காயல்பட்டினம் நகராட்சி சேவைகளில் பொதுமக்களுக்குள்ள நியாயமான குறைகளைக் கேட்டறிந்து உடனுக்குடன் அவற்றை சரிசெய்திடும் பொருட்டு, மாதந்தோறும் மக்கள் குறைதீர் கூட்டம் நடத்த வேண்டுமென கடந்த டிசம்பர் மாதம் 30ஆம் தேதியன்று நடைபெற்ற காயல்பட்டினம் நகர்மன்றக் கூட்டத்தில், நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா முன்மொழிய தீர்மானமியற்றப்பட்டது.
அதனடிப்படையில், மாதந்தோறும் கடைசி புதன்கிழமைகளில் இக்கூட்டம் தொடர்ச்சியாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு, அதன்படி நடைபெற்று வருகிறது. முதல் கூட்டம் 25.01.2012 அன்று நடைபெற்றது. பிப்ரவரி மாதம் நடைபெற வேண்டிய கூட்டம், சங்கரன்கோவில் இடைத்தேர்தலை முன்னிட்டு - தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையிலிருந்த காரணத்தால் நடத்தப்படவில்லை. மார்ச் மாத (இரண்டாவது) கூட்டம், 28.03.2012 புதன்கிழமையன்று நடைபெற்றது.
ஏப்ரல் மாத மக்கள் குறைதீர் (மூன்றாவது) கூட்டம், 25.04.2012 புதன்கிழமை மதியம் 03.00 மணி முதல், மாலை 05.00 மணி வரை, காயல்பட்டினம் நகராட்சி கூட்டரங்கில் நடைபெற்றது.
பொதுப்பணி தொடர்பாக 2 மனுக்களும், குடிநீர் குறைபாடுகள் தொடர்பாக 4 மனுக்களும், பொதுவான கோரிக்கைகளுக்காக 1 மனுவும், தெரு விளக்கு தொடர்பாக 2 மனுக்களும் என மொத்தம் 9 மனுக்களை, நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொண்டார்.
நகர்மன்ற உறுப்பினர்களான முஹம்மத் செய்யித் ஃபாத்திமா, பி.எம்.எஸ்.சாரா உம்மாள், கே.வி.ஏ.டி.முத்து ஹாஜரா, எம்.ஜஹாங்கீர், ஜே.அந்தோணி, எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், பாக்கியஷீலா, கே.ஜமால், சாமு ஷிஹாபுத்தீன், இ.எம்.சாமி ஆகியோர் கூட்டத்தை ஒருங்கிணைத்தனர்.
|