ஐக்கிய அரபு அமீரக தலைநகர் அபூதபியில் வசிக்கும் காயலர்களை ஒருங்கிணைத்து, அபூதபீ காயல் நல மன்றம் அண்மையில் துவக்கப்பட்டது. இவ்வமைப்பின் இலச்சினை (லோகோ) தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இவ்விலச்சினையை அறிமுகப்படுத்தி, அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும்.
கடந்த செயற்குழுவில் கேட்டுக்கொண்டதற்கிணங்க, மன்றத்தின் இணைச் செயலாளர் ஜனாப் ஆர்க்கிடெக்ட் எம்.ஜே.ஹபீபுர்ரஹ்மான் அவர்கள், அமீரகம் - இஸ்லாம் - பொதுச்சேவை மற்றும் மன்றத்தின் கொள்கைக் குறிக்கோள்களைப் பறைசாற்றும் வகையில், மிக அழகான - தெளிவான இலச்சினையை தனது திறமையால் வடிவமைத்து, அபூதபீ காயல் நல மன்றத்திற்கு சமர்பித்துள்ளார். அதை மன்றம் ஒருமனதாக அங்கீகரித்து, மன்றத்தின் இலச்சினையாக அதிகாரப்பூர்வமாக வெளியிடுகிறது.
இவ்விலச்சினையை தனது பணிச்சுமைகளுக்கிடையில் உருவாக்கித் தந்தமைக்காக மன்றம் அவரை நன்றியுடன் வெகுவாகப் பாராட்டுகிறது.
இலச்சினையின் மூன்று முக்கிய அம்சங்கள்:
1. ஷேக் ஜாயித் பள்ளி:
அமீரகத்தின் தலைநகர் அபூதாபி மற்றும் இஸ்லாமியஅடையாளங்களைப் பிரதிபளிக்கும் முகமாக அபூதாபியிலுள்ள உலக பிரசித்தி பெற்ற ஷேக் ஜாயித் பள்ளியின் கோட்டு சித்திரத்தைக்கொண்டு சித்தரிக்கப்பட்டுள்ளது.
2. இரு கைகள்:
மத்தியிலுள்ள இரு கைகள் இறைவனிடம் உதவி நாடுவதைக்குறிக்கிறது.
3. சூரியன்:
ஒளிர்கின்ற, சக்தி வாய்ந்த மற்றும் சுயநிர்ணய சமுதாயத்தினை உருவாக்க உழைப்போம் என்ற எம்முடைய குறிக்கோள்களை உணர்த்துகிறது.
குறிக்கோள் வாக்கியங்கள்:
சமுதாயத்திற்கு சேவை செய் – எம் மன்றத்தின் மூல நோக்கம்.
வல்லோனிடம் வேண்டு – எம் சமுதாயச் சேவையின் பலனாக நாங்கள்வேண்டி நிற்பது.
இவ்வாறு, அபூதபீ காயல் நல மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
M.E.முஹ்யித்தீன் அப்துல் காதிர்,
செய்தித் தொடர்பாளர்,
காயல் நல மன்றம்,
அபூதபீ, ஐக்கிய அரபு அமீரகம். |