காயல்பட்டினத்திலுள்ள தெரு விளக்குகள் பராமரிப்பில் நகராட்சி சந்திக்கும் குறைகள் குறித்து, நகர்மன்றத் தலைவர் தலைமையிலான குழுவினர் மின்வாரிய செயற்பொறியாளரை சந்தித்து விளக்கம் கேட்டுள்ளனர். விபரம் பின்வருமாறு:-
காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தெரு விளக்குகள் பராமரிப்பிலுள்ள குறைபாடுகளைக் களைந்திடும் நோக்குடன், நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா தலைமையில், மன்ற உறுப்பினர்கள் ஏ.ஹைரிய்யா, கே.ஜமால், இ.எம்.சாமி, எம்.ஜஹாங்கீர் ஆகியோர், திருச்செந்தூர் மின்வாரிய வினியோகத்துறை செயற்பொறியாளர் தாமோதரனுடன், ஆறுமுகநேரி துணை மின் நிலைய அலுவலகத்தில் இன்று நண்பகல் 12.00 மணியளவில் ஆலோசனை நடத்தினர்.
காயல்பட்டினம் நகராட்சிப் பகுதியில் தெரு விளக்குகள் பராமரிப்பில் உள்ள சேவைக் குறைபாடுகள் குறித்து, மின் வாரிய செயற்பொறியாளரிடம் நகர்மன்றத் தலைவர் முறையிட்டார். அதற்கு விளக்கமளித்த செயற்பொறியாளர், காயல்பட்டினம் நகராட்சி தரத்தைப் பெறுவதற்கு முன்பு வரை தெரு விளக்கு பராமரிப்பு மின் வாரியத்தின் பொறுப்பில் இருந்ததாகவும், நகராட்சி தரத்தையடைந்த பின்னர் அப்பொறுப்பு நகராட்சி நிர்வாகத்திற்குட்பட்டது என்றிருந்தும், இத்தனை ஆண்டுகளாக நகராட்சி மூலம் தெரு விளக்கு பராமரிப்பிற்கென பணியாளர் நியமிக்கப்படாதது தமது குற்றமல்ல என்றும் தெரிவித்தார்.
நகராட்சி மூலம் இதற்கென பணியாளரை நியமித்து பராமரிப்புப் பணிகள் செய்யப்பட்டால், அப்பகுதியில் மின் வினியோகத்தை நிறுத்தி, பணி நிறைவடைந்த பின் மீண்டும் மின் வினியோகம் செய்யும் பொறுப்பை மட்டுமே மின் வாரியம் செய்யும் என்றும் தெரிவித்த அவர், தெரு விளக்குகள் பராமரிப்பை மட்டுமே நகராட்சி செய்ய வேண்டுமெனவும், மின் வாரியம் தொடர்பான இதர பொறுப்புகள் அனைத்தையும் மின் வாரியமே பார்த்துக்கொள்ளும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
புதிய நகர்மன்றம் பொறுப்பேற்று சில மாதங்களேயான நிலையில், புதிதாக பணியாளரை நியமிப்பதற்கு சிறிது காலம் எடுக்கும் என்றும், அதுவரையிலும் மின் வாரியம் ஒத்துழைப்பளிக்குமாறும் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா செயற்பொறியாளரைக் கேட்டுக்கொண்டார். அதற்கு பதிலளித்த செயற்பொறியாளர் தாமோதரன், இதுகுறித்து நகர்மன்றத்தின் மூலம் எழுத்துப்பூர்வமாக கோரிக்கையளிக்குமாறும், அதனடிப்படையில் ஆவன செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
இச்சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்றது. காயல்பட்டினம் மின் வாரிய உதவி பொறியாளர் முருகன் இச்சந்திப்பின்போது உடனிருந்தார். |