காயல்பட்டினத்தில், பண்டகசாலை (தீவுத்)தெரு, கீழ லெட்சுமிபுரம், ஓடக்கரை, கோமான் தெரு ஆகிய நான்கு பகுதிகளில், தமிழக அரசின் ஆரம்ப சுகாதார மையங்கள், காயாமொழி ஆரம்ப சுகாதார நிலையத்தின் கீழ் செய்யப்பட்டு வருகிறது.
நகர்ப்புறத்திலுள்ள ஏழை பொதுமக்களும் அரசின் சுகாதாரத் திட்ட நன்மைகளைப் பெற்றிட வேண்டும் என்ற நோக்கில், தமிழகத்தின் அனைத்து நகராட்சிப் பகுதிகளிலும் ஆரம்ப சுகாதார நிலையங்களை அமைத்திட தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அண்மையில் உத்தரவிட்டுள்ளதையடுத்து, அவ்விடங்களில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பதற்கான நிலங்கள் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
அந்த வரிசையில் காயல்பட்டினம் நகராட்சிப் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பதற்கான நிலம் தேவைப்படுவதாக நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா அண்மையில் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதன் தொடர்ச்சியாக, கோமான் தெரு, கடையக்குடி, பேருந்து நிலையப் பகுதி உள்ளிட்ட நகரின் சில பகுதிகள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
அவ்விடங்களை, தூத்துக்குடி மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் உமா இன்று காலை 11.00 மணியளவில், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதாவுடன் சென்று பார்வையிட்டார்.
பொது சுகாதாரத் துறை நேர்முக உதவியாளர் காதர் ஷா, திருச்செந்தூர் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஆர்.சுப்பிரமணியம், காயல்பட்டினம் வட்டார சுகாதார ஆய்வாளர் சோமசுந்தரம் ஆகியோர் அவருடன் வந்திருந்தனர்.
அனைத்திடங்களையும் பார்வையிட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் உமா, பரிசீலிக்கப்பட்ட இடங்கள் அனைத்துமே ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பதற்குத் தகுதியான இடங்கள்தான் என்றும், எனினும் சரியான அமைவிடத்தை இறுதி முடிவு செய்வது குறித்து, மக்கள் பிரதிநிதிகளான நகர்மன்ற உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து, நகர்மன்றத் தலைவர் விரைவில் தனது முடிவைத் தெரிவிக்குமாறும், அதனடிப்படையில் அங்கு ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமானப் பணிகளைத் துவக்கலாம் என்றும் தெரிவித்தார்.
அதற்கு விடையளித்துப் பேசிய நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா, இம்மாதம் 28ஆம் தேதியன்று நடைபெறவுள்ள நகர்மன்றக் கூட்டத்தில் இதுகுறித்து விவாதித்து இறுதி முடிவைத் தெரிவிப்பதாகத் தெரிவித்தார்.
காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர்கள் ஏ.லுக்மான், எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், அதிமுக திருச்செந்தூா ஒன்றிய செயலாளர் மு.ராமச்சந்திரன், ஜெயலலிதா பேரவை நகரச் செயலாளர் ஹாஜி எல்.எஸ்.அன்வர், எம்.ஜி.ஆர். பேரவை நகரச் செயலாளர் சி.பி.முத்தையா, மதிமுக நகர செயலாளர் பத்ருத்தீன், சமூக ஆர்வலர் பி.ஏ.ஷேக் உள்ளிட்டோர் இந்நிகழ்வின்போது உடனிருந்தனர். |