காயல்பட்டினத்தில், திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை தகுந்த செயல்திட்டம் வகுத்து முறைப்படுத்திச் செய்வது குறித்து சென்னை எக்ஸ்னோரா நிறுவன பிரதிநிதி ஆய்வு நடத்தியுள்ளார். விபரம் பின்வருமாறு:-
அண்மையில் நகர்மன்ற உறுப்பினர்களுடன் சென்னை சென்றிருந்த காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா அங்கு பல அரசு அதிகாரிகள், தன்னார்வ அமைப்புகளின் நிர்வாகிகளை சந்தித்துப் பேசினார்.
அந்த வரிசையில், கடந்த 01.04.2012 அன்று, புகழ்பெற்ற சுற்றுப்புறச் சூழல் தன்னார்வத் தொண்டு நிறுவனமான EXNORA INTERNATIONAL நிறுவனர் எம்.பி.நிர்மலை நகர்மன்றக் குழுவினர் சந்தித்துப் பேசினர்.
இரண்டு மணி நேரம் நடந்த இக்கலந்துரையாடலில், காயல்பட்டினத்தை குப்பைகள் தேங்காத - பசுமையான - சுகாதாரமான நகராக மாற்றுவது குறித்து கருத்துக்கள் பரிமாறப்பட்டது. இத்துறையில் தனது பல ஆண்டுகால அனுபவங்களைப் பகிர்ந்துக்கொண்ட நிர்மல், காயல்பட்டினத்தை நேரில் முழுமையாக ஆய்வுசெய்து, சுகாதாரமான காயல் நகரை உருவாக்க செயல்திட்டம் ஒன்று வடிவமைத்து தர ஆர்வம் தெரிவித்திருந்தார்.
அதனடிப்படையில், 22.04.2012 ஞாயிற்றுக்கிழமையன்று அந்நிறுவனத்தின் பிரதிநிதி தணிக்காச்சலம் காயல்பட்டினம் வருகை தந்தார். காயல்பட்டினத்தில் குப்பைகள் அதிகம் தேங்கும் பகுதிகளை, நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா, உறுப்பினர்களான வி.எம்.எஸ்.முஹம்மத் செய்யித் ஃபாத்திமா, கே.வி.ஏ.டி.முத்து ஹாஜரா, கே.ஜமால் ஆகியோரடங்கிய நகர்மன்றக் குழுவினருடன் அவர் நேரில் சென்று பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து அன்று மாலையில், காயல்பட்டினம் ரஃப்யாஸ் ரோஸரி மழலையர் பள்ளி வளாகத்தில், நகரிலுள்ள பொதுநல அமைப்பினரை அவர் சந்தித்துப் பேசினார்.
தமது தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் மூலம் சென்னை உட்பட பல்வேறு மாநகராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளில் முறையான செயல்திட்டங்களின் அடிப்படையில் திடக்கழிவு மேலாண்மை செய்யப்பட்டு வருவதாகவும், தற்போதைய பயணத்தின்போது, கீழக்கரையில் சுமார் 1,500 வீடுகளை முதலில் தேர்ந்தெடுத்து, அவர்கள் மூலம் இத்திட்டத்தை செயல்படுத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
காயல்பட்டினத்தில் குப்பைகள் பெருவாரியாகத் தேங்கும் அனைத்திடங்களையும் நகர்மன்றத் தலைவர் மற்றும் உறுப்பினர்களுடன் தான் நேரில் சென்று பார்வையிட்டதாகவும், மற்ற ஊர்களுடன் ஒப்பிடுகையில் இங்குள்ள மக்கள் கூடுதல் சுகாதார விழிப்புணர்வு கொண்டவர்களாக இருப்பதைத் தான் அறிந்துகொண்டதாகவும், எனவே இந்நகரில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை வெகு இலகுவாக செய்திட இயலும் என்றும் அவர் அப்போது தெரிவித்தார்.
மறுநாள் 23.04.2012 திங்கட்கிழமையன்று, காயல்பட்டினம் நகராட்சியின் தூய்மைப் பணியாளர்களை நேரில் சந்தித்து அளவளாவிய அவர், நகரில் அவர்கள் திடக்கழிவுகளை சேகரிக்கும் முறையை அவர்களோடிணைந்து குப்பை சேகரிக்கும் வண்டியில் சென்றவாறு பார்வையிட்டார்.
பின்னர், தனது பயணத்தின் மூலம் கிடைத்த அனுபவத்தையும், அது தொடர்பான தனது கருத்துக்களையும் அன்று காலை 11.30 மணியளவில், காயல்பட்டினம் நகராட்சி கூட்டரங்கில் நடைபெற்ற ஒன்றுகூடலின்போது, நகராட்சித் தலைவர் மற்றும் உறுப்பினர்களுடன் பகிர்ந்துகொண்டார்.
தகவல் மற்றும் படங்களில் உதவி:
ஹிஜாஸ் மைந்தன். |