10ம் வகுப்பு பாடநூல்கள் விநியோகம் ஏப்ரல் 26 (நேற்று) அன்று துவங்கியது. இது குறித்து தமிழ் நாடு பாட நூல் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
10ம் வகுப்பு பாடநூல்கள் ஏப்ரல் 26 முதல் பள்ளிகளுக்கு வழங்க தமிழ்நாடுப் பாடநூல் கழகம் ஏற்பாடு செய்துள்ளது.
அரசு அறிவுரையின்படி ஏப்ரல் 26ந் தேதி முதல் 10ம் வகுப்பு பாடநூல்களை வழங்க தமிழ்நாடுப் பாடநூல் கழகம் முடிவு செய்துள்ளது. இலவசப் பாடநூல்களை பொறுத்தவரையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ / மாணவியர்களுக்கான பாடநூல்கள் அந்தந்த மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்டுள்ள மையங்களுக்கு அச்சகங்களிடமிருந்து நேரடியாக அனுப்பப்பட்டுள்ளன.
முதன்மை கல்வி அலுவலர்கள் இப்புத்தகங்களை தங்கள் மாவட்டங்களிலுள்ள பள்ளிகளுக்கு ஏப்ரல் 26-ந்தேதி முதல் அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் ஆணை வழங்கப்பட்டுள்ளது. இப்புத்தகங்கள் 9ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானபின் தலைமை ஆசிரியர் வாயிலாக மாணவர்களுக்கு கிடைக்கும்.
விற்பனை பாடநூல்களை பொறுத்த வரையில் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் (தனியார் பள்ளிகள்) பயிலும் மாணவர்களுக்கான பாடநூல்கள் சென்னையிலுள்ள தமிழ்நாடுப் பாடநூல் கழக தலைமை அலுவலகத்திலும், 22 வட்டார அலுவலகங்களிலும் விற்பனை செய்யப்படவுள்ளன. ஏப்ரல் 26ந்தேதியன்று விற்பனை தொடங்கப்படவுள்ளது. மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர்கள் தமிழ்நாடுப் பாடநூல் கழக வட்டார அலுவலர்களுடன் இணைந்து இப்பணியினை மேற்கொள்ளுமாறு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள் ஏப்ரல் 26ந்தேதி முதல் அவரவர்களுக்கு தொடர்புடைய மெட்ரிக்பள்ளி ஆய்வாளர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு அவர்கள் ஒதுக்கும் நாள் மற்றும் நேரத்தில் பாடநூல்களை அதற்கான தொகையை வரைவோலையாக செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். சென்னையில் அதிக அளவில் மெட்ரிகுலேசன் பள்ளிகள் உள்ளதால் அனைத்துப் பள்ளிகளுக்கும் எந்த காலதாமதமும் இல்லாமல் உடனடியாக பாடநூல்கள் கிடைப்பதற்கு ஏதுவாக ஒரு பகுதியிலுள்ள சில பள்ளிகள் ஒருங்கிணைந்து பாடநூல் கிடங்கிலிருந்து பாடநூல்களை அவற்றில் ஒரு பள்ளிக்கு எடுத்துச் சென்று இதரப் பள்ளிகளுக்கு பிரித்து வழங்க ஆவன செய்யப்பட்டுள்ளது.
ஏப்ரல் 28-4-2012 மற்றும் 29-4-2012 ஆகிய சனி, ஞாயிறு இரண்டு நாட்களும் பாடநூல் கிடங்குகள் இயங்கும்.
10ம் வகுப்பு பாடநூல்களுக்கான விலை கீழ்க்கண்டவாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
1. தமிழ் - ரூபாய் 70
2. ஆங்கிலம் - ரூபாய் 70
3. கணக்கு - ரூபாய் 70
4. அறிவியல் - ரூபாய் 70
5. சமூக அறிவியல் - ரூபாய் 70
புத்தகங்களை தொகுப்பாகவோ அல்லது தனித்தனியாகவோ பெற்றுக் கொள்ளலாம்.
பாடநூல்களுக்கானத் தொகையை மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் 5 சதவீத கழிவு போக நிகரத் தொகையை அந்தந்த வட்டார அலுவலகங்கள் அமைந்துள்ள ஊரில் மாற்றத்தக்கதாக வரைவோலை அளித்து பாடநூல்களை பெற்றுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு பாடநூல்கள் அனைத்தும் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் போதுமான அளவு அச்சிடப்பட்டுள்ளது.
மேலும் 10ம் வகுப்பு பாடநூல்கள் www.textbookcorp.tn.nic.in இணைய தளத்தில் மாணவர்களின் நலன் கருதி வெளியிடப்படவுள்ளது.
இவண்,
மேலாண்மை இயக்குநர்,
தமிழ் நாடு பாட நூல் கழகம்.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை,
தலைமைச்செயலகம், சென்னை. |