காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி மாணவர்கள் அப்பள்ளி நிர்வாகத்தின் ஏற்பாட்டில் கல்விச் சுற்றுலா சென்று வந்துள்ளனர். இதுகுறித்து, அப்பள்ளி நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
இறையருளால் எமது முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி மாணவர்கள் பள்ளி நிர்வாகத்தின் ஏற்பாட்டில் கல்விச் சுற்றுலா சென்று வந்துள்ளனர்.
25.09.2012 அன்று இரவு காயல்பட்டினத்திலிருந்து புறப்பட்ட சுற்றுலாக் குழுவினர் மேட்டுப்பாளையம் ப்ளாக் தண்டனர் வாட்டர் தீம் பார்க், குன்னூர் சிம்மன்ஸ் பார்க், ஊட்டி தொட்டபெட்டா சிகரம், பொட்டானிக்கல் கார்டன் ஆகிய இடங்களை உற்சாகமாக சுற்றிப் பார்த்து, படகு சவாரி உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களையும் அனுபவித்தனர்.
குறிப்பாக, ஊட்டியிலுள்ள தேயிலைத்தூள் தயாரிக்கும் தொழிற்சாலைக்குச் சென்று, அது எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்பதை நேரில் பார்த்து அறிந்துகொண்டனர்.
இச்சுற்றுலாக் குழுவில் 52 மாணவர்கள் இடம்பெற்றிருந்தனர். அவர்களை பள்ளியின் துணைச் செயலாளர் கே.எம்.டி.சுலைமான், தலைமையாசிரியர் ஸ்டீஃபன், ஆசிரியர் பஷீருல்லாஹ், காவலர் முத்து சாமி ஆகியோரடங்கிய பொறுப்பாளர் குழுவினர் வழிநடத்திச் சென்றனர்.
திட்டமிட்ட படி அனைத்து சுற்றுலாத் தளங்களையும் பார்வையிட்ட பின்னர், 28.09.2012 அன்று காலையில் அனைவரும் காயல்பட்டினம் திரும்பினர். இதுபோன்ற சுற்றுலா ஏற்பாடுகள் தமக்கு பெருமகிழ்ச்சியையும், கல்வியில் ஆர்வத்தையும், புதிய உற்சாகத்தையும் அளித்துள்ளதாகவும், ஆண்டுதோறும் இதுபோன்ற சுற்றுலா ஏற்பாடு செய்யுமாறும் இச்சுற்றுலாவில் கலந்துகொண்ட 52 மாணவர்களும் தெரிவித்தனர்.
இன்பச் சுற்றுலா காலத்திலும், மாணவர்கள் ஐவேளை தொழுகையை ஜமாஅத்துடன் - கூட்டாக நிறைவேற்றியமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு, முஹ்யித்தீன் மெட்ரகுலேஷன் மேனிலைப்பள்ளி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |