காயல்பட்டினத்தில், அரசு உத்தரவின்படி ப்ளாஸ்டிக் சாலை அமைக்கப்படவுள்ள இடங்களை, ப்ளாஸ்டிக் சாலை தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்த - மதுரை தியாகராஜர் கல்லூரியின் வேதியல் துறை தலைவர் டாக்டர் வாசுதேவன் நேரில் ஆய்வு செய்தார்.
03.05.2012 அன்று (நேற்று) காலையில், காயல்பட்டினம் நகர்மன்றத்தில் நடைபெற்ற கருத்தரங்கத்தைத் தொடர்ந்து, நண்பகல் 12.00 மணியளவில், காயல்பட்டினம் வண்ணாக்குடி தெரு, அருணாச்சலபுரம் மையவாடி, கொச்சியார் தெரு ஆகிய - ப்ளாஸ்டிக் சாலை அமைக்கப்படவுள்ள பகுதிகளை அவர் காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதாவுடன் சென்று பார்வையிட்டார்.
அங்கு செய்யப்பட வேண்டிய செயல்திட்ட வழிமுறைகள் குறித்து காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் அஷோக் குமார், தொழில்நுட்ப உதவியாளர் செந்தில் குமார், ஒப்பந்தக்காரர் தலவாணிமுத்து ஆகியோருக்கு அவர் விளக்கினார்.
கொச்சியார் தெருவிற்கு வந்த டாக்டர் வாசுதேவனை அப்பகுதியின் நகர்மன்ற உறுப்பினர் எம்.எம்.டி.பீவி ஃபாத்திமா என்ற பெத்தாதாய் வரவேற்றார்.
நகர்மன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் மற்றும் பொதுநல ஆர்வலர்கள் இந்நிகழ்வின்போது உடனிருந்தனர். |