பி.ஏ.ஸலீம்
செயலாளர்:
ஏ.எல்.எஸ்.அபூ ஸாலிஹ்
துணைச் செயலாளர்கள்:
துளிர் ஹாஜி எம்.எல்.ஷேக்னா லெப்பை
ஹாஜி என்.டி.அஹ்மத் ஸலாஹுத்தீன்
எம்.எச்.அப்துல் வாஹித்
பெத்தப்பா சுல்தான்
ஹாஜி ஹாஜா முஹ்யித்தீன்
ஜுவெல் ஜங்ஷன் கே.அப்துர்ரஹ்மான்
பொருளாளர்:
ஹாஜி எம்.ஏ.முஹம்மத் ஹஸன்
இளைஞரணி அமைப்பாளர்:
கே.எம்.என்.மஹ்மூத் லெப்பை
மாணவரணி அமைப்பாளர்:
டி.ஏ.நூஹ் நஜீயுல்லாஹ்
சுதந்திர தொழிலாளர் யூனியன் அமைப்பாளர்:
எச்.முஹம்மத் இஸ்மாஈல்
மகளிரணி அமைப்பாளர்:
கே.வி.ஏ.டி.முத்து ஹாஜரா
காயிதெமில்லத் பேரவை அமைப்பாளர்:
ஆசிரியர் அப்துல் ரசாக்
கல்வி மேம்பாட்டு அணி அமைப்பாளர்:
ஹாஃபிழ் வாவு எஸ்.ஏ.ஆர்.அஹ்மத் இஸ்ஹாக்
அலுவலக செயலாளர்:
எம்.டி.ஏ.முஹம்மத் முஹ்யித்தீன்
தீர்மானம் 02 - பழைய கட்டிடத்தை விற்று புதிய கட்டிடம் வாங்கல்:
காயல்பட்டினம் சீதக்காதி நகரிலுள்ள கட்சிக்குச் சொந்தமான கட்டிடத்தை விற்று, கட்சி அலுவலகத்திற்காக சதுக்கைத் தெருவில் புதிதாக கட்டிடம் வாங்கிட இக்கூட்டம் ஒப்புதலளிக்கிறது.
தீர்மானம் 03 - புதிய அலுவலகத்திற்கு பெயர்:
கட்சி அலுவலகத்திற்காக காயல்பட்டினம் சதுக்கைத் தெருவில் வாங்கப்படும் புதிய கட்டிடத்திற்கு, தியாகி பி.எச்.எம்.அப்துல் காதிர் மன்ஸில் என்று பெயர் சூட்டப்படுகிறது. தரை தளம், மேல் தளம் ஆகிய இரண்டு தளங்களைக் கொண்ட இக்கட்டிடத்தின் மேல் தளத்தை கட்சி அலுவலகத்திற்கு பயன்படுத்திக்கொள்வது என்றும், தரை தளத்தை வாடகைக்கு விடுவதென்றும் தீர்மானிக்கப்பட்டு, வாடகைதாரர்கள், வாடகை தொகை குறித்து முடிவு செய்ய,
ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர்,
ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர்,
ஹாஜி என்.டி.அஹ்மத் ஸலாஹுத்தீன்,
பெத்தப்பா சுல்தான்,
எஸ்.ஜே.மஹ்மூதுல் ஹஸன்
ஆகியோரடங்கிய குழுவை நியமித்து இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 04 - அலுவலக திறப்பு விழா:
காயல்பட்டினம் சதுக்கைத் தெருவில் வாங்கப்படும் கட்சியின் புதிய அலுவலகமான தியாகி பி.எச்.எம்.அப்துல் காதிர் மன்ஸிலை, 24.05.2012 அன்று, நகர பிரமுகர்கள் முன்னிலையில், கட்சியின் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களைக் கொண்டு திறப்பு விழா நடத்திட இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 05 - அலுவலக நேரம்:
தினமும் காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரையிலும், மீண்டும் மாலை 05.00 மணி முதல் இரவு 08.00 வரையிலும் கட்சி அலுவலகம் செயல்படும் நேரமாக தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம் 06 - சொத்து வாங்க-விற்க ஒத்துழைத்தோருக்கு நன்றி:
சீதக்காதி நகரிலுள்ள கட்டிடத்தை விற்பதற்கு ஒத்துழைத்த பெத்தப்பா சுல்தான், சதுக்கைத் தெருவில் கட்டிடம் வாங்கிட ஒத்துழைத்த ஹாஜி என்.டி.அஹ்மத் ஸலாஹுத்தீன் ஆகியோருக்கு இக்கூட்டம் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் 07 - வரவு செலவு கணக்கறிக்கை:
கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட கட்சியின் வரவு-செலவு கணக்கறிக்கைக்கு இக்கூட்டம் ஒருமனதாக ஒப்புதலளிக்கிறது.
வரவு-செலவு கணக்கறிக்கையில் காண்பிக்கப்பட்ட நிலுவைத் தொகையான ரூ.21,025 தொகையை சரிசெய்ய இணைந்து அனுசரணை வழங்கிய கட்சியின் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் இக்கூட்டம் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் 08 - மகளிரணி சிறப்பு நிகழ்ச்சி:
நகர பெண்கள் முன்னேற்றத்தைக் கருத்திற்கொண்டு, கட்சியின் மகளிரணி மாநில அமைப்பாளர் பேராசிரியை தஸ்ரிஃப் ஜஹான் அவர்களைக் கொண்டு, சிறப்பு நிகழ்ச்சியை விரைவில் நடத்திட தீர்மானிக்கப்படுவதுடன், அதற்கான தேதி குறித்து நகர நிர்வாகக் குழு கலந்தாலோசித்து இறுதி முடிவு செய்ய இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 09 - பேருந்து நிலைய சுவரை அகற்றக் கோரிக்கை:
காயல்பட்டினம் பேருந்து நிலைய வளாகத்தின் தென்புறத்தில் - எல்.எஃப்.வீதியையொட்டி அமைந்துள்ள சுவர், எதிரில் வரும் வாகனத்தைப் பார்க்க இயலாத நிலையில் மறைத்திருப்பதால், அச்சுவற்றை அகற்றிட, நகராட்சியை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 10 - தொடர்வண்டி நிலைய நிலுவைப்பணி:
காயல்பட்டினம் தொடர்வண்டி நிலையத்தில் சுமார் 70 லட்சம் ரூபாய் செலவு மதிப்பீட்டில் நடைபெற்று வந்த மேம்பாட்டுப் பணிகள் தகுந்த காரணமின்றி நீண்ட காலமாக நிறைவேற்றி முடிக்கப்படாமலிருப்பதைச் சுட்டிக்காட்டி தொடர்வண்டித் துறை மதுரை கோட்ட அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து விரைவில் சாதகமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாவிடில், செய்யப்பட வேண்டிய போராட்ட வழிமுறைகள் குறித்து இறுதி முடிவெடுக்க,
ஹாஜி மன்னர் பாதுல் அஸ்ஹப்,
ஹாஜி ஆர்.பி.எஸ்.ஷம்சுத்தீன்
உள்ளிட்டோரடங்கிய குழுவை இக்கூட்டம் நியமிக்கிறது.
தீர்மானம் 11 - மணிச்சுடர் நாளிதழ் வினியோகப் பொறுப்பு:
நகர நிர்வாகிகள் அனைவரும், கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான மணிச்சுடர் நாளிதழில் சந்தாதாரராகுமாறு இக்கூட்டம் கேட்டுக்கொள்வதோடு, சந்தாதாரர் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக, ஆசிரியர் மு.அப்துல் ரசாக் அவர்களை மணிச்சுடர் நாளிதழ் வினியோகப் பொறுப்பாளராக இக்கூட்டம் நியமிக்கிறது.
மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இறுதியில், நகர புதிய செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூ ஸாலிஹ் நன்றி கூற, எஸ்.இ.காழி அலாவுத்தீன் ஆலிம் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது. இக்கூட்டத்தில், நகர முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
இவ்வாறு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செய்தித் தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[செய்தி திருத்தப்பட்டது @ 09:53/02.05.2012] |