காயல்பட்டினம் நகரின் ஏழை-எளியோர் நலத்திட்ட உதவிகளுக்காக ரூ.2,40,400 தொகை வழங்கப்பட்டுள்ளதாக ரியாத் காயல் நற்பணி மன்றத்தின் செயற்குழுவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
எல்லாம் வல்ல நாயன் அல்லாஹ்வின் திருப்பெயரால்.
ரியாத் காயல் நற்பணி மன்றத்தின் 31ஆவது செயற்க்குழு கூட்டம் செப்டம்பர் 21-09-2012 வெள்ளிக்கிழமை பிற்பகல், ஹாஃபிழ் எம்.ஏ.ஷேக் தாவூத் இத்ரீஸ் இல்லத்தில் நடைபெற்றது.
ஜும்ஆ தொழுகைக்குப் பின் துவங்கிய செயற்குழு வழமை போல் விருந்துபசரிப்புடன் ஆரம்பமானது. கூட்டத்திற்கு எமது மன்றத்தின் ஆடிட்டர் ஜனாப் பி.எம்.எஸ்.முஹம்மது லெப்பை அவர்கள் தலைமை வகித்தார்.
மதியம் 02.00 மணியளவில் கூட்ட நிகழ்வுகள் துவங்கின. ஹாஃபிழ் பி.எஸ்.ஜே.ஜெய்னுல் ஆப்தீன் அவர்கள் கிராஅத் ஓதி நிகழ்வுகளைத் துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து எமது மன்றத்திற்கு வந்திருக்கும் வேண்டுகோள் கடிதங்கள் வாசிக்கப்பட்டு நிதியொதுக்கீடு செய்யப்பட்டது.
சென்ற ரமழானில் நடைபெற்ற பொதுக்குழுவிற்கும் இந்த செயற்குழுவிற்கும் இடையே வழங்கப்பட்ட நிதி மொத்தம் 2,40,400 ரூபாய். விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
மருத்துவம் - 1,47,400
கல்வி - 60,000
சிறு தொழில் - 8,000
பிற உதவிகள் - 25,000
குறிப்பு - மன்றத்திற்கு உதவிகேட்டு வரக்கூடிய அவசர தேவை கடிதங்களை அடுத்த கூட்டம் வரை தாமதிக்காமல் மென்நகல் (Scan) எடுத்து அவ்வப்போது செயற்குழு உறுப்பினர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வேண்டிய அனுசரனைகள் மற்றும் ஒப்புதல்கள் பெறப்படுகிறது.
இக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - நபிகளாரை அவமதித்து எடுக்கப்பட்ட திரைப்படத்திற்குக் கண்டனம்:
இறைத்தூதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களைக் கேலி செய்து - INNOCENCE OF MUSLIMS என்ற பெயரில் திரைப்படம் எடுத்தவர், அதற்கு ஒத்துழைத்தவர்கள், அப்படி எடுத்ததை தனிநபர்களின் கருத்துரிமை என்று கூறி அவர்களைக் கண்டிக்காத அமெரிக்க அரசு மற்றும் ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றை இந்த மன்றம் வன்மையாக கண்டிக்கின்றது.
தீர்மானம் 2 - ஜக்வா தலைவர் மறைவுக்கு இரங்கல்:
ஜெய்ப்பூர் கா.ந.மன்ற (ஜக்வா) தலைவர், மரியாதைக்குரிய ஹாஜி பிரபு எஸ்.ஏ.முஸ்தஃபா கமால் அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. ஜெய்ப்பூர் காயல் நல மன்ற (ஜக்வா) அங்கத்தினர்களுக்கும், அவர்களின் குடும்பத்தார் அனைவருக்கும் இரங்கலைத் தெரிவிக்கப்பட்டது.
அல்லாஹ் அவர்களின் மண்ணறையையும் மறுமைவாழ்வையும் பிரகாசமாக்கி வைப்பானாக. ஆமீன்.
தீர்மானம் 3 - “வாழ்நாள் சாதனையாளர்” விருது பெற்ற டாக்டர் தம்பிக்கு வாழ்த்து:
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் இந்த ஆண்டிற்கான வாழ்நாள் சாதனையாளர் (LIFETIME ACHIEVEMENT AWARD) விருது பெற்ற பிரபல குழந்தைகள் மருத்துவர்,மரியாதைக்குரிய Dr.முஹம்மது தம்பி MD(Pead),DCH அவர்களுக்கு எமது வாழ்த்தினை தெரிவிக்கப்பட்டது.
தீர்மானம் 4 - “ஷிஃபா”வுக்கு ஆதரவு:
புதிதாக நமது ஊரில் உருவாக இருக்கும் ஷிஃபா (SHIFA) என்ற ஒருங்கிணைந்த மருத்துவ அமைப்பிற்கு எங்கள் மன்றத்தின் முழு ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்குவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இறுதியாக துஆவுடன் மாலை 04.00 மணியளவில் கூட்டம் சிறப்புற நிறைவுற்றது, அல்ஹம்துலில்லாஹ்.
இவ்வாறு, ரியாத் காயல் நற்பணி மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
தாவூத் இத்ரீஸ்
துணைத் தலைவர்
காயல் நற்பணி மன்றம்
ரியாத் - சஊதி அரபிய்யா |