இந்திய நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களது பொருளாதார நிலை, அவர்கள் வசிக்கும் வீடுகள், வேலை, வருமானம், வெளி மாநிலத்தவர்கள் குறித்த விபரம், மாற்றுத் திறனாளிகள், வீடில்லாதோர் குறித்த தகவல்களை சேகரிக்கும் பொருட்டு, சமூக - பொருளாதார - சாதிவாரி கணக்கெடுப்பை நாடெங்கும் நடத்திட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இக்கணக்கெடுப்பு, ஏப்ரல் 23ஆம் தேதி துவங்கி, 40 நாட்கள் நடைபெறும்.
காயல்பட்டினம் நகராட்சிப் பகுதியில், இக்கணக்கெடுப்பில் ஈடுபடும் தன்னார்வலர்களுக்கு காயல்பட்டினம் நகராட்சி அலுவலகத்தில் கணினியில் தகவல்களைப் பதிவு செய்வது குறித்து பயிற்சியளிக்கப்பட்டது. ஏரலைச் சார்ந்த முஹம்மத் ஷமீல் என்ற பயிற்சியாளர், தன்னார்வப் பணியாளர்களுக்கு பயிற்சியளித்தார். காயல்பட்டினம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் பொன்வேல்ராஜ் பயிற்சியளிப்பை மேற்பார்வையிட்டார்.
இக்கணக்கெடுப்பில், காயல்பட்டினம் அகநகரிலிருந்து 14 இளைஞர்களும், புறநகரிலிருந்து 2 இளைஞர்களும், மாவட்ட ஆட்சியரகத்தின் சார்பில் இரண்டு யுவதிகளும் ஈடுபடுகின்றனர். சென்ட்ரல் மேனிலைப்பள்ளி ஆசிரியர்களான குலாம் முஹம்மத், அஹ்மத் சுலைமான் ஆகியோர் தினசரி கணக்கெடுப்பில் பெறப்பட்ட தகவல்களை ஒருங்கிணைக்கவுள்ளனர். காயல்பட்டினத்திலுள்ள 18 வார்டுகளில், 40 நாட்களுக்கு இக்கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. |