மழலைக் குழந்தைகளுக்காக தமிழக அரசின் சார்பில் மாநிலம் முழுவதும் அங்கன்வாடி பள்ளிகள் நடத்தப்பட்டு வருகிறது. காயல்பட்டினத்தில் வெவ்வேறு பகுதிகளில் சுமார் 20 அங்கன்வாடி பள்ளிகள் உள்ளன. அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான குழந்தைகள் இப்பள்ளிகளில் பயின்று வருகின்றனர்.
காயல்பட்டினம் சித்தன் தெருவில் நடைபெறும் அங்கன்வாடி பள்ளிக்கூடத்திற்கு, நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் - இன்று காலை 10.00 மணியளவில் கல்வி பயிற்றுப் பொருட்களை அன்பளிப்பாக வழங்கினார்.
இப்பள்ளி இயங்கி வரும் சித்தன் தெருவை உள்ளடக்கிய 06ஆவது வார்டு உறுப்பினர் ஏ.கே.முஹம்மத் முகைதீன், பள்ளியில் பயிலும் மழலையருக்கு இனிப்புகளை வழங்கினார்.
பின்னர் அவர்களிடம் பேசிய பள்ளி ஆசிரியை மற்றும் பொறுப்பாளர் ஆகியோர், மிகக் குறுகிய அறைக்குள் இப்பள்ளி இயங்குவதால் குழந்தைகளை விளையாடச் செய்ய இயலாத சூழல் உள்ளதாகவும், அதற்கேற்ற வாடகை இடத்தைப் பெற்றுத் தருமாறும் கோரினர்.
அப்போது பேசிய நகர்மன்றத் தலைவர், நகரில் அங்கன்வாடி பள்ளிகளுக்கு இடம் தந்தால் அரசு கட்டிடம் கட்டித் தரும் என அறிவிப்பு வந்துள்ளதாகவும், அதற்கான அனைத்து முயற்சிகளும் விரைவில் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.
06ஆவது வார்டில் தகுதியான ஓர் இடத்தை விரைவில் கண்டறிந்து தெரிவிப்பதாகவும், அதற்கு முன்பாக இப்பள்ளிக்குத் தேவையான வாடகைக் கட்டிடத்தைப் பெற்றுத் தரவும் முயற்சிப்பதாகவும் நகர்மன்ற உறுப்பினர் ஏ.கே.முஹம்மத் முகைதீன் தெரிவித்ததுடன், நகர்மன்றத் தலைவரால் தற்போது வழங்கப்பட்டுள்ள கல்வி பயிற்றுப் பொருட்கள் போல் இன்னும் இரண்டு பள்ளிகளுக்கு தன் செலவில் பயிற்றுப் பொருட்கள் வழங்குவதாகவும் அவர் நகர்மன்றத் தலைவரிடம் தெரிவித்தார். |