தூத்துக்குடி மாவட்டத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாகவும், வாக்காளர் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்றம் செய்ய மனு அளிக்கலாம் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
தூத்துக்குடி மாவட்டத்திற்குட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் இன்று (01.10.2012) சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்களால், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
மேற்கண்ட வரைவு வாக்காளர் பட்டியல், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் அனைத்து வாக்குச் சாவடிகள் அமைந்துள்ள பள்ளி / கட்டிடத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட வாக்காளர் பட்டியலில், 18 வயது நிரம்பிய வாக்காளர் எவரேனும் விடுபட்டிருப்பின் / தவறுகள் இருப்பின், உடனடியாக உரிய படிவத்தில் அவர் வசித்திடும் பகுதிக்குரிய வாக்குச் சாவடியில் நியமனம் செய்யப்பட்டுள்ள வரையறுக்கப்பட்ட அலுவலரிடம் மனு செய்திட கேட்டுக்கொள்ளப் படுகிறது.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் செய்திடும் பணிக்கு இன்று 01.10.2012 முதல் 31.10.2012 வரை மனுக்கள் - தூத்துக்குடி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து சட்டமன்றத் தொகுதியின் வாக்குச் சாவடிகளிலும் பெறப்படுகின்றன.
மேலும், வருகிற 07.10.2012, 14.10.2012, 21.10.2012 ஆகிய மூன்று விடுமுறை (ஞாயிற்றுக்கிழமை) நாட்களிலும் சிறப்பு முகாம் நடத்தி, அனைத்து வாக்குச் சாவடிகளிலும் மனுக்கள் பெற்றிட தேர்தல் ஆணையத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே, 01.01.2013 அன்று 18 வயது நிரம்பிய வாக்காளர்கள் அனைவரும் தமது பெயரை வாக்காளர் பட்டியலில் தவறாமல் சேர்த்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |