காயல்பட்டினம் ஐக்கிய சமாதானப் பேரவை சார்பில், உத்தம திருநபியின் உதயதின விழா, அழைப்பியல் நூற்கள் வெளியீட்டு விழா, நலிந்தோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகியன அடங்கிய முப்பெரும் விழா இம்மாதம் மாதம் 27, 28, 29 தேதிகளில், காயல்பட்டினம் ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ் உள்ளரங்கிலும், வெளிமேடையிலும் நடைபெற்று வருகிறது.
27.04.2012 அன்று “உத்தம நபியின் உதயதின விழா” என்ற தலைப்பில், துவக்க முதல் நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. அன்று காலையில், காயல்பட்டினம் ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ் உள்ளரங்கில் பேச்சுப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.
இரவு 07.00 மணியளவில், ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ் அருகிலுள்ள வெளிமேடையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஐக்கிய சமாதானப் பேரவையின் துணைத்தலைவர் மவ்லவீ நெல்லை ஏ.சுலைமான் சேட் தலைமை தாங்கினார். ஹாஜி எஸ்.ஏ.எம்.முஹ்யித்தீன் தம்பி, ஹாஜி சொளுக்கு எஸ்.எம்.கபீர், கவிஞர் ஹாஜி எஸ்.செய்யித் அஹ்மத் மற்றும் நகரப் பிரமுகர்கள் முன்னிலை வகித்தனர்.
மாணவர் ஏ.ஆர்.இப்றாஹீம் அப்துர்ரஷீத் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். ஐக்கிய சமாதானப் பேரவையின் பரப்புரையாளர் கே.முஹம்மத் ஆஷிக் வரவேற்புரையாற்றினார். தலைமையுரையைத் தொடர்ந்து, மவ்லவீ என்.டி.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் நுஸ்கீ, மவ்லவீ ஏ.சுல்தான் அப்துல் காதிர் ரஹ்மானீ ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
அதனைத் தொடர்ந்து, “இந்தியாவில் இஸ்லாத்தின் வருகையும், கலாச்சாரப் புரட்சியும்” என்ற தலைப்பில் ஐக்கிய சமாதானப் பேரவை செய்திப்பிரிவு செயலாளர் மவ்லவீ அப்துர்ரஹ்மான் ஷிப்லீ மிஸ்பாஹீ உரையாற்றினார்.
அடுத்து, இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட மதிமுக கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் கி.சம்பத், “சமூகத் தீமைகளுக்கு எதிராக நபிகள் நாயகம் (ஸல்)” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
ஐக்கிய சமாதானப் பேரவையின் அலுவலக மேலாளர் எம்.செய்யித் முஹம்மத் புகாரீ நன்றி கூற, அதன் தலைவர் மவ்லவீ என்.ஹாமித் பக்ரீ மன்பஈ துஆவுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.
காயல் அமானுல்லாஹ் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். இந்நிகழ்ச்சியில், நகரின் பல பகுதிகளிலிருந்தும் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது.
|