காயல்பட்டினம் நகராட்சியின் 14ஆவது வார்டுக்குட்பட்ட எல்.ஆர்.நகர், பாஸ் நகர், லெக்ஷ்மிபுரம், நியூ காலனி ஆகிய பகுதிகளுக்கு சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்யக்கோரி, 03.05.2012 வியாழக்கிழமையன்று, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில், காயல்பட்டினம் நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாதர் சங்க மாவட்ட தலைவர் த.கலைச்செல்வி தலைமை தாங்கினார். கிளைச் செயலாளர்களான பிராட்டி, சந்திரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஒன்றியக் குழு மாநில உறுப்பினர் பே.பூமயில், சி.ராமலட்சுமி, க.இசக்கியம்மாள், காயல்பட்டினம் நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் திருத்துவராஜ், பன்னீர் செல்வம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
14ஆவது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் 3 நாட்களுக்கு ஒருமுறையேனும் சீரான குடிநீர் வினியோகம், எரியாத தெருவிளக்குகளை எரியச் செய்தல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசிய அவர்கள், அதிக குடியிருப்புகளைக் கொண்ட தமது பகுதியில் இதுவரை சாலை போடப்படாத இடங்களில் புதிய சாலை கோரி பல ஆண்டுகளாகியும் இன்று வரை செய்து தரப்படாத நிலையில், ஓரிரு குடியிருப்புகளைத் தவிர - மக்கள் குடியிருப்பே இல்லாத சில தெருக்களுக்கு ஏற்கனவே போடப்பட்ட சாலைகளை மீண்டும் மீண்டும் போட்டுக்கொடுப்பது பாரபட்சமென தாம் கருதுவதாகத் தெரிவித்தனர்.
பின்னர், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா, நகராட்சி ஆணையர் அஷோக் குமார் ஆகியோரிடம் தமது கோரிக்கைகளை முறையிட்டதுடன், கோரிக்கைகளடங்கிய மனுவை நகர்மன்றத் தலைவரிடம் அளித்தனர்.
நகர பொதுமக்கள் அனைவரின் அடிப்படை வசதிகளான குடிநீர் வினியோகம், தெரு விளக்கு பராமரிப்பு, சாலை வசதிகள் குறித்து அடிப்படையிலிருந்தே சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பொதுமக்களுக்கு குறைவில்லா சேவையைத் தர அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றும் அப்போது நகர்மன்றத் தலைவர் அவர்களிடம் தெரிவித்தார். |