ஒரு நகராட்சியின் முக்கிய வருமான ஆதாராங்களில் ஒன்று, கடைகள் மற்றும் நிலங்களை குத்தகைக்கு விடுவது. காயல்பட்டினம் நகராட்சியில் குத்தகைக்கு விடப்பட்டுள்ள கடைகளில் பெருவாரியானவை, சந்தை விலைக்குக் குறைந்த அளவிலேயே வாடகைக்கு விடப்பட்டுள்ளது. அவற்றுள், காயல்பட்டினம் பேருந்து நிலைய வணிக வளாக கடைகளும் உள்ளடக்கம்.
இவ்வணிக வளாகத்தின் வருமான இழப்பை சரிசெய்வதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, கடைகளை குத்தகைக்கு எடுத்திருப்போருடன் கலந்தாலோசனைக் கூட்டம் காயல்பட்டினம் நகராட்சி கூட்டரங்கில், 02.05.2012 அன்று மதியம் 03.00 மணியளவில், நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், அவர் தெரிவித்த கருத்துக்கள் பின்வருமாறு:-
1. குத்தகைதாரர்கள் - தங்கள் வாடகை பாக்கிகளை 15 நாட்களுக்குள் செலுத்தவேண்டும். அதற்கான நோட்டீஸ் உடனடியாக வழங்கப்படும்...
2. 15 நாட்களுக்குள் வாடகை பாக்கியை செலுத்தாவிட்டால் - வாடகை பாக்கி உள்ள கடைகள் - உடனடியாக பொது ஏலம் மூலம் புதிதாக குத்தகைக்கு விடப்படும்...
3. குத்தகைதாரரை தவிர வேறு எவரும் - குத்தகையை அனுபவித்து வந்தால் (பினாமி) - அவர்கள் இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்படும்...
4. தமிழக அரசின் 2007ஆம் ஆண்டு (நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை) அரசாணை 92 படி - குத்தகையை வேறொருவர் அனுபவித்து வந்தால் (பினாமி) -அவரின் பெயருக்கே - அதற்குரிய கட்டணம் பெற்று - பெயர் மாற்றம் செய்ய ஒரு முறை சலுகை வழங்கப்படும். இதற்கு 15 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும்...
5. மற்றொருவரின் பெயரில் உள்ள குத்தகையை அனுபவித்து வருபவர் - அதற்குரிய பெயர் மாற்றம் கட்டணம் செலுத்தி, தனது பெயருக்கு மாற்றம் செய்ய முன்வராத பட்சத்தில் - கடையை காலி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு - உடனடியாக பொது ஏலம் மூலம் புதிதாக குத்தகைக்கு விடப்படும்...
6. தற்போது கடைகள் மூலம் பெறப்படும் வாடகை சந்தை விலையை விட குறைவாக உள்ளதால் - புதிய கட்டணமாக சதுர அடிக்கு ரூபாய் 20 என்ற பட்சத்தில் வாடகை நிர்ணயம் செய்யப்படுகிறது...
7. வாடகை பாக்கி இல்லாத குத்தகைதாரருக்கும், குத்தகைதாரரே அனுபவித்து வரும் கடைகளுக்கும் அல்லது வேறுபெயரில் உள்ள கடையை தனது பெயருக்கு மாற்ற கட்டணம் செலுத்த ஒப்புக்கொண்டுள்ள கடைகளுக்கும், புதிய உயர்த்தப்பட்ட,மாதாந்திர வாடகை - ஒப்பந்தம் வழங்கப்படும்...
8. புதிய வாடகையை ஒப்புக்கொண்ட குத்தகைதாரர்களின் குத்தகை புதுப்பிக்கப்படும்...
9. புதிய வாடகையை ஒப்புக்கொள்ள மறுத்த குத்தகைதாரர்களின் குத்தகை ரத்து செய்யப்பட்டு - பொது ஏலம் மூலம் குத்தகை மீண்டும் வழங்கப்படும்...
இவ்வாறு நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, குத்தகை - நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான கடைகள், நிலங்கள் ஆகியவற்றை குத்தகைக்கு விடுதல் - குத்தகையை புதுப்பித்தல் குறித்த பின்வரும் அரசாணையை அவர் கூட்டத்தில் கலந்துகொண்டோரிடம் அளித்தார்.
விதிமுறைகள்:
1. முதல் தடவையாக குத்தகைக்கு விடப்படும்போது நகராட்சியின் அசையா சொத்துக்கள் அனைத்தும் பொது ஏலத்தின் மூலமாக குத்தகைக்கு விடப்பட வேண்டும்.
2. நகராட்சிக் கடைகள், ஒரே நேரத்தில் மூன்றாண்டு காலத்திற்குக் குத்தகைக்கு விடப்படலாம். மூன்று ஆண்டு கால அளவு முடிவடைவதன் பேரில், அக்குத்தகை தன்னியல்பாகவே (automatically) புதுப்பிக்கப்படும். இவ்வாறாக ஒன்பதாண்டுகள் வரை புதுப்பிக்கப்படும்.
3. மூன்றாண்டுக்கு ஒரு முறை குத்தகைத் தொகை 15 சதவீதம் உயர்த்தப்படும்.
4. ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்னர், குத்தகை வாடகை மறுமதிப்பீடு செய்யப்படவேண்டும்.
5. தற்போதைய குத்தகைதாரருக்கு அப்போதைய அங்காடி மதிப்பின் அடிப்படையிலான திருத்தியமைக்கப்பட்ட குத்தகை வீதத்தில், மேற்கொண்டு 9 ஆண்டுகளுக்கு குத்தகை கால் அளவை நீட்டித்து கொள்ள முன்னுரிமை அளிக்கலாம்.
6. அவர் ஒப்புக்கொள்ளவில்லையானால், அச்சொத்து பொது ஏலத்தின் மூலம் குத்தகைக்கு விட வேண்டும்.
மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை செய்யவேண்டியவை:
குத்தகை மூன்றாண்டு காலம் முடிந்து தன்னியல்பாகவே புதுப்பிக்கப்படும்போது கீழ்க்காணும் விஷயங்கள் செய்யப்படவேண்டும்:
1. வாடகை 15 சதவீதம் உயர்த்தப்படவேண்டும்.
2. புதுப்பித்தல் கட்டணம் கீழே விவரிக்கப்பட்டுள்ள வகையில் பெறப்படவேண்டும்.
ஒன்பதாண்டுகளுக்கு ஒரு முறை செய்ய வேண்டிவை:
1. ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்னர், குத்தகை வாடகை மறுமதிப்பீடு செய்யப்படவேண்டும்.
2. தற்போதைய குத்தகைதாரருக்கு அப்போதைய அங்காடி மதிப்பின் அடிப்படையிலான திருத்தியமைக்கப்பட்ட குத்தகை வீதத்தில், மேற்கொண்டு 9 ஆண்டுகளுக்கு குத்தகை கால் அளவை நீட்டித்து கொள்ள முன்னுரிமை அளிக்கலாம்.
3. அவர் ஒப்புக்கொள்ளவில்லையானால், அச் சொத்து பொது ஏலத்தின் மூலம் குத்தகைக்கு விட வேண்டும்.
பெயர் மாற்றம்:
குத்தகைதாரரை தவிர பிறர் அனுபவித்து வந்தால் - ஒரு முறை சலுகையாக, தற்போது அனுபவிப்பவர் பெயருக்கே - குத்தகையை மாற்றலாம்
1. விண்ணப்பதாரர் (தற்போது அனுபவித்து வருபவர்) 12 மாதங்களுக்குரிய மாதந்திர குத்தகை தொகைக்கு சமமான தொகையை முன்பணமாகச் (12 Months Advance) செலுத்த வேண்டும்.
2. மேலும், கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொகைக்கு குறையாமல், கூடியாதாக 12 மாத வாடகைக்கு சமமான தொகையை பெயர் மாற்ற கட்டணமாக (Name Change Fee) செலுத்த வேண்டும் (whichever is higher)
வாரிசுதாரருக்கு பெயர் மாற்றம்:
குத்தகைதாரர் காலமாகிவிட்டால் - அவரின் வாரிசுகளான கணவன் அல்லது மனைவி அல்லது குழந்தைகள் பெயருக்கு குத்தகையை மாற்றலாம்
1. வாடகை பாக்கிகள் ஒன்று இல்லாமல் முழுவதும் முதலில் செலுத்த வேண்டும்.
2. உள்ளாட்சி மன்றம் - அவ்வப்போது நிர்ணயிக்கும் குத்தகைத் தொகையைச் செலுத்த ஒப்புதல் அளிக்க வேண்டும்.
3. பெயர் மாற்றம் கட்டணமாக ரூபாய் 500 செலுத்த வேண்டும்.
இவ்வாறு அந்த அரசானை அமைந்துள்ளது.
நகர்மன்றத் தலைவர் தெரிவித்த கருத்துக்களைக் கேட்டறிந்த வணிக வளாக குத்தகைதாரர்கள் மற்றும் கடைக்காரர்கள் இதுகுறித்து தமக்குள் கலந்தாலோசித்துவிட்டு விரைவில் கருத்து தெரிவிப்பதாகத் தெரிவித்தனர்.
கூட்டத்தில் கலந்துகொண்ட பலர், வணிக வளாகக் கடைகளைக் குத்தகைக்கு எடுத்தோரிடம் உள் வாடகை அடிப்படையில் கடை நடத்தி வருவோர் என்பது குறிப்பிடத்தக்கது.
இக்கூட்டத்தில், கே.வி.ஏ.டி.முத்து ஹாஜரா, ஏ.ஹைரிய்யா, எஸ்.எம்.பி.பத்ருல் ஹக், எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், கே.ஜமால், எஸ்.எம்.சாமு ஷிஹாப்தீன், இ.எம்.சாமி ஆகியோரும் கலந்துகொண்டனர். |